search icon
என் மலர்tooltip icon

    மீனம்

    தமிழ் புத்தாண்டு ராசிபலன்

    எளிமையை விரும்பும் மீன ராசியினருக்கு குரோதி வருடத் தமிழ் புத்தாண்டு ஆசீர்வதிக்கப்பட்ட ஆண்டாக அமைய நல் வாழ்த்துக்கள்.

    சகாய குருவின் பலன்கள்:

    மீன ராசிக்கு ராசி மற்றும் பத்தாம் அதிபதியான குரு பகவான் மே 1, 2024 முதல் தைரிய வீரிய, சகாய ஸ்தானத்திற்கு செல்கிறார். புதிய முயற்சிகளுக்கு இது உகந்த காலம். மாற்றங்களைப்பற்றி சிந்திப்பீர்கள். மறைமுக வருமானம் பெருகும். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 7ம் மிடத்தில் பதிகிறது. புது விதமான தேடல்கள் மற்றும் அது சார்ந்த செயல்களில் ஈடுபாடுகள் அதிகமாக இருக்கும். கடன்கள் வசூலாகும்.

    பெரிய முதலீடுகளை பயன்படுத்தி கூட்டு தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டமிடுவீர்கள். கடின உழைப்பை வெளிப்படுத்துவீர்கள்.

    நிலையான வருமானம் உண்டாகும். சேமிப்புகள் உயரும். வீடு மனை பூமி தொடர்பான நெடுநாள் கனவுகள் நிறைவேறும். திருமண தடைகள் நீங்கி வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் பணி நிரந்தரம் ஆகாதவர்களுக்கு பணிநிரந்தரம் உண்டாகும்.

    குருவின் 7ம் பார்வை 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் பதிகிறது. இடப்பெயர்ச்சி நிச்சயம் உண்டு. உங்களின் திறமையின் மீது நீங்கள் கொண்ட வைராக்கியம், பிடிவாத குணம், ஆளுமை திறன் உங்களின் தொழில், உத்தியோகம் மூலம் உங்களை வெளி உலகிற்கு அடையாளம் காட்டும். உங்களின் முன்னேற்றத்தை தடுத்தவர்கள் காணாமல் போவார்கள்.

    திருமணம், சடங்கு போன்ற விசேஷங்களில் குடும்பப் பகை, வருத்தம், சம்பந்திகள் சண்டை, பங்காளி பகையும் மறையும். இரு தரப்பினரும் நடந்ததை மறந்து விட்டு கொடுத்து செல்வீர்கள். கெளரவப் பிரச்சனையால் பல வருடமாக தடைபட்ட குல தெய்வ வழிபாடு தொடரும். குருவின் 9ம் பார்வை 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் பதிகிறது.

    முன்னோர் வழி சொத்தில் இருந்த வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத பிறர் பணம், எதிர்பாராத தன லாபம், லாட்டரி, புதையல், உயில். ஆயுள் காப்பீடு போன்ற வகையில் கிடைக்கும்.

    விரயச் சனியின் பலன்கள்:

    மீன ராசிக்கு லாபாதிபதி மற்றும் விரயாதிபதியான சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் விரய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார்.

    மூட நம்பிக்கை, அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் அதிகரிக்கும்.சோம்பலும், கோபமும் மிகுதியாகும்.உழைப்பில் ஆர்வம் குறையும் சுய தொழிலில் இருப்பவர்களுக்கு உத்தியோகத்தின் மேல் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சொந்த தொழில் எண்ணம் உதயமாகும். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் வேலை பார்க்கும் இடம், வேலையைப் பற்றிய முழு விபரமும் தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். சனியின் 3ம் பார்வை தனம் வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் பதிகிறது.

    தொட்டதெல்லாம் துலங்கும். எந்த வழியிலாவது உங்கள் தேவைக்கு ஏற்ற பொருளாதாரம் கிடைக்கும். கிடைக்கும். பொருளை பன்மடங்காக பெருக்க குறுக்குவழியில் நாட்டம் மிகும்.காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சனைகள் அறுவை சிகிச்சையில் சீராகும்.

    கண்ணுக்கு தெரியாத தீய சக்தியை நாடி பொருள் விரயம் செய்வீர்கள். சனியின் 7ம் பார்வை 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் பதிகிறது.

