என் மலர்
ரிஷபம்
2024 ஐப்பசி மாத ராசிபலன்
சமூக சேவையில் விருப்பம் கொண்டு செயல்படும் ரிஷப ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசி நாதன் சுக்ரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் வக்ரம் பெறுகிறார். வலிமை இழந்த குருவின் பார்வை, பகைக் கிரகமான சுக்ரன் மீது பதிவது யோகம் தான்.
எதிர்பாராத தன லாபம் இல்லம் தேடி வரும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். மனக்குழப்பம் அகன்று மகிழ்ச்சி கூடும். பஞ்சம ஸ்தானத்தில் கேது இருப்பதால் பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும்.
செவ்வாய் நீச்சம்
ஐப்பசி 6-ந் தேதி, கடக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். கடக ராசி செவ்வாய்க்கு நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் நீச்சம் பெறுவதால், சொத்து விற்பனையால் லாபம் உண்டு. அதே நேரம் சொந்தங்களால் பிரச்சினைகள் அதிகரிக்கும். உடன் பிறப்புகள் உங்களை விட்டு விலக நேரிடலாம்.
உத்தியோகத்தில் நீங்கள் கேட்ட சலுகைகள் மறுக்கப்படலாம். வாகனங்களால் சில இடையூறு வந்துசேரும். வாசல் தேடி வந்த வரன்கள் முடிவடையாமல் போகலாம். உத்தியோகத்தில் இடமாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு, திருப்தி இல்லாத இடத்திற்கு மாறுதல்கள் கிடைக்கும்.
விருச்சிகம் - புதன்
ஐப்பசி 8-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான புதன், உங்கள் ராசிநாதன் சுக்ரனோடு இணைவது ஒரு பொன்னான நேரமாகும். பொருளாதாரத்தில் நிறைவு கிடைக்கும்.
'வேலை இல்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 'திருமண யோகம் கைகூடவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, அது கை கூடும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்குழப்பங்கள் நீங்கும்.
சனி வக்ர நிவர்த்தி
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், ஐப்பசி 18-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். தொழில் ஸ்தானத்தில் பலம்பெறும் சனியால், தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து பொருளாதார நிலை உயர வழிவகுத்துக் கொடுப்பர்.
உத்தியோகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உண்டு. அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரப் பதவி கிடைக்கும்.
தனுசு - சுக்ரன்
ஐப்பசி 22-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரன் அஷ்டம ஸ்தானத்திற்கு வருவதால், எதிர்பாராத நல்ல திருப்பங்கள் வரும். பெண்வழிப் பிரச்சினைகள் அகலும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வெளிநாடு செல்லும் முயற்சி கை கூடும். வருமானம் உயர நண்பர்கள் வழிகாட்டுவர். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவோடு வேலை நீட்டிப்பு உண்டு.
கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் அதிகம்பெற எடுத்த முயற்சி கைகூடும். பெண்களுக்கு வளர்ச்சி அதிகரிக்கும். வருமானம் திருப்தி தரும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 22, 23, 27, 28, நவம்பர்: 9, 10, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.