search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை ரசிகர்கள் விரும்ப வேண்டும்.
    • இந்தி, மலையாள மொழிகளில் பெண்களை மையப்படுத்தி படங்கள் இயக்கப்படுகின்றன.

    நட்சத்திர தம்பதிகளான சூர்யா-ஜோதிகாவுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா, சமீபத்தில் வெளியான காதல்-தி கோர் படத்தில் மம்முட்டிக்கு மனைவியாக நடித்திருந்தார். படம் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் நேர்காணல் ஒன்றில் ஜோதிகா கூறியதாவது:-

    சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் அமைவதற்காக அதிகமாக உழைக்கிறேன். கதாநாயகிகள் 10 சதவீதம் அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை ரசிகர்கள் விரும்ப வேண்டும். பெரிய கதாநாயகர்களை மட்டும் உயர்த்தி பிடித்தால் கதாநாயகிகள் எப்படி வளர முடியும்?


    புது இயக்குனர்கள் மட்டுமே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கின்றனர். பெரிய இயக்குனர்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்தி, மலையாள மொழிகளில் பெண்களை மையப்படுத்தி படங்கள் இயக்கப்படுகின்றன. தமிழில் அப்படி இல்லாதது வருத்தம். திருமணத்திற்கு பிறகு நான் தமிழ் பேச பழகிவிட்டேன்.

    குழந்தைகளுக்கு நாங்கள் திட்டமிட்டதால் நடிப்பதற்கு சில காலம் இடைவெளி கொடுத்தேன். சினிமாவை தாண்டியும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. குழந்தைகளா? சினிமாவா? என்றால் குழந்தைகளுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன். ரசிகர்களுக்கு என் மேல் பாசம் இருந்தால் தமிழ்நாடு மருமகள் என்பார்கள்.


    கோபம் வந்தால் இந்திக்காரி என்பார்கள். சமூக வலைதளத்தில் என்னை குஷி ஜோதிகா என்றும் குயின் எனவும் சிலர் கிழவி என்றும் கூறுவார்கள். இதை பற்றி நான் கவலைப்படமாட்டேன். எப்போதும் ஒரே கதாபாத்திரமில்லாமல் வில்லி கதாபாத்திரம் வந்தாலும் நடிப்பேன் என்று கூறினார்.

    • பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ‘சலார்’.
    • இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.

    இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரித்துள்ளது.


    இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    சலார் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'சலார்' திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 55 நிமிடம் என்று கூறப்படுகிறது.


    • அர்னால்ட் தினசரி உடற்பயிற்சி செய்வதில் சமரசம் செய்து கொள்ளாதவர்
    • ஓய்வு எடுக்க தொடங்கினால் துரு பிடித்து விடுவோம் என்றார் அர்னால்ட்

    இந்தியா உட்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஹாலிவுட் முன்னாள் கதாநாயகன், 76 வயதான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger).

    ஆஸ்திரியா (Austria) நாட்டில் பிறந்து அமெரிக்காவில் வாழும் அர்னால்ட், கலிபோர்னியா மாநில கவர்னராகவும் பணியாற்றியவர். இவரது பல திரைப்படங்கள் உலகெங்கும் வசூலை வாரி குவித்தன. இன்றும் அவரை பல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    தனது 15 வயது முதல் தொழில்முறை பாடிபில்டராக விளங்க விருப்பம் கொண்ட அர்னால்ட், பல கடுமையான உடற்பயிற்சிகளை செய்து காட்டி இளைஞர்களை ஈர்த்தவர். இன்றளவும் பல நட்சத்திர பாடிபில்டர்களுக்கு கனவு நாயகனாக திகழும் அர்னால்ட், உடற்பயிற்சி குறித்த பல ஆர்வலர்களின் சந்தேகங்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் எடை பயிற்சியில் மிக முக்கியமான 3 பயிற்சிகளாக கருதப்படும் ஸ்க்வாட் (squat), டெட் லிஃப்ட் (dead lift) மற்றும் பெஞ்ச் பிரஸ் (bench press) ஆகியவற்றில் தனது எடை சாதனைகளை குறித்து தெரிவித்தார்.