    சனி பார்வை பட்ட இடம் பாழ். எனவே இது வரை கடனுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கேட்ட இடத்திலும் கேட்காத இடத்திலும் கூட கடன் கிடைக்கும். வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க உங்கள் வீட்டு வாசலில் காத்து இருப்பார்கள். கடனால் அவதிப்படுபவர்களுக்கு கடன் அடைக்கும் மார்க்கம் தென்படும்.சனியின் 10 பார்வை 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானதில் பதிகிறது.

    பணிபுரிபவர்களின் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானகவே வந்து சேரும். வெளிநாடு சென்றவர்கள் பூர்வீகம் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. இங்கே குருப் பார்வை இருப்பதால் சிலருக்கு அரசியல் ஆசை துளிர் விடும்.

    ராசியில் ராகு 7ல் கேது:

    ஜென்ம ராசியில் ராகு. 7ல் கேது. இது கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம். ஆண்டு முழுவதும் ராகு கேதுக்கள் ராசியிலும் ஏழாமிடத்திலும் சஞ்சரிக்கப் போகிறார். ராகு தான் நின்ற பாவக பலனை பிரமாண்டப்படுத்துவார். கேது தான் நின்ற பாவக பலனை சுருக்குவார். ராசியில் நிற்கும் ராகு உங்கள் செயல்பாடு மற்றும் தோற்றத்தில் பிரமாண்டத்தைக் கொடுப்பார்.தன்னம்பிக்கை உயரும்.

    புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் உருவாகும். உழைப்பும் பொறுப்புகளும் அதிகரிக்கும். அரசால் ஆதாயம் உண்டாகும். இன்னல்களை எதிர்கொள்ளும் மனோதிடம் உருவாகும். கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சமுதாயத்தில் செல்வாக்கு உயரும்.வீடு, நிலம், தோட்டம் வாங்கும் அமைப்பும் சிலருக்கு உருவாகும். வாடகை வீட்டில் வாழ்ந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறுவார்கள்.

    பிள்ளைகளின் திருமணத்திற்கு சீர்வரிசைகள் வாங்குவதில் ஆர்வம் செலுத்துவீர்கள். சிலருக்கு உஷ்ணம் சார்ந்த பிரச்சினைகளும் ஜீரணக் கோளாறுகளும் ஏற்படும். விண்ணப்பித்த அரசு வேலை கிடைக்கும்.

    பங்குச்சந்தை இழப்புகள் குறையும். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எப்படி எல்லாம் வாழ்ந்தால் முன் ஜென்ம கர்மாவை கழித்து ஆன்மாவை சுத்தப்படுத்தி பிறவியற்ற நிலையை அடையலாம் என்பதை கோட் சார ராகு / கேது.

    ஏழரை சனியும் புரிய வைப்பார்கள். கடனால் கவலை, கணவன் மனைவி பிரிவினை அல்லது வழக்கு, பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும்.

    தொழில் கூட்டாளிகளால் பணப்பரிவர்தனையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். கூட்டு தொழில் மற்றும் புதிய தொழில் ஒப்பந்தங்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும். உயிருக்கு ஆபத்தை தரும் நோய்களுக்கு சிகிச்சை செய்பவர்களுக்கு நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும். ஆயுள் பலம் உண்டு.

    பூரட்டாதி 4:

    குருவின் பூரட்டாதி நட்சத்திரம் மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு பிறக்கும் குரோதி வருடம் பொற்காலம் என்றால் மிகைப்படுத்தலாகாது. மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். இருளடைந்த உங்கள் வாழ்க்கையில் மீண்டும் ஒளிபிறக்கும். குடும்பம், தொழிலுக்கு தேவையான பணத்தை திரட்டுவதில் வெற்றி பெறுவீர்கள்.

    குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பொருளாதாரம் சீராக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உறவினர் மத்தியில் மரியாதை கூடும். தந்தையின் அன்பும், அசீர்வாதமும் கிடைக்கும். கர்ப்பிணிகளுக்கு ஆண் குழந்தை பிறக்கும். அழகான, எழில் நிறைந்த வீடு கிடைக்கும். தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மாறி புரிதல் உண்டாகும். மனைவி மூலம் ஆதாயம் உண்டாகும்.

