என் மலர்
பைக்
விற்பனையில் புது மைல்கல்.. இந்தியாவின் முதல் நிறுவனம்.. ஓலா எலெக்ட்ரிக் அசத்தல்..
- வருடாந்திர விற்பனையில் 131 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்துள்ளது.
- சுமார் 20 ஆயிரம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியில் இருந்து டிசம்பர் 21-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 647 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. அந்த வகையில் ஒரே ஆண்டிற்குள் 2.5 லட்சம் யூனிட்களை விற்பனை செய்த முதல் எலெக்ட்ரிக் இருசக்கர நிறுவனமாக உருவெடுத்தது.
இதன் மூலம் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வருடாந்திர விற்பனையில் 131 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஓலா நிறுவனம் 1 லட்சத்து 09 ஆயிரத்து 395 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஓலா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சுமார் 20 ஆயிரம் யூனிட்களை விற்பனை செய்து வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரியில் 18 ஆயிரத்து 353 யூனிட்களை விற்பனை செய்த நிலையில், மார்ச் மாதத்தில் 21 ஆயிரத்து 434 யூனிட்களை ஓலா எலெக்ட்ரிக் விற்பனை செய்தது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் அதிகபட்சம் 29 ஆயிரத்து 898 யூனிட்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் 12 மாதங்கள் வரையிலான காலக்கட்டத்தில் ஓலா எலெக்ட்ரிக் சந்தை மதிப்பு 30.50 சதவீதமாக இருக்கிறது.
ஓலா தவிர்த்து டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 399 யூனிட்களையும், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 1 லட்சத்து 01 ஆயிரத்து 490 யூனிட்களையும் விற்பனை செய்துள்ளன. இவற்றின் சந்தை மதிப்பு முறையே 19.60 மற்றும் 12.30 ஆக உள்ளது.