search icon
என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • நந்தியம்பெருமானுக்கு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று மகரசங்கராந்தி விழா நடத்தப்படுவது வழக்கம்.
    • நந்தி சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் உலக புகழ் பெற்றது . இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நாள்தோறும் பெரிய கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த கோவிலில் மிகப்பெரிய நந்தியம்பெருமான் சிலை உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி 20 டன் எடை கொண்டது. இந்த நந்தியம்பெருமானுக்கு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று மகரசங்கராந்தி விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று மகர சங்கராந்தி பெருவிழா நடந்தது.

    இதனை முன்னிட்டு காலையில் நந்தியம் பெருமானுக்கு சுமார் 2 டன் எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், சவ்சவ், உருளைக்கிழங்கு, வாழைக்காய், பாகற்காய், கேரட், மிளகாய், நெல்லிக்காய், வெண்டைக்காய் போன்ற அனைத்து வகையான காய்களாலும், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா உள்பட பல வகையான பழங்கள், பால்கோவா உள்பட பல்வேறு வகையான இனிப்புகள், பல்வேறு வகையான மலர்களாலும் நந்தியம்பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மகா நந்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 16 வகையான தீபாராதனைகள் காட்டப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நந்தி சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவற்றின் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுத்துணி போர்த்தப்பட்டு கோ-பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோ-பூஜை செய்தனர்.

    பின்னர் நந்திக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

    • யுஜிசி புதிய வழிகாட்டுதல் அறிவிப்பு நகலை மாணவர்கள் தீயிட்டு எரித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
    • போராட்டத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் தேடுதல் குழுவை கவர்னரே நியமிக்கும் யுஜிசி அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று பல்கலைக்கழகம், கல்லூரிகளில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன்படி தஞ்சை அரசு மன்னர் சரபோஜி கல்லூரியில் இன்று காலை இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதற்கு மாநில செயலாளர் அரவிந்த்சாமி தலைமை தாங்கினார். கிளை தலைவர் ரஞ்சித் முன்னிலை வகித்தார்.

    அப்போது யுஜிசி புதிய வழிகாட்டுதல் அறிவிப்பு நகலை மாணவர்கள் தீயிட்டு எரித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். உடனடியாக போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    இந்த போராட்டத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நகலை தீயிட்டு மாணவர்கள் எரித்த சம்பவம் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

    • 108 திவ்ய தேசங்களில் 3-வது தலமாக போற்றப்படுகிறது.
    • நாலாயிர திவ்ய பிரபந்தம் இயற்றப்பட்ட தலம்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    'பூலோக வைகுண்டம்' என போற்றப்படும் இக்கோவிலில் 'சொர்க்க வாசல்' தனியாக கிடையாது என்பது தனிச்சிறப்பாகும். இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் 3-வது தலமாக போற்றப்படுகிறது. மேலும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்ய பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா, சித்திரை பெருவிழா ஆகியவை வெகு விமரிசை யாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா இன்று (திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


    முன்னதாக உற்சவர் சாரங்கபாணி சுவாமி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து, கொடிமரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு, பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள், நாதஸ்வர மேளதாளம் முழங்க கொடிக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டு, கருடாழ்வார் உருவம் வரையப்பட்ட கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா நடைபெறும்.முக்கிய நிகழ்வாக வருகிற 10-ந்தேதி வைகுண்ட ஏகாதசி அன்று சிறப்பு தரிசனமும், 14-ந்தேதி தைப்பொங்கல் தினத்தன்று தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் சிவசங்கரி, உதவி ஆணையர் சாந்தா மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • மழை புயலால் பயிர்களின் பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.
    • தமிழக அரசே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) இன்று (வெள்ளிக்கிழமை) வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு, கண்காட்சியை தமிழக வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு மாதந்தோறும் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் அளவிற்கு திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது.

    வடிகால் வாய்க்கால், கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சரே நேரடியாக ஆய்வு செய்தார். இதனால் மழை புயலால் பயிர்களின் பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளில் பயிர்கள் பாதிப்புக்காக ரூ.1,023 கோடி அளவிற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழை புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது. 4 வகையான அளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப நிவாரணம் வழங்கப்படும்.

