புதுச்சேரி

அரசு ஆஸ்பத்திரியை சூறையாடிய குடிமகன்கள்- நர்சுகள், ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

Published On 2025-02-08 10:54 IST   |   Update On 2025-02-08 10:54:00 IST
  • குடிபோதையில் சத்தியசீலனுக்கும் அந்த கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி காலாப்பட்டு அருகே தமிழக பகுதியான கீழ்புத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சத்தியசீலன். இவர் அப்பகுதியை சேர்ந்த சிலருடன் ஒதுக்குபுறமான இடத்தில் மது குடித்து கொண்டிருந்தார்.

அப்போது குடிபோதையில் சத்தியசீலனுக்கும் அந்த கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதனையறிந்த சத்தியசீலனின் தாய் உஷா சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது அவரையும் அந்த கும்பல் தாக்கியது. இந்த மோதலில் சத்தியசீலனுக்கும் அவரது தாய் உஷாவுக்கும் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து சத்தியசீலனின் நண்பர்கள் அவர்களை காலாப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு நர்சுகள் மற்றும் ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து கொண்டிருந்தனர்.

அப்போது குடிபோதையில் இருந்த சத்தியசீலனின் நண்பர்கள் நர்சுகளிடமும், ஆஸ்பத்திரி ஊழியர்களிடமும் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் அவர்கள் ஆஸ்பத்திரி முன் பக்க கண்ணாடிகளையும், பொருட்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதனை கண்டு நர்சுகள், ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

தகவல் அறிந்த காலாப்பட்டு போலீசார் 2 பேர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களையும் அந்த கும்பல் தாக்க முயற்சித்தது. இதையடுத்து கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

ரகளையில் ஈடுபட்டவர் ளை சமாதானம் செய்து காயமடைந்த சத்தியசீலன் மற்றும் அவரது தாய் உஷா ஆகியோரை மேல் சிகிச்சைக்காக அனுமதிக்க புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அந்த ஆம்புலன்சில் சத்தியசீலனின் நண்பர்களும் ஏறிக் கொண்டனர்.

ஆம்புலன்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருக்கும் போது அவர்கள் டிரைவரிடம் வாக்குவாதம் செய்து ஆம்புலன்சை நிறுத்தும்படி தகராறு செய்தனர்.

இதையடுத்து டிரைவர் ஆம்புலன்சை நிறுத்தினார். உடனே சத்தியசீலன் மற்றும் அவரது நண்பர்கள் ஆம்புலன்சில் இருந்து இறங்கி தப்பியோடி விட்டனர்.

பின்னர் காயமடைந்த உஷா மட்டும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தினால் காலாப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News