என் மலர்
சினிமா செய்திகள்
என் படம் போல் இல்லை என்று சொன்னவர்களுக்காக டிடி ரிட்டன்ஸ் உருவாகியுள்ளது- டுவிஸ்ட் வைத்த சந்தானம்
- நடிகர் சந்தானம் தற்போது ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் பேசியதாவது, நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல இல்லையே என்று சொன்னவர்களுக்காக 'டிடி ரிட்டன்ஸ்' முழுக்க முழுக்க சந்தானம் படமாக எங்கள் குழுவினர் அனைவரின் ஒத்துழைப்போடு உருவாக்கி உள்ளோம். 'தில்லுக்கு துட்டு' முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன.
'டிடி ரிட்டன்ஸ்' மக்களின் மனங்களை கவரும் என்று நான் நம்புகிறேன். இதில் வரும் ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இயக்குனர் பிரேம் ஆனந்த் இப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கியுள்ளார். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இப்படம் இருக்கும். படத்திற்கு தங்கள் மேலான ஆதரவை வழங்குமாறு ரசிகப் பெருமக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.
மேலும், இயக்குனர் பிரேம் ஆனந்த் பேசியதாவது, இன்று உங்கள் முன்னால் இயக்குனராக நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் சந்தானமும், ராம்பாலாவும் தான். கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தது முதல் இன்று வரை சுமார் 18 ஆண்டுகளாக சந்தானமுடன் பணியாற்றிக் கொண்டு வருகிறேன். இதுவரை வந்த பேய் படங்களில் பார்த்தது எதுவும் இப்படத்தில் இருக்காது. 'டிடி ரிட்டர்ன்ஸ்' மிகவும் பிரஷ்ஷாக இருக்கும். இப்படத்திற்காக அயராது உழைத்த எங்கள் குழுவிற்கு மனமார்ந்த நன்றி என்று பேசினார்.