என் மலர்
பைக்
ஒரே மாதத்தில் நான்கு லட்சம் யூனிட்கள் - வாகன விற்பனையில் அசத்திய ஹீரோ, ஹோண்டா
- இது 2024 ஜனவரி மாதத்தை விட 8.2 சதவீதம் அதிகம் ஆகும்.
- இந்திய சந்தையில் மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.
இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் முன்னணி பிராண்டுகள் கடந்த பிப்ரவரி மாதம் விற்பனை செய்த வாகன எண்ணிக்கை விவரங்கள் வெளியாகி உள்ளன. இதில் முதலிடம் பிடித்த நிறுவனம் மட்டுமின்றி முன்னணி பிராண்டுகள் ஒட்டுமொத்தமாக எத்தனை வாகனங்களை விற்பனை செய்துள்ளன என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹீரோ மோட்டோகார்ப்
ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை பிப்ரவரியில் 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது. பிப்ரவரி 2024 மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 4 லட்சத்து 45 ஆயிரத்து 257 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. ஜனவரி மாதத்தில் ஹீரோ நிறுவனம் 4 லட்சத்து 20 ஆயிரத்து 930 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஹீரோ நிறுவனம் 3 லட்சத்து 82 ஆயிரத்து 317 யூனிட்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா
2024 பிப்ரவரி மாதத்தில் ஹோண்டா நிறுவனம் 4 லட்சத்து 13 ஆயிரத்து 967 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது 2024 ஜனவரி மாதத்தை விட 8.2 சதவீதம் அதிகம் ஆகும். 2023 பிப்ரவரி மாதத்தில் ஹோண்டா நிறுவனம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 064 யூனிட்களை விற்பனை செய்திருந்தது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி
இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் டி.வி.எஸ். நிறுவனம் மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஜனவரி 2024 மாதத்துடன் ஒப்பிடும் போது டி.வி.எஸ். வாகன விற்பனை 0.3 சதவீதம் சரிவடைந்துள்ளது. ஜனவரியில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 233 யூனிட்களை டி.வி.எஸ். நிறுவனம் விற்பனை செய்திருந்த நிலையில், பிப்ரவரியில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 502 யூனிட்களையே விற்பனை செய்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ
2024 பிப்ரவரி மாதம் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 527 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. இது ஜனவரி 2024 மாதத்தில் விற்பனையான 1 லட்சத்து 90 ஆயிரத்து 350 யூனிட்களை விட 11.80 சதவீதம் குறைவு ஆகும்.
சுசுகி
2024 ஜனவரி மாதத்தை போன்றே சுசுகி நிறுவனம் பிப்ரவரியிலும் 80 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது சுசுகியின் மாதாந்திர விற்பனை 3.47 சதவீதம் அதிகம் ஆகும். சமீபத்தில் தான் சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது 10 லட்சமாவது யூனிட்டை உற்பத்தி செய்ததாக அறிவித்தது.