என் மலர்
கார்
இன்னோவா ஹைகிராஸ் டாப் எண்ட் மாடல்களின் முன்பதிவு திடீர் நிறுத்தம்
- டொயோட்டா நிறுவனத்தின் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல், 2.0 லிட்டர் ஸ்டிராங் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் டாப் எண்ட் வேரியண்ட் முன்பதிவு நிறுத்தப்பட்டு விட்டது. இன்னோவா ஹைகிராஸ் ZX மற்றும் ZX (O) வேரியண்ட்களின் முன்பதிவு நிறுத்தப்பட்டது. புதிய தலைமுறை இன்னோவா ஹைகிராஸ் மாடல் நவம்பர் 2022 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடல் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், ஸ்டிராங் ஹைப்ரிட் ஆப்ஷனில் வழங்கப்படுகிறது. புதிய காருக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், வினியோக சிக்கல் காரணமாக முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது.
இரு வேரியண்ட்கள் தவிர இன்னோவா ஹைகிராஸ் மாடலின் மற்ற வேரியண்ட்களுக்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. "வினியோக சிக்கல் காரணமாக இன்னோவா ஹைகிராஸ் ZX மற்றும் ZX (O) வேரியண்ட்களின் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். முன்பதிவு நிறுத்தம் ஏப்ரல் 8 ஆம் தேதி அமலுக்கு வருகிறது."
"இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரிட் மாடலின் இதர வேரியண்ட்களுக்கு தொடர்ந்து முன்பதிவு நடைபெறும். மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் வேரியண்ட்களுக்கு விரைவில் முன்பதிவை துவங்குவதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்." என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்து உள்ளது.