என் மலர்
சினிமா செய்திகள்
சினிமா பாணியில் காரின் மேல் அமர்ந்து சாகசம்: நடிகர் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு
- கார் மேல் அமர்ந்து சாகசம் செய்வது போன்று நடிகர் பவன் கல்யாண் காரில் சென்ற வீடியோ வைரலானது.
- இதையடுத்து ஆந்திரா, தாடேபள்ளி காவல் நிலையத்தில் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிக்காக அங்குள்ள கிராமத்தில் மக்கள் அதிகம் வசித்த பகுதிகள் இடித்து தள்ளப்பட்டன. இதனால் பெரும்பாலான கிராம வாசிகள் தங்களின் வீடுகளை இழந்தனர். இதையறிந்த ஆந்திரா முன்னணி நடிகரும், ஜனசேனா என்ற கட்சியை நடத்தி வருபவருமான பவன் கல்யாண், வீடுகளை இழந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இப்டாம் என்ற கிராமத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் காரில் சென்றார்.
அப்போது தனது ரசிகர்கள் புடைசூழ முக்கிய சாலை வழியாக காரின் மேற்கூரையில் சினிமா பாணியில் அமர்ந்து சென்றார். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. உடன் வந்தவர்கள் பாதுகாப்பற்ற முறையில் தொங்கிக் கொண்டே நின்று சென்றனர். மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த ரசிகர்கள் ஹெல்மெட் அணியாம் சென்றனர்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் அளித்த புகாரில், பொதுமக்களுக்கு அச்சத்தையும், இடையூறை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டி சென்றதாக கார் டிரைவர் மீதும், காரில் மேல் அமர்ந்து சென்ற நடிகர் பவன் கல்யாண் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
பவன்கல்யாண் தனது தொண்டர்களுடன் காரில் அஜாக்ரதையாக சென்றதில் தான் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்துவிட்டதாக சிவக்குமார் என்பவர் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.