    மத்திய அரசு நாம் கேட்ட நிவாரணத்தை வழங்கவில்லை.

    இருந்தாலும், தமிழக அரசே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று அமைச்சர் துரைமுருகன் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. நாம் பாதிப்புக்கு நிதி கேட்டால் அதற்கு மத்திய அரசு இதுபோல் ரெய்டு நடத்தி நெருக்கடி கொடுக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு சமூகத்தை குறிப்பிட்டு ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல், அமைச்சர்களின் நடவடிக்கைகளால் விமர்சனங்களை பெற்று வருகிறது. மகளிர் விடியல் பயணம் தொடர்பாக பேசும்போது அமைச்சர் பொன்முடி 'ஓசி பயணம்' என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரைப்பட நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம் , கௌதமி ஆகியோர் குறித்து திமுகவைச் சேர்ந்த சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும் பின்பு அதற்காக மன்னிப்பு கேட்டதும் நடைபெற்றது.

    சமீபத்தில், ஒரு சமூகத்தை குறிப்பிட்டு ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில், தஞ்சாவூரில் மத்திய அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உதவியாளரை ஒருமையில் பேசியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொதுமேடையில் அமைச்சர் தனது உதவியாளரை ***மாடா நீ என திட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது. 

    • மாணவர்களின் நலனில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய வேண்டாம்.
    • கவர்னரின் செயல்பாடு என்ன என்பதை இந்தியா உற்று நோக்குகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே இராராமுத்திரைக் கோட்டை ஊராட்சியில் இன்று புதிய பொது விநியோக கட்டிடத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பல்கலை கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னரின் செயல்பாடு என்ன என்பதை இந்தியா உற்று நோக்குகிறது. ஒவ்வொரு மாநில கவர்னர்களுக்கும் உரிமை என்ன, கடமை என்ன என்பதை அரசியலமைப்பு சட்டம் பல்வேறு நெறிமுறைகளில் சொல்லி இருக்கிறது. அதை மீறும் வகையில் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது.

    மூன்று உறுப்பினர்கள் தேர்வுக் குழு என்பதை நான்காக அதிகரிப்பதன் மூலம் அதை செயல்படாமல் தடுப்பது கவர்னரின் நோக்கமாக உள்ளது. இது ஒருபோதும் நிறைவேறாது. முறைப்படி எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டு துணைவேந்தர் பணி நியமனம் செய்யபடும்.

    மாணவர்களின் நலனில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய வேண்டாம். மாணவர்கள் நலன் கருதி சிந்திக்கின்ற செயல்படுகின்ற முதலமைச்சர் நமது தமிழக முதலமைச்சர் மட்டும்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுமி விதுலா ஸ்ரீ சென்னையில் உள்ள தன் பாட்டி வீட்டில் தங்கி இருந்தார்.
    • சிறுமியின் திறமை டிவைன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் மருங்குளம் கிராமத்தை சேர்ந்த விமல்ராஜ்-விஜயலட்சுமி தம்பதியின் மகள் விதுலா ஸ்ரீ (வயது 2).

    இந்த நிலையில் சிறுமி விதுலா ஸ்ரீ சென்னையில் உள்ள தன் பாட்டி வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அவரை அவரது பாட்டி அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவிகளுக்கு பரத கலை ஆசிரியை ஒருவர் பரதம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

    இதை பார்த்த சிறுமி விதுலா ஸ்ரீ தானாகவே பரதம் ஆட தொடங்கி உள்ளார். சிறுமியிடம் இருந்த திறமையை அந்தப் பரத நாட்டிய ஆசிரியை மட்டுமல்லாமல் கோவிலில் கூடி இருந்த அனைவரும் வியந்து பாராட்டினர். இந்த சிறிய வயதில் இவ்வளவு பெரிய திறமையா என மனதார பாராட்டினர்.

    இதையடுத்து விதுலா ஸ்ரீக்கு திருப்புகழ் பாடலுக்கு பரதம் ஆட அந்த ஆசிரியை கற்றுக் கொடுத்தார்.

    பரத முத்திரைகள், சுலோகங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கற்று கொடுத்தார். இதனை கற்பூரம் போல் உடனே பற்றிக் கொண்ட சிறுமி விதுலா ஸ்ரீ திருப்புகழ் பாடலுக்கு பரதம் ஆடி கற்றுக் தேர்ந்தார்.

