என் மலர்
சினிமா செய்திகள்
- சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது விபத்து
- இவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடி எஃப் வாசன் அம்பத்தூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து மகாராஷ்டிராவிற்கு பைக்கில் செல்ல முடிவு செய்தார். அதன்படி சென்னை- பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு காரை முந்தி செல்ல வேண்டிய நிலையில், சாகசம் செய்ய முயன்றார். அப்போது அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்தது. டிடிஎஃப் வாசம் பைக்கில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றார்.
அப்போது, அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கைமுறிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கிடையே, அவருடைய பைக் பறிமுதல் செய்யப்பட்டு காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அவரது லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நண்பர் வீட்டில் ஓய்வு எடுத்து வரும் அவரிடம், போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில்தான் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
- 12-ம் வகுப்பு படித்து வந்தவர்
- மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது
தமிழ் திரை உலகில் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள வீட்டில் அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மூத்த மகள் பெயர் மீரா. 16 வயதாகும் இவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இளைய மகள் லாரா 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
பிளஸ்-2வில் முதல் குரூப் படித்து வந்த மீரா மன அழுத்தத்தில் இருந்து வந்து உள்ளார். இதற்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. மன அழுத்தத்தை போக்க கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இருப்பினும் மீரா மனஅழுத்தத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு மீரா வழக்கம்போல் தூங்கச் சென்றார். இன்று அதிகாலை 3 மணி அளவில் விஜய் ஆண்டனி, மகள் மீராவின் அறையை போய் பார்த்துள்ளார். அங்கு மகள் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார்.
பின்னர் வீட்டு வேலைக்காரரின் உதவியுடன் மின்விசிறியில் இருந்து மகளை இறக்கி உடனடியாக ஆழ்வார்பேட்டை ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு மீராவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதைக் கேட்டு விஜய் ஆண்டனியும், அவரது குடும்பத்தினரும் அழுது கண்ணீர் வடித்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு விரைந்து சென்று மீராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மீரா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மனஅழுத்தம் காரணமாகவே அவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.
பள்ளியில் பேட்மிட்டன் விளையாட்டை தேர்வு செய்து மீரா விளையாடி வந்துள்ளார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் மீரா வெளியில் சென்று வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அப்போது அவர் யாரை சந்தித்தார்? எதற்காக போய் பார்த்தார்? என்ன பேசினார். என்பது பற்றிய விவரங்களையும் போலீசார் திரட்டி வருகிறார்கள்.
மீராவின் மனஅழுத்தத்துக்கு காரணமாக அமைந்த விஷயங்கள் என்னென்ன? என்பது பற்றியும் போலீசார் தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக அவர் பயன்படுத்திய செல்போனை வைத்தும் விசாரித்து வருகிறார்கள். மீரா நேற்று யார்-யாருடன் போனில் பேசினார்? என்பது பற்றிய விவரங்களை சேகரித்து அதன் மூலமாக மன அழுத்தத்துக்கான காரணத்தை கண்டறிய திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த தற்கொலை சம்பவம் தமிழ் திரையுலகில் விஜய் ஆண்டனியின் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு மீராவின் உடல் விஜய் ஆண்டனியிடம் ஒப்படைக்கப்பட்டது.
வைரலான விஜய் ஆண்டனி வீடியோ
தற்கொலை குறித்து விஜய் ஆண்டனி பேசிய பழைய வீடியோக்கள் இன்று வைரலாகி வருகின்றன.
அதில், 'எனக்கு 7 வயதாக இருக்கும்போது என் அப்பா தற்கொலை செய்து கொண்டார். கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டு என் தாய் பட்ட கஷ்டங்களால் அந்த வலி என்னவென்று எனக்கு நன்றாக தெரியும். நிறைய குழந்தைகளும் தற்கொலை எண்ணத்துடன் இருக்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மேல் அழுத்தம் கொடுக்கக் கூடாது. மற்றவர்கள் உங்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என எதிர்பார்க்காமல் நீங்கள் உங்களை நேசியுங்கள்' என்று கூறி உள்ளார்.
- சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகிறது.
