search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மீண்டும் வெடித்த மோதல்.. சிவகார்த்திகேயனின் அந்த பேச்சுக்கு காரணம் யார்?
    X

    மீண்டும் வெடித்த மோதல்.. சிவகார்த்திகேயனின் அந்த பேச்சுக்கு காரணம் யார்?

    • தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலக்கட்டத்திலேயே தயாரிப்பாளர் ஆனார் சிவகார்த்திகேயன்.
    • தனுஷ் தயாரிப்பில் உருவான எதிர்நீச்சல் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு வெற்றி படமாக அமைந்தது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து, நடிகராக மாறி இன்று முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த நடிகர் சிவகார்த்திகேயனை இயக்குநர் பாண்டிராஜ் "மெரினா" படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.

    இந்த படத்தில் ஒப்பந்தமாகும் முன்பே தனுஷ் உடன் "3" படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "மனம் கொத்தி பறவை", "கேடி பில்லா கில்லாடி ரங்கா" போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத் தொடர்ந்து தனுஷ் தயாரித்த "எதிர்நீச்சல்" படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்தார். இந்த படம் சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் மறக்க முடியாத அளவுக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தை இயக்குநர் வெற்றி மாறனிடம் துணை இயக்குநராக இருந்த துரை செந்தில்குமார் இயக்கினார்.


    "எதிர்நீச்சல்" வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் கொடுத்த பல்வேறு பேட்டிகளில் தனுஷ் பற்றி கருத்து தெரிவித்து வந்தார். அவ்வாறு பேசிய போது தனுஷ் எந்த நம்பிக்கையில் என் மீது இவ்வளவு முதலீடு செய்தார் என்று தெரியவில்லை. இப்படி முதலீடு செய்வதற்கு தைரியம் அதிகம் வேண்டும் என்று கூறியிருந்தார்.

    தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் வெற்றி பெற்று வந்தன. அதே அளவுக்கு அவர் படங்கள் தொடர்பான சர்ச்சைகளும் அவ்வப்போது எழுவதும் தொடர்கதையாக இருந்தது. ஒருபக்கம் சர்ச்சைகள் எழுந்த போதிலும், தொடர்ச்சியாக படங்களில் நடிப்பதை சிவகார்த்திகேயன் வழக்கமாக கொண்டிருந்தார். இப்படி இவர் நடித்த படங்களில் சில படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன.

    இடையில், நடிகர் தனுஷ் உடன் ஏற்பட்ட கருத்து மோதலால் இருவரும் பேசிக் கொள்வதில்லை என்று தகவல்கள் வெளியாகின. எதிர்நீச்சல் படத்தைத் தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடிக்க இருந்ததாகவும், கடைசியில் அந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

    தனுஷ் கொடுத்த வாய்ப்பு காரணமாகவே சிவகார்த்திகேயன் இத்தகைய வளர்ச்சி அடைந்துள்ளார் என்ற பேச்சுக்கள் கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருந்தன. எனினும், இது குறித்து தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. இருதரப்பும் மௌனம் காக்க, தனுஷ் சிவகார்த்திகேயன் பற்றிய பேச்சு இடையில் கொஞ்ச காலம் இல்லாமல் இருந்தது.


    மேலும் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் தமிழில் முன்னணி நடிகராக உயர்ந்தார். இதோடு, திரையுலகில் அறிமுகமான குறுகிய காலக்கட்டத்திலேயே தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார் சிவகார்த்திகேயன். இவர் தயாரிப்பில் வெளியான கனா படம் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்-ஐ சினிமாவில் அறிமுகம் செய்தார்.

    தொடர்ந்து நடிப்பு மற்றும் படத்தயாரிப்பு என சிவகார்த்திகேயன் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், இவர் தயாரித்துள்ள புதிய படமான "கொட்டுக்காளி" ரிலீசுக்கு தயாராகி உள்ளது. நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்துள்ளது.

    இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசியது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் கொட்டுக்காளி படத்தை தயாரித்ததன் மூலம், சிவகார்த்திகேயன் தனக்கு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து இருப்பதாக தெரிவித்தார்.


    இதற்கு பதில் அளித்து பேசிய சிவகார்த்திகேயன், "நான் யாரையும் கண்டுபிடித்து நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஏனென்றால் என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கிட்டார்கள்," என்று தெரிவித்தார். இவரது இந்த கருத்து நடிகர் தனுஷை நேரடியாக சாடுவது போல் இருக்கிறது என பலத்தரப்பினரும் கூறுகின்றனர்.

    சினிமாவில் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் தனுஷ் உதவியும், அதைப் பேற்றி சிவகார்த்திகேயன் பேசியவை பொதுவெளியில் உள்ளன. தற்போது காலமும், நேரமும் மாறியதால் பொதுவெளியில் இருப்பதை மறந்து சிவகார்த்திகேயன் பேசினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் இருதரப்பும் கருத்து தெரிவிப்பதை நீண்ட காலம் மறுத்து வந்துள்ளன.

    இத்தனை காலம் பேசப்படாமல் இருந்த விவகாரம், திடீரென பூதாகாரமாய் வெடிக்க யார் காரணம்? பின்னணியில் இருதரப்புக்கும் இடையில் என்ன நடக்கிறது? என பல கேள்விகளை எழுப்பத் தான் செய்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×