search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பாலைவனச்சோலை படத்திற்கு பின் சந்திரசேகர் ஹீரோ ஆனார்
    X

    பாலைவனச்சோலை படத்திற்கு பின் சந்திரசேகர் ஹீரோ ஆனார்

    பாரதிராஜாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட சந்திரசேகர், "பாலைவனச்சோலை''யில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். அதைத்தொடர்ந்து, பல வெற்றிப்படங்களில் ஹீரோவாக நடித்தார்.
    பாரதிராஜாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட சந்திரசேகர், "பாலைவனச்சோலை''யில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். அதைத்தொடர்ந்து, பல வெற்றிப்படங்களில் ஹீரோவாக நடித்தார்.

    கதாநாயகன் அந்தஸ்தை எட்டிய அந்தக் காலக்கட்டம் பற்றி, சந்திரசேகர் கூறியதாவது:-

    "புதிய வார்ப்புகள்'' படத்தில் பெரிய கேரக்டர் இல்லை என்றாலும், ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள்.

    பாரதிராஜா தனது அடுத்த படமான "நிழல்கள்'' படத்தில், முன்னேறத் துடிக்கும் இசையமைப்பாளன் கேரக்டரை தந்தார். திறமை இருந்தும் முன்னேற முடியாமல் முட்டுக்கட்டைகளை மட்டுமே சந்திக்கும் இளம் இசையமைப்பாளனின் வாழ்க்கைப் போராட்டம் என் நடிப்புக்கு புதுசு. என்னை அந்த கேரக்டரில் பார்த்த டைரக்டர் பாரதிராஜா, "சேகர்! உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு'' என்று மட்டும் சொன்னார். டைரக்டர் இப்படிச் சொன்ன பிறகு, அந்தக் கேரக்டர் என்னுடன் ஒன்றிப்போய் விட்டது. இரவும் பகலும் அந்த கேரக்டர் பற்றிய சிந்தனையிலேயே இருந்தேன்.

    இந்த இசையமைப்பாளன் ஜெயித்தால், வசதியான வாழ்க்கைக்கு வருவான் என்பதைக் காட்ட ஒரு பாடல் காட்சி வைத்திருந்தார், பாரதிராஜா. "மடை திறந்து தாவும் நதியலை'' என்ற அந்த பாடலினூடே, "நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்! இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்'' என்ற வரிகள் வரும். இந்த வரிக்காக காரின் பின்சீட்டில் கோட்-சூட் போட்டு பணக்கார தோரணையுடன் `555' சிகரெட்டை நான் ஸ்டைலாக புகைத்துக்கொண்டு போவதாக ஒரு காட்சி எடுத்தார். இந்தக் காட்சியின்போது நான் இருந்த காரை பாரதிராஜாவே ஓட்டினார்.

    இந்தக் காட்சி முடிந்ததும் டைரக்டர் பாரதிராஜா என்னிடம், "நடிக்கணும்னு சான்ஸ் கேட்டு என்கிட்ட வந்தே. நானும் கொடுத்தேன். இன்றைக்கு கோடீஸ்வர தோற்றத்தில் உன்னை கார்ல உட்கார வெச்சு நான் கார் ஓட்டறேன். சினிமா ஏற்படுத்திய மாற்றம் பார்த்தாயா?'' என்று கேட்டு சிரித்தார்.

    "நிழல்கள்'' படம் இளம் கலைஞர்களின் கனவை கனவாகவே வைத்து விட்டதால், படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை என்றார்கள். என்றாலும் ஒரு நல்ல இயக்குனரின் நல்ல படத்தில் நடித்த திருப்தி எனக்கு.

    பாரதிராஜாவின் "கல்லுக்குள் ஈரம்'' படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான், டைரக்டர் ராம.நாராயணன் என்னை சந்தித்தார். "முழுக்க முழுக்க உங்க மேலேயே போகும் கதை'' என்று சொல்லிவிட்டு, அப்போதே படத்தின் கதையையும் கூறினார். படத்துக்கு "சுமை'' என்று பெயர் வைத்திருப்பதையும் சொன்னார். `ஒரு ஏழைக் குடும்பத்தின் மூத்த மகன், தம்பி, தங்கைக்காக தன் வாழ்க்கையை, உருகும் மெழுகுவர்த்தியாக்கிக் கொள்கிறான்' என்ற பின்னணியில் அமைந்த அந்தக் கதையில் மூத்த மகனாக உணர்ந்து நடித்தேன். படம் பெரிய வெற்றி.

