என் மலர்
சினிமா செய்திகள்
நடிகை ஹனிரோஸ் பாலியல் புகார்: கேரள தொழிலதிபருக்கு ஐகோர்ட்டு ஜாமீன்
- வயநாட்டில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.
- மனுவை விசாரித்த நீதிபதி, தொழிலதிபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல மலையாள நடிகை ஹனிரோஸ். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ள இவர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இந்தநிலையில் கேரளாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர், தன்னை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், உருவக்கேலி செய்தும், சமூக வலை தளத்தில் ஆபாசமாக பதிவிட்டும் அவமதித்து வருவதாக நடிகை ஹனிரோஸ் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
நடிகையின் இந்த பதிவிற்கு சமூகவலை தளங்களில் பலர் ஆபாசமான கருத்துக்களையும் பதிவிட்டனர். தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஆபாசமான கருத்து தெரிவித்தவர்களின் மீது எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலையத்தில் நடிகை ஹனிரோஸ் புகார் செய்தார். அதன் பேரில் 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
அதன் தொடர்ச்சியாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருந்த பிரபல நகைக்கடையின் உரிமையாளரான தொழிலதிபர் பாபி செம்மனூர் மீதும் நடிகை ஹனிரோஸ் புகார் கொடுத்தார். அதன் பேரில் தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
வயநாட்டில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். செம்மனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தொழிலதிபர் பாபி, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி கேரள ஐகோர்ட்டில் தொழிலதிபர் பாபி செம்மனூர் மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தொழிலதிபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் உருவ கேலி செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கருத்து தெரிவித்த நீதிபதி, விசாரணை அதிகாரி முன்பு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என்று தொழிலதிபருக்கு நிபந்தனை விதித்தார். நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும், கடைபிடிக்காவிட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.