புதுச்சேரி

திருநள்ளாறு கோவில் பெயரில் கோடிக்கணக்கில் மோசடி - பக்தர்கள் அதிர்ச்சி

Published On 2025-02-09 09:48 IST   |   Update On 2025-02-09 10:00:00 IST
  • வெப்சைட்டில் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டவரும் ஆன்லைனில் பணம் செலுத்தி ஏமாறி இருப்பதாக கூறப்படுகிறது.
  • கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், திருநள்ளாறு போலீசில் புகார் செய்தார்.

காரைக்கால்:

காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பெயரில் மீண்டும் போலி வெப்சைட் உலா வருவதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதுவை மாநிலம் காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் தர்ப்பாரண்னேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள் பாலித்து வருகிறார்.

இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வருகை தர முடியாத பக்தர்கள் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெப்சைட்டில் சென்று, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி தேவையான அர்ச்சனை, அபிஷேகங்களை செய்து பிரசாதங்களை பெற்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு கோவில் வெப்சைட் போலவே போலியான வெப்சைட் ஒன்று உருவானதையடுத்து, காரைக்கால் மாவட்ட கிரைம் போலீசார் கண்டுபிடித்து அதனை சரி செய்தனர். இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு மீண்டும் கோவில் பெயரில் போலியான வெப்சைட் உலா வருவதாக கூறப்படுகிறது. அதில் பக்தர்களை கவரும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

இந்த வெப்சைட்டில் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டவரும் ஆன்லைனில் பணம் செலுத்தி ஏமாறி இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்களும் வெளிநாடான ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாட்டை சேர்ந்த பக்தர்களும் கோடிக்கணக்கில் பணம் கட்டி ஏமாந்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் உள்ளூரை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், அதிகாரிகளும் தொடர்பு இருப்பது தெரியவருகிறது.

குறிப்பாக சனிக்கிழமை நடைபெறும் ஆசூஷா அர்ச்சனைக்கு இந்தியர்களுக்கு ரூ. 2750 மற்றும் வெளிநாட்டினருக்கு 82 டாலர்களும் வசூல் செய்தது தெரிய வந்தது. இதே போல் மாதந்தோறும் நடைபெறும் சவர்சனம் அர்ச்சனைக்கு இந்தியர்களுக்கு ரூ.5001 மற்றும் வெளிநாட்டினருக்கு 151 டாலர்களும் வசூல் செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், திருநள்ளாறு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலி வெப்சைட்டில் ஏமாந்த பக்தர்கள் அல்லது கோவில் நிர்வாகம் போலீசாரிடம் புகார் கொடுக்கும் பட்சத்தில் ஏமாந்தவர்கள் பட்டியல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் போலி வெப்சைட் உலா வருவது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News