    "சுமை'' படத்தை சென்னை அமைந்தகரையில் உள்ள லட்சுமி தியேட்டரில் பார்க்கப் போயிருந்தேன். படத்தின் கடைசியில் நான் இறந்து போகும் காட்சியுடன் படம் முடியும். படம் முடிந்து வெளியே வந்ததும் படம் பார்க்க வந்திருந்த தாய்மார்கள் என்னை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டபடி, "நீ நல்லா இருக்கணும் ராசா!'' என்றார்கள். அந்த அன்பில் நானும் உருகிப்போனேன்.

    இந்தப் படத்துக்குப் பிறகு, எனக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம் "பாலைவனச்சோலை.'' டைரக்டர்கள் ராபர்ட் - ராஜசேகர் இயக்கினார்கள்.

    படத்தில் நான், ராஜீவ், தும்பு, ஜனகராஜ், தியாகு என 5 நாயகர்கள். டைரக்டர்களில் ராபர்ட் சீனியர். எங்க பெரியண்ணன் மாதிரி ஆலோசனை சொல்வார். ராஜசேகர் எங்க செட். நண்பர் மாதிரி பழகுவார். 24 மணி நேரமும் படம் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். எப்போதும் அவருடன் இருப்போம்.

    இந்தப் படத்தை, கமலிடம் உதவியாளராக இருந்த ஆர்.வடிவேல் தயாரித்தார். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்ததும், தயாரிப்பாளர் எங்களை அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்வார். மணக்க மணக்க சாப்பாடு போடுவார். அடுத்து தலையணை பெட்ஷீட் வரும். ஓய்வு நிலையில் அடுத்த நாள் எடுக்க வேண்டிய காட்சி பற்றி டைரக்டர்கள் விளக்குவார்கள். யாருக்காவது மறுநாள் முக்கிய `சீன்' என்றால், அதை ஸ்பெஷலாக விளக்கி, அந்தக் காட்சிக்கு ஏற்றபடி நடிகர்களை தயார்படுத்துவார்கள்.

    படத்தில் 5 ஆண்களை சுற்றி புதிய கோணத்தில் அமைக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை ரசிகர்களை ரொம்பவும் கவர, "பாலைவனச்சோலை'' 25 வாரம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.

    படத்தில் "மேகமே மேகமே'', "ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு'', "பவுர்ணமி நேரம் பாவை ஒருத்தி'' போன்ற பாடல்களும் ஹிட் ஆயின.

    "சுமை'' படத்தின்போதே டைரக்டர் ராம.நாராயணன் எனக்கு நண்பராகவும் ஆகிவிட்டார். பாலைவனச்சோலை படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு மாலைப்பொழுதில் என்னை அழைத்து "எர்ர மல்லு'' என்ற தெலுங்குப்படத்தை போட்டுக் காண்பித்தார். 2 ஹீரோக்களின் பின்னணியில் அமைந்த கதை. "இந்தப் படத்தை தமிழில் ஏவி.எம். நிறுவனம் தயாரிக்கிறது. `சிவப்பு மல்லி' என்று பெயர் வைத்திருக்கிறேன்'' என்றார், ராம.நாராயணன்.

    தெலுங்கில் சந்திரமோகன் நடித்த கேரக்டரில் என்னை ஒப்பந்தம் செய்தார். இன்னொரு கேரக்டருக்கு நடிகர் சிவகுமாரை `பிக்ஸ்' பண்ணினார்.

    சிவகுமாருக்கு முரட்டு கேரக்டர். படத்தின் விளம்பரம் தொடர்பாக இரண்டு பேரும் வருகிற மாதிரி சில ஸ்டில்கள் எடுக்க டைரக்டர் விரும்பினார். ஆனால் இரண்டு பேருமே பிஸியாக இருந்ததால் தனித்தனியாக `ஸ்டில்' எடுத்தார்.

    படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மனைவிக்கு மல்லிகைப்பூ வாங்கி வரும் கதாநாயகனை எதிரிகள் கத்தியால் குத்திவிட, ரத்தத்தால் மல்லிகைப்பூ சிவப்பு நிறமாகும் என்று `சிவப்பு மல்லி'க்கு விளக்கம் சொன்னார், டைரக்டர். அந்த சீனை சொன்னதும் சிவகுமார், "நான் அந்த கேரக்டரில் நடிக்கிறேனே'' என்று சொல்லியிருக்கிறார். ஆனால் ராம.நாராயணன் "உங்களுக்கான கேரக்டர் வேறு. அந்த கேரக்டர் வேறு. எனவே நீங்கள் முரட்டு கேரக்டரில் நடிப்பதே சரியாக இருக்கும்'' என்று சொல்லிவிட, நட்பு ரீதியாகப் பேசி, படத்தில் இருந்து சிவகுமார் விலகிக்கொண்டார்.