- கதையின் நாயகனாக சிம்ஹா நடிக்க, நாயகியாக மிஷா ரங் நடித்துள்ளார்.
Mudhra's film factory தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராகேஷ் N.S இயக்கத்தில். நடிகர் சிம்ஹா நடிக்கும், கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமான "தடை உடை" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
சூது கவ்வும் பட இயக்குநர் நலன் குமாரசாமி, எங்கேயும் எப்போதும் சரவணன், மற்றும் கட்டப்பாவை காணோம் பட இயக்குநர் மணி செய்யோன் ஆகிய மூவரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றிய ராகேஷ் N.S இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகிறது.
நகரம், கிராமம் என இரு இடங்களில் கதை நடப்பதாக, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சிவகங்கை கிராமப்பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அறிமுக இசையமைப்பாளர் ஶ்ரீ இசையில் இப்படத்தின் பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். சமீபத்தில் தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்துள்ளார்.
கதையின் நாயகனாக சிம்ஹா நடிக்க, நாயகியாக மிஷா ரங் நடித்துள்ளார். இவர்களுடன் ரோகிணி, செந்தில், பிரபு, சந்தான பாரதி, செல் முருகன், சரத் ரவி தங்கதுரை, தீபக் ரமேஷ், மணிகண்ட பிரபு, சுப்பிரமணியம் சிவா, ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இப்படத்தில் முதன் முறையாக முழு நீளக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக், குடும்பத்துடன் அனைவரும் ரசித்துக் கொண்டாட, ஒரு கலக்கலான திரைப்படம் இதுவென்பதை உறுதி செய்வதாக உள்ளது. அசத்தலாக அமைந்துள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக்கை, ரசிகர்கள் பாராட்டிப் பகிர்ந்து வருகின்றனர்.
பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை Mudhra's film factory சார்பில் ரேஷ்மி மேனன் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
தொழில் நுட்ப குழுவினர்
எழுத்து இயக்கம் - ராகேஷ் N.S
தயாரிப்பு - ரேஷ்மி மேனன்
ஒளிப்பதிவு - K.A.சக்திவேல்
இசை - ஸ்ரீ
பின்னணி இசை- ஸ்ரீகாந்த் தேவா
பாடல்கள் - கவிப்பேரரசு வைரமுத்து
படத்தொகுப்பு - பொன் கதிரேஷ் PK
கூடுதல் திரைக்கதை - சாய்ராம் விஷ்வா
லைன் புரடியூசர் - திலீப் குமார்
நிர்வாக தயாரிப்பு - R.P.பால கோபி
கலை - M.தேவேந்திரன்
மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)
- கலகலப்பான குடும்ப படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.
- 'பிரதர்' படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கிறார்.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் எட்டாவது தயாரிப்பான இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகி வருகிறது.
'பிரதர்' படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், 'கே ஜி எஃப்', 'புஷ்பா' புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
'பிரதர்' திரைப்படத்திற்காக 'ஒரு கல் ஒரு கண்ணாடி'க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளதால் இதன் பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவை விவேகானந்த் சந்தோஷம் கையாளுகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் உடன் பல்வேறு படங்களில் பணியாற்றிய இவர், தனுஷ் நடித்த 'மாறன்', ஜிவி பிரகாஷ் நடித்த 'செம' மற்றும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
'பிரதர்' குறித்து பேசிய இயக்குநர் எம். ராஜேஷ், "ஆக்ஷன் ததும்பும் வித்தியாசமான திரைப்படங்களில் ஜெயம் ரவி தற்போது நடித்து முத்திரை பதித்து வந்தாலும் 'ஜெயம்', 'எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்', மற்றும் 'சந்தோஷ் சுப்பிரமணியம்' ஆகிய குடும்ப கதையம்சம் உள்ள திரைப்படங்கள் அவரது திரையுலக பயணத்தில் மிகவும் முக்கியமானவை. இந்த வரிசையில் 'பிரதர்' இணையும் என்பதில் சந்தேகம் இல்லை," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சென்னை, ஹைதராபாத், ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கலகலப்பான குடும்ப கதைக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி மீண்டும் திரும்பும் இத்திரைப்படம் 6 முதல் 60 வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் அமையும் என்று நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்ட நிலையில் இப்படம் குறித்த மேலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும்.
