என் மலர்
சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியை தொடர்ந்து போண்டாமணிக்கு உதவிய தனுஷ்
- நகைச்சுவை நடிகர் போண்டாமணி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- இவரது சிகிச்சைக்கு விஜய் சேதுபதியை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது உதவி செய்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவரான போண்டாமணி, சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.
ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இடம்பெற்ற இவரின் காமெடி காட்சி இன்றளவும் ரசிகர்கள் விரும்பும் காட்சிகளில் ஒன்றாகவுள்ளது.
இதனிடையே நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக பிரிவில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. மாற்று சிறுநீரகம் பொருத்தும் வரையில் அவருக்கு சிகிச்சை அளிக்க மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஏற்பாடு செய்திருப்பதாகக் அறிவிக்கப்பட்டது.
நடிகர் பார்த்திபன், போன் மூலம் தொடர்புக் கொண்டு போண்டாமணியை நலம் விசாரித்து அவருக்கு தேவையான உதவியை செய்து வருகிறார். மேலும், வடிவேலு உடல் நலக்குறைவால் இருக்கும் நடிகர் போண்டா மணிக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வேன் என்று கூறினார். நடிகர் விஜய் சேதுபதி மருத்துவ உதவிக்கு ரூ.1 லட்சம் வழங்கினார்.
இந்நிலையில் சிறுநீரக பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டாமணிக்கு ரூ.1 லட்சம் வழங்கி நடிகர் தனுஷ் உதவி செய்துள்ளார். இவரின் இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.