    மறுநாள் படத்தின் பூஜை. எதிர்பாராத விதமாக சிவகுமார் படத்தில் இருந்து விலகிக் கொள்கிறார். ராம.நாராயணன், ஒரு இரவுக்குள் ஒரு ஹீரோவை ஒப்பந்தம் செய்தாக வேண்டிய நிலையில் இருந்தார். இந்தக் கேரக்டருக்கு யார் சரியாக இருப்பார்கள் என்று யோசித்தவர், ராஜபாதர் தெருவில் உள்ள தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்த விஜயகாந்தை எழுப்பி, அப்போதே ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்து, ஸ்டில் எடுக்க ஏற்பாடு செய்தார். நானும் விஜயகாந்தும் அரிவாள் - சுத்தி சகிதம் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தோம்.

    திட்டமிட்டபடி படம் எடுப்பதில் ராம.நாராயணன் திறமையானவர். 18 நாளில் "சிவப்பு மல்லி'' படத்தின் வசனப்பகுதியை எடுத்து முடித்து விட்டார். படத்தில் நானும் விஜயகாந்தும் பாடுவதாக வரும் "எரிமலை எப்படி பொறுக்கும்? நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?'' என்ற பாடல் காட்சியை ஏவி.எம். காலனியில் எடுத்தார்கள். பாடலில் இருந்த நெருப்பு வரிகள் படத்துக்கு பக்கபலமாக அமைந்தது. படம் வெற்றி பெற்றது.

    கதைப்படி, இந்தப் படத்தின் ஹீரோ நான்தான். எனவே விஜயகாந்தை விடவும் சம்பளமும் எனக்குத்தான் அதிகம்!

    இந்தப்படம் வந்த பிறகு என் மீது கம்யூனிச முத்திரை விழுந்து விட்டது. `தொழிலாளர் தோழன்' என்கிற மாதிரியான படத்தின் காட்சியமைப்புகள் ரசிகர்கள் என்னை "தோழரே'' என்று அழைக்கும் அளவுக்குப் போயிற்று.

    தொடர்ந்து படங்களின் எண்ணிக்கை அதிகரித்தன. "வீட்டுக்காரி'', "பட்டம் பறக்கட்டும்'', "இனிமை இதோ இதோ'', "அர்ச்சனை பூக்கள்'', "பூம்பூம் மாடு'' என பிஸியாக நடித்துக் கொண்டிருந்தேன். ஹீரோவா, கேரக்டர் ரோலா கதையின் முக்கியத்துவம் கருதி எந்த வேடத்தையும் ஏற்று நடித்தேன்.

    இந்த காலகட்டத்தில் அடுத்தடுத்து ஐந்தாறு வருடங்களில் வருஷத்துக்கு 15 படம் நடித்த ஹீரோ நான்தான். அந்த வருஷங்களில் அதிக படங்களில் நடித்த ஹீரோவும் நான்தான்.

    ஒருநாள் கலைஞர் வீட்டில் இருந்து எனக்கு போன் வந்தது. கலைஞரின் செயலாளர் சண்முகநாதன் என்னிடம், "தலைவர் (கலைஞர்) உங்களை பார்க்க விரும்புகிறார்'' என்று தெரிவித்தார்.

    எனக்கு உடம்பு சிலிர்த்து விட்டது. எந்தத் தலைவரை ஊரில் சிறுவனாக இருந்த காலகட்டங்களில் பார்க்கத் துடித்தேனோ, எந்த தலைவர் பிரசாரத்துக்கு ஊர் வந்தால் அவர் பேச்சைக் கேட்டு மகிழ அவர் கார் போகிற இடமெல்லாம் மூச்சு விடாமல் ஓடித் துரத்தினேனோ அந்த தலைவர் என்னைப் பார்க்க விரும்புவதாக சொன்னால் எனக்கு எப்படி இருக்கும்?

    மறுநாள் காலையில் ஒருவித பரவசத்துடன் கலைஞரின் வீட்டுக்குப் போனேன்.

    Next Story
    ×