search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நான் நம்பாத விஷயத்தை அனைவரும் கண்டு அஞ்சும் அளவுக்கு படமாக எடுத்திருக்கிறேன்- மர்மர் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன்
    X

    நான் நம்பாத விஷயத்தை அனைவரும் கண்டு அஞ்சும் அளவுக்கு படமாக எடுத்திருக்கிறேன்- மர்மர் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன்

    • மர்மர் தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம்.
    • சிசிடிவி வீடியோவில் இருக்கும் காட்சிகள் அவர்கள் தரப்பு ஆவணமாக இருக்கும்.

    தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற வகையில் மர்மர் சாதனை படைக்க இருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி பெரும் பாராட்டை பெற்றது.

    இந்த நிலையில் மர்மர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், திரைப்படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், ஒலி வடிவமைப்பாளர் கெவின் ஃபிரடெரிக், படத்தொகுப்பாளர் ரோஹித் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் பேசியதாவது:-

    பல இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். நிறைய பத்திரிகையாளர் சந்திப்புகளை கடந்து வந்திருக்கிறேன். அங்கிருந்து பார்த்து கைத்தட்டி இருக்கிறேன்.

    அந்த வகையில், இங்கிருந்து பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. முதலில் அனைவருக்கும் வணக்கம். ஊடகம் இன்றி இங்கு எதுவும் இல்லை. அரசியல், நடிகர், இயக்குநர் என யாராக இருந்தாலும் அவர்களை அடையாளம் கண்டு முதலில் வெளிக்கொண்டு வரும்.

    அந்த வகையில், முதலில் உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. மர்மர் தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம். இதை பற்றி கொஞ்சம் விளக்கிக் கூறுகிறேன்.

    நான் நம்பாத விஷயத்தை அனைவரும் கண்டு அஞ்சும் அளவுக்கு படமாக எடுத்திருக்கிறேன்

    உதாரணத்திற்கு ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறினால், அதுபற்றிய விசாரணைக்கு முதலில் அங்கிருக்கும் சி.சி.டி.வி. வீடியோக்களை தான் முதலில் ஆய்வு செய்வார்கள். அந்த சிசிடிவி வீடியோவில் இருக்கும் காட்சிகள் அவர்கள் தரப்பு ஆவணமாக இருக்கும். அதை படமாக காண்பிக்கும் போது, அந்த ஆவணத்தை தான் நாங்கள் படமாக காண்பிக்கிறோம்.

    அமானுஷ்ய விஷயங்கள் சார்ந்த தகவல்களை பதிவிடும் ஏழு யூடியூபர்கள் ஜவ்வாது மலையில் இருக்கும் ஏழு கன்னிசாமிகள் மற்றும் மங்கை எனும் சூனியக்கார ஆவி சுற்றித்திரிவதை நேரடியாக பதிவு செய்ய செல்கிறார்கள்.

    அவர்களுக்கு என்ன ஆனது, அவர்கள் செல்லும் வழியில் காணால் போகின்றனர். அவர்களை கண்டுபிடிக்க செல்லும் காவல் துறையினர் உடைந்து கிடக்கும் கேமராக்களை பறிமுதல் செய்கின்றனர். அவ்வாறு கேமராக்களில் உள்ள காட்சிகளை ஆவணப்படமாக வெளியிடுகிறார்கள்.

    அதைத் தான் இந்தப் படத்தின் கதையாக வைத்திருக்கிறோம். இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. குகன் சார், பிரபாகரன் சார் நன்றி. நோயாளியாக வந்தீர்கள், தற்போது தயாரிப்பாளராக மாறியிருக்கிறீர்கள்.

    டிரெய்லரில் நடிகர்கள் கேமராவை அவர்களாகவே பிடித்து இயக்கிய படி பார்த்திருப்பீர்கள். உண்மையில், அவற்றை படம்பிடித்தது ஒளிப்பதிவாளர் தான். அவர்களின் கை அசைவுகளுக்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் கேமராவை இயக்க வேண்டும். இந்த ஒரே ஷாட் காட்சி எடுப்பதற்காக ஒருநாள் இரவு முழுக்க படப்பிடிப்பு நடத்தினோம். அதற்கு ஒளிப்பதிவாளர் குழுவை சேர்ந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    இந்தப் படத்தில் கடைசியாக இணைந்தவர் ஒலி வடிவமைப்பாளர் கெவின், ஆனால் அவர் சிறப்பாக பணியாற்றிக் கொடுத்தார். இந்தப் படத்திற்காக ஒலி வடிவமைப்பாளரை தேடுவதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த வகையில், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் பரிந்துரையில் எங்களுக்கு கிடைத்தவர் கெவின்.

    புதுமையான படங்களை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு மர்மர் சிறப்பான திரை அனுபவத்தை வழங்கும். கதாபாத்திரங்கள் வழியே ஆழமான மற்றும் மர்மங்கள் நிறைந்த கதையம்சம் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    உண்மைக்கும், கற்பனைக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை அழிக்கும் வகையில், பிரத்யேக ஸ்டைல் மற்றும் நுணுக்கங்களை கொண்டு இந்தப் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும். இந்தப் படம் வருகிற மார்ச் 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×