search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கானா பாலா பாடிய விழிப்புணர்வு வீடியோ: போலீஸ் கமிஷனர் வெளியிட்டார்
    X

    கானா பாலா பாடிய விழிப்புணர்வு வீடியோ: போலீஸ் கமிஷனர் வெளியிட்டார்

    போக்குவரத்து விதிகள் பற்றி திரைப்பட பின்னணி பாடகர் கானா பாலாவின் பாடல் அடங்கிய விழிப்புணர்வு வீடியோ காட்சியை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டார்.
    திரைப்பட பின்னணி பாடகர் கானா பாலா போக்குவரத்து விதிகள் பற்றி பாடிய பாடலுடன் விழிப்புணர்வு வீடியோ பட காட்சியை சென்னை நகர போக்குவரத்து போலீசார் தயாரித்துள்ளனர்.

    சுமார் 3 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோ காட்சியில் கானா பாலாவின் பாடல் இடம்பெற்றுள்ளது. அவர் பாடும் பாடல் காட்சியோடு போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏற்படும் சாலை விபத்துகளைப்பற்றிய காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

    செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டக்கூடாது. ஹெல்மெட் அணியவேண்டும். சிக்னலில் பச்சை விளக்கைப்பார்த்து வாகனத்தை ஓட்டிச்செல்ல வேண்டும். போதையில் வாகனம் ஓட்டக்கூடாது. காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணியவேண்டும். ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடவேண்டும். என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்களோடு கானா பாலா பாடியுள்ளார்.

    இந்த வீடியோ பாடல் காட்சி வெளியீட்டு விழா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் விழிப்புணர்வு பாடல் காட்சி அடங்கிய வீடியோ கேசட்டை வெளியிட்டார்.


    போக்குவரத்து விதிகள் பற்றிய வீடியோ கேசட்டை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டதையும். அந்த வீடியோ கேசட்டை திரைப்பட பாடகர் கானா பாலா பெற்றுக்கொண்டபோதும் எடுத்தபடம்.

    திரைப்பட பின்னணி பாடகர் கானா பாலா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழிப்புணர்வு வீடியோ கேசட்டை பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் விழிப்புணர்வு வீடியோவில் இடம்பெற்றுள்ள பாடலை நிருபர்கள் மத்தியில் பாடி காண்பித்தார். விழிப்புணர்வு வீடியோ காட்சியும் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநான் கூறியதாவது:-

    கானா பாலா பாடிய பாடல் இடம்பெற்றுள்ள விழிப்புணர்வு வீடியோ திரையரங்குகளில் திரையிடவும் ஏற்பாடு செய்யப்படும். வாட்ஸ்-அப், பேஸ்புக், யு-டியூப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இந்த வீடியோ காட்சி வெளியிடப்படும்.

    சென்னையில் வாகன நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்புத்திட்டங்களையும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. அந்த நடவடிக்கை தொடரும். தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் நடப்பதால் சென்னையில் ஆங்காங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    வார்தா புயலில் சேதமடைந்த சிக்னல்களை சரிசெய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களில் சேதமடைந்த சிக்னல்கள் சரிசெய்யப்படும்.

    இவ்வாறு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.



    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகர் கானா பாலா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் இனிமேல் திரைப்படங்களில் பாடுவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். பணம் சம்பாதிக்கும் விளம்பர படங்களிலும் பாடமாட்டேன். இதுபோல் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் விழிப்புணர்வு பாடல்களை மட்டும் இலவசமாக பாடி கொடுக்க முடிவு செய்துள்ளேன். ஏற்கனவே மாஞ்சா நூல் காற்றாடி தொடர்பாக விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியிருக்கிறேன். தொடர்ந்து இதுபோன்ற பாடல்களை மட்டும் பாடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர்கள் சங்கர், ஜெயராம், அபய்குமார்சிங், இணை கமிஷனர்கள் பவானீஸ்வரி, பிரேம் ஆனந்த் சின்கா, அன்பு உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×