என் மலர்
பைக்
கோடிக்கணக்கில் விற்பனை - தொடர்ந்து முன்னணியில் நீடிக்கும் ஹோண்டா ஆக்டிவா!
- விற்பனைக்கு வந்த முதல் ஆண்டிலேயே ஹோண்டா ஆக்டிவா மாடல் விற்பனையில் 55 ஆயிரம் யூனிட்களை கடந்து அசத்தியது.
- 2004-05 காலக்கட்டத்தில் ஹோண்டா ஆக்டிவா விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை எட்டியது.
ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையில் மற்றொரு மைல்கல்லை எட்டி அத்தியிருக்கிறது. ஹோண்டா ஆக்டிவா மாடல் விற்பனையில் 3 கோடி யூனிட்களை கடந்துள்ளது. இந்த மைல்கல்லை எட்டுவதற்கு ஹோண்டா நிறுவனம் 22 ஆண்டுகளை எடுத்துக் கொண்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமாகவே ஹோண்டா ஆக்டிவா மாடல் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
2001-ம் ஆண்டு ஆக்டிவா மாடல் 102சிசி ஸ்கூட்டர் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள 4 ஸ்டிரோக் என்ஜின் மற்றும் CVT யூனிட், இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்தது. இரு பாலினத்தவரும் பயன்படுத்தும் வகையிலான டிசைன் இந்த ஸ்கூட்டரின் விற்பனை அதிகரிக்க காரணங்களாக மாறின. விற்பனைக்கு வந்த முதல் ஆண்டிலேயே ஹோண்டா ஆக்டிவா மாடல் 55 ஆயிரம் யூனிட்களை கடந்து அசத்தியது.
சந்தையில் நேரடி போட்டியை ஏற்படுத்த வேறு எந்த மாடல்களும் இல்லாத நிலையில், ஆக்டிவா மாடல் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. 2004-05 காலக்கட்டத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையில் பத்து லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. 2008-09 ஆண்டுகளில் ஆக்டிவா மாடல் 110சிசி வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் முந்தைய வெர்ஷனை விட 15 சதவீதம் அதிக மைலேஜ் வழங்குவதாக ஹோண்டா அறிவித்தது.
இந்த காலக்கட்டத்தில் ஆக்டிவா விற்பனை ஒவ்வொரு மாதமும் 50 ஆயிரம் யூனிட்களாக அதிகரித்தது. பிறகு 2014-15 காலக்கட்டத்தில் ஆக்டிவா 3ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவே முதல் ஆக்டிவா 125 மாடல் ஆகும். 2016-ம் ஆண்டு ஹோண்டா ஆக்டிவா விற்பனையில் ஒரு கோடி யூனிட்களை கடந்தது. இந்த சமயத்தில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் என்பதை கடந்து, இந்தியாவில் விற்பனையாகும் முன்னணி இருசக்கர வாகனம் என்ற பெருமையை ஹோண்டா ஆக்டிவா பெற்றது.
இதைத் தொடர்ந்து வெறும் 7 ஆண்டுகளில் ஹோண்டா ஆக்டிவா மாடல் இரண்டு கோடி யூனிட்களை கடந்து அசத்தியது. 2018 ஆண்டு ஹோண்டா ஆக்டிவா மாடல் இரண்டு கோடி யூனிட்களை கடந்த நிலையில், 2023 ஆண்டிலேயே மூன்று கோடி யூனிட்கள் எனும் மைல்கல்லை கடந்துள்ளது.