    உயர் கல்விக்கு முயற்சி செய்பவர்களுக்கு விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும். வேலை மாற்றம் நடக்கும்.இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் கிடைக்கும். சிலர் உறவுகளிடம் மனஸ்தாபத்தால் தனிமையாக வாழ விரும்பலாம். அறிமுகமில்லாத எதிர்பாலின நட்பைக் தவிர்க்கவும். காலபைரவரை வழிபடவும்.

    உத்திரட்டாதி:

    சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரம் மீன ராசியில் பிறந்தவர்களுக்கு பிறக்கும் குரோதி வருடத்தில் குடும்பத்தில் நிலவிய பிணக்குள் நீங்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பண வரவு உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். வேலை பார்க்கும் கம்பெனியின் மூலம் பதவி உயர்வுடன் வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவீர்கள்.

    தொழில் அதிபர்களின் நீண்ட நாள் கனவான ஏற்றுமதி இறக்குமதி தொழில் வாய்ப்பு தேடி வரும்.கடந்த கால வம்பு வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும். சிக்கல்கள் முழுமையாக குறையும்.வயோதிகர்கள் வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள், பேரன், பேத்திகளுடன் சென்று சிறிது காலம் தங்கி வருவார்கள். எவ்வளவு வருமானம் வந்தாலும் கட்டுக்கடங்காத விரயமும் இருக்கும்.

    கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல் சுபச் செலவுகள், சுப மங்கள விரயம் உண்டாகும். இடது கண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்ய நேரும். நிம்மதியான தூக்கம் வரும். அரசியல்வாதிகளுக்கு சத்ரு ஜெயம் உண்டு. மாணவ மாணவிகளுக்கு போட்டித் தேர்வில் வெற்றி வாய்ப்பு அதிகம்.அரசு வகை காரியத்தில் எடுக்கும் முயற்சிகள் பெற்றி தரும். வைத்தியம் பலன் தரும்.துர்க்கை வழிபாடு நல்லது.

    ரேவதி:

    புதனின் ரேவதி நட்சத்திரம் மீன ராசியில் பிறந்தவர்களுக்கு குரோதி வருட தமிழ் புத்தாண்டில் தடைகள் தகறும். தெளிவான முடிவு எடுக்கும் தன்மை அதிகரிக்கும். ஞாபக சக்தி கூடும். உறவுகள் பெருந்தன்மையோடு நடந்து கொள்வார்கள். வாழ்வில் முக்கியமான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் வெற்றியை உறுதி செய்வீர்கள். பணத்தேவைகள் நிறைவேறும். பிரயாணத்தில் ஆதாயமும் சுப பலனும் உண்டாகும்.

    பிள்ளைகளின் எதிர்கால நலனில் கவனமாக இருப்பீர்கள். சொத்து வாங்கும், விற்கும் முயற்சிகள் சாதகமாகும். அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகரிக்கும். பணம் பொருள் இவற்றிற்கு ஜாமீன் போடக்கூடாது. பங்குச் சந்தை முதலீட்டில் மிகவும் கவனம் தேவை.

    பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகளை சீராகும். தொழில் ரீதியான முன்னேற்றம் இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மகிழ்வீர்கள்.

    சிலருக்கு அரசு உத்தியோக வாய்ப்பு தேடி வரும். ஏழரைச்சனியின் காலம் என்பதால் எதைச் செய்தாலும் ஒரு முறைக்குப் பல முறை யோசித்து செய்யவும். சகோதர, சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் ஏற்பட்ட அவப்பெயர் விலகும். மருத்துவச் செலவுகள் குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

    திருமணம்:

    ராகு, கேது மற்றும் சனியின சஞ்சாரம் சற்று சாதகமற்று இருப்பதால் சிலருக்கு கோட்சார ரீதியாக திருமணத் தடை ஏற்படலாம்.

    பரிகாரம்:

    ஜென்ம ராசியில் ராகு ஏழில் கேது, விரய ஸ்தானத்தில் சனி என கோட்சார கிரகங்களின் சஞ்சாரம் சற்று சுமாராக உள்ளது. ராகு கேது மற்றும் சனியினால் சுப பலன்கள் அதிகரிக்க நீங்கள் சென்று வழிபட வேண்டிய ஸ்தலம் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகா் கோவில். இங்கு மூலவா் கற்பகவிநாயகா் 6 அடி உயரத்தில் வலம்புரி நிலையில் காணப்படுகிறார். இவரை வழிபட நவகிரக தோஷமும் விலகும்.

    ×