    "பெஞ்ச் பிரஸ் பயிற்சியில் எனது அதிகபட்ச எடை 238 கிலோகிராம். எனது சிறப்பான டெட் வெய்ட் 322 கிலோகிராம்களை எட்டியது. எனது அதிகபட்ச ஸ்க்வாட் எடை 276 கிலோகிராம்கள். என்னுடைய காலகட்டத்தில் இவை ஒரு சாதனையாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் இவை வழக்கமாக உலகம் முழுவதும் பலரால் பயிற்சி செய்யக்கூடிய எடையாக மாறி விட்டது. அது ஒரு காலம். ஆனாலும், தினசரி ஜிம்முக்கு செல்வதை நான் நிறுத்தியதில்லை; அதில் எந்த சமரசமும் செய்து கொண்டதில்லை. ஓய்வு எடுக்க தொடங்கினால், துரு பிடித்து விடுவோம்" என ஏழு முறை மிஸ்டர் ஒலிம்பியா (Mr. Olympia) போட்டிகளை வென்றவரான அர்னால்ட் கூறினார்.

    தவறாத கட்டுப்பாட்டின் காரணமாக அர்னால்ட் மேற்கொண்ட ஒழுங்குமுறையான உடற்பயிற்சிகளால் கட்டுக்கோப்பான உடலமைப்பை கொண்டுள்ளதால் இன்றளவும் பாடிபில்டர்களின் முன்மாதிரியாக விளங்கி வருகிறார்.

    • ரன்பீர் கபூர் நடித்துள்ள திரைப்படம் ‘அனிமல்’.
    • இப்படம் ரூ.700 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இதுவரை ரூ.700 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.

    இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை த்ருப்தி டிம்ரி, "ரன்பீருடன் வரும் நெருக்கமான காட்சிகளில் என் பெற்றோர் சற்று அசவுகரியம் அடைந்தார்கள். அதிலிருந்து வெளியே வருவதற்கு நேரம் எடுத்துக் கொண்டார்கள். இதை நீ செய்ய வேண்டாம், இருந்தாலும் ஓகே என்றார்கள்.


    பின்னர் நான் அவர்களிடம், "நான் எந்த தவறும் செய்யவில்லை. ஒரு நடிகையாக என் கதாபாத்திரத்திற்கு 100 சதவீதம் உண்மையாக இருக்க வேண்டும். அதையே நான் செய்தேன்" என்று புரிய வைத்தேன் என்றார். த்ருப்தி டிம்ரி 'அனிமல்' திரைப்படத்தில் ஜோயா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சூப்பர் சிங்கர் ஜூனியர் 9-வது சீசன் சமீபத்தில் தொடங்கி இறுதிக்கட்டத்தை எட்டியது.
    • இறுதிப்போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

    தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதுவரை 8 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று 9-வது சீசன் சமீபத்தில் தொடங்கி இறுதிக்கட்டத்தை எட்டியது.


    சூப்பர் சிங்கர் ஜூனியர் 9-வது சீசன் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ஶ்ரீநிதா, ஹர்ஷினி, ரிச்சா, அக்ஷரா, அனன்யா, மேக்னா ஆகியோர் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.


    இந்நிலையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 -வது சீசன் டைட்டில் மற்றும் ரூ.60 லட்சம் வீட்டை ஶ்ரீநிதா பரிசாக வென்றவர். இரண்டாவது இடத்தை ஹர்ஷினி வென்றார். இவருக்கு பரிசுத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. மூன்றாவது இடத்தை பிடித்த அக்ஷராவிற்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.


    மேலும் மற்ற மூன்று போட்டியாளர்களான ரிச்சா, அனன்யா, மேக்னா ஆகியோருக்கு தலா மூன்று லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    • பல்வேறு ஊடக விமர்சகர்கள் "அனிமல்" திரைப்படத்தை கடுமையாக தாக்கி கருத்து தெரிவித்தனர்
    • விமர்சகர்கள், அனிமல் இயக்குனரிடம் திரைப்பட வகுப்பு பயில வேண்டும் என்றார் ஆர்ஜிவி

    கடந்த டிசம்பர் 1 அன்று பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவான இந்தி திரைப்படம் "அனிமல்" உலகமெங்கும் வெளியானது. திரையிடப்பட்ட முதல் நாளிலிருந்தே அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெள்ளித்திரையில் வசூலில் சாதனை புரிந்து வருகிறது.

