search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வெட்கமா இல்லையா?.. கேரளா காங்கிரஸ் குற்றச்சாட்டை மறுத்த பிரீத்தி ஜிந்தா
    X

    வெட்கமா இல்லையா?.. கேரளா காங்கிரஸ் குற்றச்சாட்டை மறுத்த பிரீத்தி ஜிந்தா

    • பிரீத்தி ஜிந்தா தனது தனது சமூக ஊடக கணக்குகளை பாஜகவுக்கு விற்றுவிட்டார் என கேரளா காங்கிரஸ் குற்றச்சாட்டு
    • யாரும் எனக்காக எந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை என பிரீத்தி ஜிந்தா விளக்கம்

    பாலிவுட் நடிகையும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர்.

    இந்நிலையில், பிரீத்தி ஜிந்தா தனது ரூ.18 கோடி வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்காக தனது சமூக ஊடக கணக்குகளை பாஜகவுக்கு விற்றுவிட்டார் என்று கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    கேரளா காங்கிரசின் குற்றச்சாட்டை பிரீத்தி ஜிந்தா மறுத்துள்ளார்.

    இது தொடர்பான அவரின் எக்ஸ் பதிவில், "எனது சமூக ஊடக கணக்குகளை நான் தான் பயன்படுத்தி வருகிறான். அடிப்படையே இல்லாத பொய் தகவல்களை பரப்புவதற்கு உங்களுக்கு வெட்கமா இல்லையா? யாரும் எனக்காக எந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. ஒரு அரசியல் கட்சி என்னுடைய பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தி போலியான செய்திகளை பரப்புவதை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். 10 ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் குறிப்பிட்டுள்ள கடனை நான் திருப்பி செலுத்தி விட்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து பிரீத்தி ஜிந்தா மறுப்பு செய்திக்கு விளக்கம் கேட்டு கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    அந்த பதிவில், "பிரபலங்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளை ஐடி பிரிவிடம் ஒப்படைத்து நிர்வகிப்பதை போல் அல்லாமல் உங்கள் சமூக ஊடக கணக்குகளை நீங்களே நிர்வகிக்கிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.

    உங்கள் கடன் நிலை குறித்து தெளிவுபடுத்தியதற்கு நன்றி. நாங்கள் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். ஊடகங்கள் தெரிவித்த செய்திகளை தான் நாங்கள் பகிர்ந்தோம்.

    ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின்படி, ரிசர்வ் வங்கியில் நடக்கும் ஊழல்கள் குறித்து நியூ இந்தியா கூட்டுறவு வங்கியின் முன்னாள் ஊழியர்கள், 2020 ஜனவரியில் கடிதம் எழுதி எச்சரித்தனர். அந்த கடிதத்தில் உங்கள் பெயருடன் மேலும் பலர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    அதில், பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் ரூ.18 கோடி கடன் திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகள் இல்லாமல் தள்ளுபடி செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    நாங்கள் சேமிப்பை இழந்த பொதுமக்கள் பக்கம் நிற்கிறோம். இந்த தகவல்கள் தவறாக இருந்தால், அதற்கான ஆதாரத்துடன் சேமிப்பை இழந்த மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளது.

    Next Story
    ×