    இதனை தொடர்ந்து சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிறுமி விதுலாஸ்ரீ பங்கேற்று திருப்புகழ் பாடலுக்கு பரதம் ஆடியபடியே பரதமுத்திரை மற்றும் சுலோகங்கள் கூறி சாதனை படைத்தார்.

    சிறுமியின் திறமை டிவைன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. சாதனை படைத்த சிறுமியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

    • மேயர் சரவணனிடம் கேள்வி எழுப்பினர்.
    • தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் மேயர் சரவணனை சூழ்ந்து கொண்டனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலருக்கும் காங்கிரஸ் மேயர் சரவணனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி தரையில் விழுந்து மேயர் உருண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேயர் சரவணன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் குட்டி தட்சிணாமூர்த்தி, திவ்யபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் செல்வம், ம.தி.மு.க. கவுன்சிலர் பிரதீபா உள்ளிட்ட பலர் தங்கள் பகுதியில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், அதனை தீர்வு செய்யும்படியும் மேயர் சரவணனிடம் கோரிக்கை வைத்தனர்.

    காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் அய்யப்பன் பேசும்போது, சுதா எம்.பி., பொதுமக்களை சந்திப்பதற்காக மாநகராட்சி ஏற்பாட்டில் அலுவலகம் அமைத்து தரவேண்டும் என மேயருக்கு தபால் கொடுத்துள்ளார். இந்த தபாலிற்கு மேயர் ஏன் பதில் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த மேயர் சரவணன் அது சாதாரண கடிதம். எனக்கு தபால் முறையாக பதிவு தபாலில் வரவில்லை. ஆகவே நான் அதற்கு பதில் கூற முடியாது என்றார்.

    இதனால் ஆவேசம் அடைந்த கவுன்சிலர் அய்யப்பன், சுதா எம்.பி., மேயர் சரவணன், நான்(அய்யப்பன்) ஆகிய 3 பேருமே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவா்கள். நாங்கள் 3 பேரும் ஒரே கட்சியில் இருந்தும் மேயர் சரவணன், சுதா எம்.பி.யின் வேண்டுகோளை நிராகரிக்கிறார். எனவே இதனை கண்டித்து நான் வெளிநடப்பு செய்கிறேன் என்று கூறி வெளிநடப்பு செய்தார்.

    இந்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட தி.மு.க. கவுன்சிலர்கள், மாநகராட்சி செயல்திட்ட பொருளின் கோப்புகள் எங்கு உள்ளது. அதில் கையெழுத்திட்டீர்களா? என மேயர் சரவணனிடம் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து மற்ற உறுப்பினா்களும் அதே கேள்வியை எழுப்பினர்.

    இதனால் கோபம் அடைந்த மேயர் சரவணன், கோப்புகள் என்னிடம் தான் இருக்கின்றன. இந்த கூட்டம் நாளை ஒத்திவைக்கப்படுகிறது. அந்த கூட்டத்தில் கோப்புகளை நான் கொண்டு வந்து காட்டுகிறேன் என்றார்.

    இதனை ஏற்றுக்கொள்ளாத மற்ற கவுன்சிலர்கள், கோப்புகளை காட்டிவிட்டு தான் நீங்கள் இங்கிருந்து செல்ல வேண்டும் என்றனர்.

    உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறிய மேயர் சரவணன், தனது நாற்காலிக்கு பின்புறம் உள்ள ஓய்வு அறையை நோக்கி வேகமாக சென்றார்.

    இதனை பார்த்த கவுன்சிலர் குட்டி தட்சிணாமூர்த்தி விரைந்து சென்று ஓய்வு அறைக்குள் மேயர் சரவணனை செல்ல விடாமல் கதவை மூடி தடுத்தார்.

    தொடர்ந்து குட்டி தட்சிணாமூர்த்தியின் தலைக்கு மேலே தாவிச் சென்ற மேயர் சரவணன், ஓய்வு அறையின் கதவை தள்ளியபடி செல்ல முயன்றார். இதனால் மற்ற தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் மேயர் சரவணனை சூழ்ந்து கொண்டனர்.