    ஆனால், "அனிமல்" திரைப்படத்தை எழுத்து, சமூக, காட்சி உள்ளிட்ட அனைத்துவிதமான ஊடகங்களிலும் பல பிரபல விமர்சகர்கள் கடுமையாக தாக்கி கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். கதை மற்றும் காட்சி அமைப்புகளில் இளைஞர்களை ஈர்ப்பதற்காக ஏராளமாக வன்முறை சம்பவங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், தரமான திரைப்படமல்ல என்றும் குறை கூறி இயக்குனரை விமர்சித்திருந்தனர்.

    இந்நிலையில், "அனிமல்" திரைப்படத்தின் உலகளாவிய வசூல் ரூ.650 கோடியை தாண்டியுள்ளது.

    வரும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக போகும் புதிய திரைப்படங்கள் "அனிமல்" வசூலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருந்தாலும், அதற்குள் இப்படம் மேலும் பல கோடிகள் வசூலில் குவிக்கும் என திரைப்பட வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இப்பின்னணியில் "ஆர்ஜிவி" என அழைக்கப்படும் பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா (Ram Gopal Varma), திரைப்பட விமர்சகர்களை கடுமையாக தாக்கி கருத்து கூறியுள்ளார்.

    விமர்சகர்களுக்கு 5 அறிவுரைகளாக ஆர்ஜிவி தெரிவித்திருப்பதாவது:

    • இயக்குனரை காட்டிலும் படத்தை வெற்றி பெற வைத்த ரசிகர்கள் மீது விமர்சகர்கள் முதல்முறையாக கோபமடைந்திருக்கிறார்கள்.
    • படு மோசம் என வர்ணிக்கப்பட்ட திரைப்படம் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட படமாக மாறியுள்ளது. இதன் மூலம் விமர்சகர்களின் திரைப்பட விமர்சனம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது உறுதியாகி விட்டது.
    • ரசிகர்களுக்கு விருப்பமானது எது என விமர்சகர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை என்பதும் உறுதியாகி விட்டது.
    • அனைத்து விமர்சகர்களும் கை கூப்பி திரைப்படங்களை வர்ணிப்பது எப்படி என சந்தீப் ரெட்டி வங்காவிடம் கேட்டு கற்று கொள்ள வேண்டும்.
    • விமர்சகர்கள் "அனிமல்" திரைப்படத்தை பல முறை பார்த்து தங்கள் அறிவை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.  இவ்வாறு ராம் கோபால் வர்மா தெரிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பெண் எம்.பி. ரஜ்சீத் ரஞ்சன் (Ranjeet Ranjan) மாநிலங்களவையில், "இளைஞர்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வன்முறை காட்சிகளும் ஆணாதிக்க கதையமைப்பும் அதிகம் உள்ள இத்திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் எவ்வாறு அளிக்கப்பட்டது?" என கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    • மன்சூர் அலிகான் பேசிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது.
    • நடிகர் மன்சூர் அலிகான், நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மான நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். இதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்தார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.


    மன்சூர் அலிகான் பேசிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இதனால் பெண்களை இழிவுப்படுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே மன்சூர் அலிகான் தன்னுடைய கருத்து வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். நடிகை திரிஷாவும் மன்னித்ததாக தெரிவித்தார்.

    இத்துடன் பிரச்சனை முடிந்துவிட்டது என்று நினைக்கையில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மான நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மூவரும் தலா ஒரு கோடி ரூபாய் வீதம் ரூ.3 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.


    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் திரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்று கூறியதோடு எங்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்க வேண்டாம் என்று நீதிபதி தெரிவித்தார். மேலும், நடிகராக இருக்கும் ஒரு நபரை பல இளைஞர்கள் ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில், பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா? பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மன்சூர் அலிகானுக்கு அறிவுறுத்துங்கள் என்று மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கூறினார்.

    இதைத்தொடர்ந்து, மன்சூர் அலிகான் மனுவிற்கு பதிலளிக்கும் படி நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கை டிசம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

    • மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “மதிமாறன்”.
    • இப்படத்தில் இவானா கதாநாயகியாக நடித்துள்ளார்.

    பிரபல இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "மதிமாறன்". இப்படத்தில் நாச்சியார், லவ் டுடே போன்ற படங்களில் நடித்த இவானா கதாநாயகியாக நடித்துள்ளார். வெங்கட் செங்குட்டுவன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், 'ஆடுகளம்' நரேன், பாவா செல்லதுரை, E.பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பர்வேஸ் கே ஒளிப்பதிவு செய்ய சதீஷ் சூர்யா படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள "மதிமாறன்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியைத் தேடும் நாயகனின் தேடல் தான் இப்படத்தின் கதை.