- சென்னையில் ஏற்கனவே கார் விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன், தற்போது பைக் விபத்தில் சிக்கியுள்ளார்.
- டிடிஎஃப் வாசன் சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
பைக் ரேஸரும், பிரபல யூடியூபருமான டிடி எஃப் வாசன் சாலை விபத்தி சிக்கி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவைக்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தபோது, காஞ்சிபுரம் பாலுசெட்டி அருகே வீலிங் செய்ய முயன்றபோது விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
டிடிஎஃப் வாசன் சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வௌியாகி உள்ளது.
கை எலும்பு உடைந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு பிளேட் வைக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
முன் சென்ற வாகன்ததை முந்தி செல்ல முயன்றபோது விபத்தில் சிக்கியுள்ளார். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகனம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
சென்னையில் ஏற்கனவே கார் விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன், தற்போது பைக் விபத்தில் சிக்கியுள்ளார்.
டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கிய நிலையில், அவர் நடித்து வரும் மஞ்சள் வீரன் படத்தின் நிலை என்ன என்பதும் கேள்வி குறியாக உள்ளது.
- இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு லியோ படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்படும் என தகவல்.
- படத்தின் போஸ்ட்டரை நடிகர் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டு தேதி நெருங்க.. நெருங்க இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில், லியோ படத்தின் தெலுங்கு போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு லியோ படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்படும் என பட நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியிட்ட தெலுங்கு போஸ்டரில் "அமைதியாக இருந்து சண்டையை தவிருங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரை படக்குழு எக்ஸ் பக்கத்திலும், நடிகர் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.
- என் வாழ்க்கையில் அதிக கால்ஷீட் கொடுத்து நடித்த படம் ஜெயிலர்தான்.
- அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் வெளியாகி மாபெரும் வெற்றியினை பெற்றது. வசூல் ரீதியிலும் ரூ.630 கோடியை தாண்டி சாதனை படைத்தது.
இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் சுனில் உள்பட பலர் நடித்து இருக்கிறார்கள். ஜெயிலர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விநாயகன் வர்மாவாக நடித்து மிரட்டி இருக்கிறார்.
'மனசுலாயோ' என அவர் பேசி நடித்த வசனம் சமூக வலைதளங்களில் இப்போதும் பேசும் பொருளாக உள்ளது. இந்நிலையில் அவர் ஜெயிலர் படத்துக்காக ரூ.35 லட்சம் சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது.
இதுகுறித்து விநாயகன் அளித்த பேட்டியில் நான் ஜெயிலர் படத்தில் ரூ.35 லட்சம் சம்பளம் பெற்றதாக தகவல்கள் பதிவாகி உள்ளது. நான் ரூ.35 லட்சத்தைவிட 3 மடங்கு அதிகமாக சம்பளம் பெற்றேன்.
படப்பிடிப்பில் என்னை மிகவும் நன்றாக நடத்தினார்கள். என் வாழ்க்கையில் அதிக கால்ஷீட் கொடுத்து நடித்த படம் ஜெயிலர்தான். இதனால் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.
ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து தமிழில் விநாயகனுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
- மம்முட்டி நடித்துள்ள 'பிரம்மயுகம்' படத்தினை ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார்.
- ‘பிரம்மயுகம்’ படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.
பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாலத்தில் 'பிரம்மயுகம்' படத்தில் நடிகர் மம்முட்டிக்கான காட்சிகள் அனைத்தும் இன்று வெற்றிகரமாக முடித்திருப்பதை 'நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ்' அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. 'பிரம்மயுகம்' படத்தின் படப்பிடிப்பு 17 ஆகஸ்ட் 2023 அன்று கொச்சி & ஒட்டப்பாலத்தில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. மீதமுள்ள ஷெட்யூல் நடிகர்கள் அர்ஜுன் அசோகன், சித்தார்த்பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோருடன் தொடரும். மொத்த படப்பிடிப்பும் அக்டோபர் நடுப்பகுதியில் நிறைவடையும்.
சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ். சஷிகாந்த் தயாரிக்கும் 'பிரம்மயுகம்' படத்தில் ஒளிப்பதிவாளராக ஷெஹ்னாத் ஜலால், தயாரிப்பு வடிவமைப்பாளராக ஜோதிஷ் சங்கர், எடிட்டராக ஷபீக் முகமது அலி, இசை கிறிஸ்டோ சேவியர், வசனம் TD ராமகிருஷ்ணன், மேக்கப் ரோனெக்ஸ் சேவியர் மற்றும் காஸ்ட்யூம்ஸ் மெல்வி ஜே ஆகியோர் பணிபுரிகின்றனர்.
மம்முட்டி நடித்துள்ள 'பிரம்மயுகம்' படத்தினை ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் பேனர் ஹாரர்-த்ரில்லர் வகைப் படங்களை மட்டுமே தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் ஆகும். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் வழங்கும் 'பிரம்மயுகம்' 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.
- பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ்.
- இந்த நிறுவனம் பல முன்னணி நடிகர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருவது ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 300 படங்களுக்கு மேல் தயாரித்துள்ள இந்த நிறுவனம் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்கள் பலரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை, வடபழனியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் ஸ்டுடியோவில் 'ஏ.வி.எம். ஹெரிடேஜ் மியூசியம்' உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பழைய மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறிய திரைப்பட தயாரிப்பு தொழில்நுட்ப கருவிகளையும், மிகப் பழமையான பாரம்பரியமிக்க, கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களையும் காட்சிக்காக வைத்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது இந்த மியூசியத்தில் நடிகர் அஜித்தின் பைக் இடம்பெற்றுள்ளது. அதாவது, 'திருப்பதி' படத்தில் அஜித் பயன்படுத்திய (பஜாஜ் பல்சர் 180சிசி 2004) பைக்கை மியூசியத்தில் இணைத்துள்ளதாக ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது. திருப்பதி படத்தை ஏ.வி.எம் புரொடக்ஷன் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
As we all know, #AK & bikes have always been something special... #AjithKumar Sir fans, you're in for a treat. The Bajaj Pulsar 180CC 2004, used by him in @avmproductions' 'Thirupathi' is now the latest addition to #AVMHeritageMuseum ❤️?@arunaguhan_ @avmmuseum @RIAZtheboss pic.twitter.com/C5zTrCuF4o
— AVM Productions (@avmproductions) September 16, 2023
- நடிகர் விஜய் சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்.
- விஜய் எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் உடல் நலக்குறைவு காரணமாக அறுவை சிகிச்சை செய்து ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜய் நேரடியாக தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இதைத்தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து நலம் விசாரித்தார்.
எஸ்.ஏ.சந்திரசேகர்- புஸ்சி ஆனந்த்
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரும் தனது வலைதள பக்கத்தில் இந்த புகைப்படத்தினை வெளியிட்டு 'பிள்ளைகள் ஒன்று சேரும்போது பெற்றோருக்கு மட்டுமல்ல மொத்த குடும்பத்திற்கே வலிமை கூடுகிறது' என்று பதிவிட்டுள்ளார்.
பிள்ளைகள் ஒன்று சேரும் போது
— S A Chandrasekhar (@Dir_SAC) September 15, 2023
பெற்றோருக்கு மட்டும் அல்ல
மொத்த குடும்பத்துக்கே
வலிமை கூடுகிறது.?? pic.twitter.com/OvXS9AZR2J
- நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து தனுஷ் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் தனுஷ், நடிகை ராதிகா மற்றும் சரத்குமாரை சந்தித்துள்ளார். அதாவது, ராதிகா - சரத்குமார் தம்பதியின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் ஷங்கர் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தில் நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
லீக்கான பாடல்
இந்நிலையில், 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஜாபிலம்மா' என்ற பாடல் ரிலீஸாகுவதற்கு முன்பே சமூக வலைதளத்தில் லீக்காகியுள்ளது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த பாடல் லீக்கானதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. மேலும், இந்த பாடலை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.