என் மலர்
சினிமா செய்திகள்
கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவன பெயரில் மோசடி- 2 பேர் கைது
- நடிகர் கமல்ஹாசனின் 'ராஜ்கமல்' பிலிம்ஸ் பல படங்களை தயாரித்து வருகிறது.
- போலியான விளம்பரத்தை நம்பி பலர் பணத்தை செலுத்தியுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ்' நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் 'ராஜ்கமல்' பிலிம்ஸ் பல படங்களை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று போலி விளம்பரம் ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வந்தது. இந்த விளம்பரத்தை நம்பி பலர் பணத்தை செலுத்தியுள்ளனர். இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி சி.இ.ஓ நாராயணன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கைது செய்யப்பட்ட சுதாகர் மற்றும் புகழேந்தி
இந்நிலையில், கடலூரை சேர்ந்த புகழேந்தி மற்றும் விருத்தாசலத்தை சேர்ந்த சுதாகர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களை விசாரணை செய்ததில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, இவர்கள் பல வாட்ஸ்அப் குழுக்கள் வைத்து டிரெய்டிங் ஆலோசகராக செயல்பட்டு வந்துள்ளனர். இதில் பலர் பணத்தை இழந்ததால் இந்த பணத்தை மீட்பதற்கு இவர்கள் போலியான விளம்பரம் செய்து அதன் மூலம் பணம் சம்பாதித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுபோன்று பிரபலமான தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலி விளம்பரங்களை பரப்பி சுமார் மூவாயிரம் பேரிடம் ரூ.10 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவர்களை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.