    மதிமாறன் போஸ்டர்

    தற்போது வெளியாகியுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் படத்தின் முதன்மை கதாப்பாத்திரங்களுடன் ஒரு காவலதிகாரி ஜீப்பின் மீது அமர்ந்திருக்கிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுவதுடன், ரசிகர்களுக்கு ஒரு தரமான திரில்லர் அனுபவம் காத்திருப்பதாக உறுதியளிக்கிறது.

    இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் தற்போது திரைவெளியீட்டுக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் "மதிமாறன்" படத்தின் டிரைலர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படத்தினை பாபின்ஸ் ஸ்டுடியோஸ் எனும் புதிய நிறுவனம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடவுள்ளது. 

    • நடிகை சமந்தா பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் மயோசிட்டிஸ் நோயில் இருந்து மீண்டுவிட்டதாக கூறப்படுகிறது.

    பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24, மெர்சல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.


    சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் இந்த நோயிலிருந்து படிப்படியாக குணமடைந்த இவர் தான் கமிட்டான திரைப்படங்களில் தற்போது நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது சமந்தா மயோசிட்டிஸ் நோயில் இருந்து மீண்டுவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நடிகை சமந்தா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். அதாவது, இவர் ' ட்ரலாலா மூவி பிக்சர்ஸ் ' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள சமந்தா, "ட்ரலாலா பிக்சர்ஸ் புதிய தலைமுறை யோசனைகளைத் திரையிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அர்த்தமுள்ள, துல்லியமான மற்றும் உலகளாவிய கதைகளைச் சொல்ல இது ஒரு தளமாகும் " எனக் குறிப்பிட்டு உள்ளார்.


    மேலும், தான் சிறுவயதில் கேட்ட 'பிரவுன் கேர்ள் இன் தி ரிங் நவ்' என்ற ஆங்கிலப் பாடலில் உள்ள ட்ரலாலா என்ற வார்த்தையில் இருந்து தான் இந்தப் பெயர் வந்ததாக சமந்தா விளக்கமளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சமந்தா, எம் டிவியின் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘விடுதலை- 1’.
    • இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். சமீபத்தில் விடுதலை இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதனை சூரி தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்திருந்தார்.


    இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் 'விடுதலை' படத்தின் அனுபவம் குறித்து கூறியிருந்தார். அதில், 'விடுதலை- 1' இயக்க ரூ.4.5 கோடி தான் கொடுக்கப்பட்டது என்றும் ஆனால், படத்தை எடுத்து முடித்த பிறகு பட்ஜெட் ரூ.65 கோடியை தாண்டியதாகவும் கூறியிருந்தார். இந்த நேர்காணலில் வெற்றிமாறனுடன் இயக்குனர்கள் நெல்சன், கார்த்திக் சுப்பராஜ், பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ‘சலார்’.
    • இப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரித்துள்ளது.


    இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணியை நடிகர் பிரித்விராஜ் முடித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில், "டப்பிங்கின் இறுதிகட்ட சரிபார்ப்பு முடிந்தது. பல ஆண்டுகளாக நான் பணியாற்றிய பல்வேறு மொழிகளில் எனது அனைத்து கதாபாத்திரங்களுக்கும் எனது சொந்தக் குரலைக் கொடுக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.


    என்னுடைய சில கதாபாத்திரங்களுக்கு பல மொழிகளில் டப்பிங் பேசியிருக்கிறேன். ஆனால், ஒரு கதாபாத்திரத்திற்கு 5 மொழிகளில் டப்பிங் பேசுவது எனக்கு முதல் முறை. டிசம்பர் 22-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தேவாவும், வரதாவும் உங்களைச் சந்திப்பார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.


    • நடிகர் சிவகார்த்திகேயன் 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், மாவீரன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார்.


    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு 75 நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் நிறைவடைந்தது.

    இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். இந்த காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    கடந்த சில நாட்களாக 'மிச்சாங்' புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டிருந்தது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளில் அரசு, திரைப்பிரபலங்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பலர் ஈடுபட்டனர்.

    ×