என் மலர்
பைக்
ரூ. 16 ஆயிரம் மதிப்பிலான சலுகைகளை அறிவித்த ஏத்தர் எனர்ஜி
- ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- இந்த சலுகைகள் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என ஏத்தர் எனர்ஜி அறிவிப்பு.
பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான, ஏத்தர் எனர்ஜி தனது ஃபிளாக்ஷிப் ஏத்தர் 350 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகைகள் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
இந்தியா முழுக்க சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றஇ வரும் ஊழியர்களுக்கு இந்த சலுகை பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகையின் கீழ் ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 4 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் மற்றும் நிதி திட்டத்தின் கீழ் ஸ்கூட்டரை வாங்குவோருக்கு வரி சேமிப்பு உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.
இவை தவிர ஏத்தர் 450X மாடலை வாங்கும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 8 ஆயிரத்து 259 மதிப்புள்ள இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது. இது ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஏற்கனவே அறிவித்து வழங்கி வரும் இரண்டு ஆண்டுகள் பேட்டரி வாரண்டி நிறைவு பெற்றதும், அமலுக்கு வரும்.
இத்துடன் வாடிக்கையாளர்கள் பணியாற்றும் பகுதிகளில் இலவசமாக சார்ஜிங் உள்கட்டமைப்புகளை நிறுவும் வசதியை ஏத்தர் எனர்ஜி வழங்கி வருகிறது. இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் சலுகைகளை முன்னணி இந்திய நிறுவனங்களில் பணியாற்றி வருவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.