என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
2023 நிதியாண்டில் மட்டும் 8.34 லட்சம் யூனிட்கள் - விற்பனையில் அசத்திய ராயல் என்பீல்டு
- ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த நிதியாண்டில் விற்பனை செய்த மோட்டார்சைக்கிள் விவரங்கள் வெளியாகி உள்ளது.
- உள்நாடு மட்டுமின்றி ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஏற்றுமதியும் முதல் முறையாக 1 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனம் 2022-2023 நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் 8 லட்சத்து 34 ஆயிரத்து 895 யூனிட்களை விற்பனை செய்து அசத்தி இருக்கிறது. முன்னதாக 2018-19 வாக்கில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 492 யூனிட்களை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அந்த வகையில், கடந்த ஆண்டு தனது முந்தைய விற்பனையை முறியடித்து இருக்கிறது.
2022 ஆண்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் 6 லட்சத்து 02 ஆயிரத்து 268 யூனிட்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த ஆண்டு விற்பனையில் மட்டும் ராயல் என்பீல்டு நிறுவனம் 39 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. சிறந்த விற்பனை மட்டுமின்றி வெளிநாட்டு ஏற்றுமதியில் ராயல் என்பீல்டு நிறுவனம் முதல் முறையாக ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.
2023 நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனம் 7 லட்சத்து 34 ஆயிரத்து 840 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 41 சதவீதம் அதிகம் ஆகும். ஏற்றுமதியை பொருத்தவரை 2022 நிதியாண்டில் 81 ஆயிரத்து 032 யூனிட்களில் இருந்து, கடந்த நிதியாண்டில் 1 லட்சத்து 55 யூனிட்களாக அதிகரித்துள்ளது.
"இந்த ஆண்டு ராயல் என்பீல்டு விற்பனை வளர்ச்சியில் எவ்வித குறைவும் ஏற்படவில்லை. இந்த முறை விற்பனையில் புதிய எல்லையை கடந்து இருக்கிறோம். முதல் முறையாக எங்களின் ஏற்றுமதி ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. ஹண்டர் 350 மற்றும் சூப்பர் மீடியோர் 650 போன்ற மாடல்கள் எங்களின் எதிர்பார்ப்புகளை கடந்து, புதிய வாடிக்கையாளர்களை பெற்று தந்துள்ளது," என்று ராயல் என்பீல்டு நிறுவன தலைமை செயல் அதிகாரி பி. கோவிந்தராஜன் தெரிவித்தார்.