என் மலர்
சினிமா செய்திகள்
பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தலைமறைவு
- தமிழ் திரையுலகில் முன்னணி சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்.
- சில தினங்களுக்கு முன்பு இவர் பெரியார் குறித்து பதிவிட்ட கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
1991-ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான சேரன் பாண்டியன் படத்தின் மூலம் திரையுலகிற்கு திரைப்பட சண்டை பயிற்சியாளராக அறிமுகமானவர் கனல் கண்ணன். அதன்பின்னர் நாட்டாமை, தேவா, முத்து, பூவே உனக்காக, அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். இவர் பணியாற்றும் படங்களில் அவ்வப்போது சண்டை காட்சிகளில் சிறு சிறு வேடங்களில் தோன்றி அனைவராலும் அறியப்பட்டார். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் பெரும்பாளான படங்களுக்கு இவர் பணியாற்றி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கனல் கண்ணன், பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதில், உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் பேசியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கருத்து குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. கலவரத்தை உண்டாக்கும் வகையில் கனல் கண்ணன் பேசியது கண்டிக்கத்தக்கது என்றும் இரு மதத்தினர் இடையில் மோதல் உண்டாக்கும் வகையில் அவர் பேசியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பின்னர் கனல் கண்ணனை கைது செய்வதற்காக அவருக்கு சொந்தமான வீடுகளில் காவல் துறையினர் தேடி வருகின்றனர். தற்போது அவர் தலைமறைவாகிவிட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.