    அப்போது மேயர் சரவணன், திடீரென தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறி கூட்ட அரங்கில் தனது மேயர் உடையுடன் தரையில் விழுந்து உருண்டு புரண்டார். தன்னை யாராவது காப்பாற்றுங்கள் என்று அலறினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த துணை மேயர், மாநகராட்சி அதிகாரிகள் மேயர் சரவணனை ஓய்வு அறைக்கு தூக்கி சென்றனர்.

    இந்த சம்பவத்தால் கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் அமளி துமளியானது.



    • சர்ச்சை காரணமாக பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களிடையே குழப்பம்.
    • பதட்டம் நிலவி வருவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பொறுப்பு பதிவாளராக வெற்றிசெல்வன் பதவி ஏற்க முடிவு செய்யப்பட்டு, இன்று பதிவாளர் அறைக்கு செல்ல முயன்றார்.

    ஆனால் அறையின் கதவை பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு ஏற்கனவே இருந்த பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் சென்றார். இதனால் அறையின் பூட்டை உடைத்து அவர் பதவியேற்றார். இதுகுறித்த விபரம் வருமாறு:-

    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017- 18-ம் ஆண்டில் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என 40 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் உரிய தகுதி இல்லாமல் முறைகேடாக நியமிக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் 40 பேருக்கும் தகுதி காண்பருவம் முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக துணை வேந்தராக இருந்த திருவள்ளுவனை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த நவம்பர் மாதம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

    இதைத்தொடர்ந்து, துணைவேந்தர் பொறுப்புக்குழு நியமிக்கப்படும் வரை பொறுப்பு துணை வேந்தராக தொழில் மற்றும் நில அறிவியல் துறை பேராசிரியர் சங்கரை கவர்னர் நியமித்தார்.

    இந்நிலையில் பொறுப்பு துணை வேந்தர் சங்கருக்கும், பேராசிரியர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் பாரதஜோதிக்கும் பதிவாளர் (பொ) தியாகராஜன் ஓரிரு நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்பினார். அதில் சங்கரின் செயல்பாடுகளால் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களிடையே அசாதாரண சூழல் ஏற்படும் நிலை உள்ளது.

    பல்கலைக்கழக நலன் கருதியும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கையாக சங்கருக்கு பதிலாக பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் பாரதஜோதி துணைவேந்தர் பணிகளை கவனிக்க எதிர்வரும் ஆட்சிக்குழுவில் துணை வேந்தர் பொறுப்புக்குழு நியமிக்கப்படும் வரை செயல்படுவார் என தெரிவிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதை பார்த்த பொறுப்பு துணைவேந்தர் சங்கர் உடனடியாக பதிவாளர் (பொ) தியாகராஜனுக்கும், அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை இணை பேராசிரியர் வெற்றிச்செல்வனுக்கும் கடிதம் அனுப்பினார். அதில், பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பாளராக தியாகராஜன் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டார்.

    பல்கலைக்கழக வேந்தரின் (கவர்னர்) ஆணைப்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளதாலும், பதிவாளர் பொறுப்பாக பணிபுரிந்து வரும் தியாகராஜனும் இந்த விசாரணை வரம்புக்குட்பட்ட ஒரு கல்வியாளராக இருப்பதாலும், நிர்வாக காரணங்களுக்காகவும் தியாகராஜனை பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவித்து ஆணையிடப்படுகிறது.

    அயல்நாட்டு தமிழ் கல்வித் துறை இணை பேராசிரியர் வெற்றிச்செல்வனை மறு ஆணை பிறப்பிக்கும் வரை அல்லது நிரந்தர பதிவாளர் பணி நியமனம் செய்யப்படும் வரை பதிவாளர் பொறு ப்பாக நியமனம் செய்து ஆணை இடப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த இரு கடிதங்களால் எழுந்த சர்ச்சை காரணமாக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

    இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று (திங்கட்கிழமை) பொறுப்பு துணை துணைவேந்தர் சங்கர் உத்தரவுப்படி பொறுப்பு பதிவாளராக வெற்றிசெல்வன் பதவி ஏற்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, வெற்றி செல்வன் இன்று பதிவாளர் அறைக்கு செல்ல முயன்றார். ஆனால் அறையின் கதவை பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு ஏற்கனவே இருந்த பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் சென்றார்.

    இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. உடனடியாக பல்கலைக்கழக ஊழியர்கள் கதவை உடைத்தனர். பின்னர், பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பொறுப்பு பதிவாளராக வெற்றி செல்வன் பதவி ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே இருந்த பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் மற்றொரு தனி அறையில் அமர்ந்து உள்ளார்.


    பொறுப்பு பதிவாளராக வெற்றி செல்வன் பதிவேற்ற போது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீசார் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தமிழ் பல்கலைக்கழகத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • டீத்தூள் குடோனில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவிடைமருதூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மணிக்கார தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம். இவரது மகன் அகமது தம்பி என்பவருக்கு சொந்தமான டீத்தூள் ஏஜென்சி திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை பிடாரன் தெருவில் உள்ளது.

    இங்கு டீ துள்களை குடோனில் சேகரித்து வைத்து பின்னர் பல்வேறு பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் இவரது உறவினரான ஹபீப் ரஹ்மான் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணிகள் முடிந்ததும் ஊழியர்களை குடோனை பூட்டி சென்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலையில் குடோனில் இருந்து கடும்புகை வெளியே வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் குடோன் தீ பிடித்து எரிந்தது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஹபீப் ரஹ்மானுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் இது குறித்து திருவிடைமருதூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து தீயணைப்புதுறை அலுவலர் மாறன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதில் சுமார் ரூ.40 லட்சத்திற்கும் மேல் டீ தூள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் எரிந்து சேதமானதாக ஹபீப்ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து திருவிடைமருதூர் போலீசார் மின்கசிவு காரணமா? தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இன்று அதிகாலையில் திருவிடைமருதூர் அருகே டீத்தூள் குடோனில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • அண்ணாமலையின் இந்த நூதன போராட்டம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் தெரிவித்தனர்.
    • முட்டைகளை உடைக்கும் போதும் அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு ஈடுபட்டார்.

    அய்யம்பேட்டை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க கோரியும், தமிழக அரசை கண்டித்தும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அண்ணாமலையின் இந்த நூதன போராட்டம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் தெரிவித்தனர். மேலும், இந்த போராட்டத்திற்கு சமூக வலைதளத்தில் கேலி, கிண்டல்கலும் எழுந்தன.

    இந்த நிலையில், அண்ணாமலையை கண்டித்து தி.மு.க. கவுன்சிலரின் கணவர் ஒருவர் அதைவிட நூதன போராட்டத்தில் ஈடுபட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சியில் 3-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் பாண்டியம்மாள். இவரது கணவர் ராம் பிரகாஷ். தி.மு.க.வை சேர்ந்தவர். இவர் அண்ணாமலை தனக்குத்தானே சாட்டையால் அடித்து கொண்ட சம்பவம் வீரத்திற்கு புகழ்பெற்ற தமிழகத்தை இழிவுபடுத்தும் செயல் எனக்கூறி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அதன்படி, இவர் அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சாலையில் அமர்ந்து அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார். பின்னர், தான் எடுத்துவந்த சுமார் 150 முட்டைகளை எடுத்து, அதனை தனக்குத்தானே தலையில் அடித்து உடைக்கத் தொடங்கினார். முட்டைகளை உடைக்கும் போதும் அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு ஈடுபட்டார்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் போராட்டம் நடைபெற்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • டாக்டர் மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • போலீசார் மருத்துவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கரிகாலனை கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடியை சேர்ந்தவர் வைத்திலிங்கம் மகன் கரிகாலன் (வயது 42). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டார். இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கபட்டார்.

    இந்நிலையில் கரிகாலன் தனது கையில் உள்ள ஊசி செலுத்தும் வென்ப்ளானை கழட்டி வீசி உள்ளார். அப்போது ஊசி செலுத்த சென்ற பயிற்சி பெண் டாக்டர், இது பற்றி கேட்டார். அப்போது கரிகாலன் திடீரென பயிற்சி டாக்டரை தாக்கினார்.

    இது குறித்து டாக்டர் மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் மருத்துவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கரிகாலனை கைது செய்தனர். இந்த சம்பவம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×