என் மலர்
சினிமா செய்திகள்
மக்களுக்கு உதவியதற்காகவே ஜிகர்தண்டா-2 வெற்றிப்படமாக அமையும்- ராகவா லாரன்ஸ்
- 'ஜிகர்தண்டா 2' திரைப்படம் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது.
'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இப்படத்தின் முதல் பாடலான 'மாமதுர' பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது, 'ஜிகர்தண்டா -1' நான் பண்ணவேண்டியது. கதிரேசன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் கதை சொன்னார்கள். தெலுங்கு படத்தில் நான் பணியாற்றிக் கொண்டு இருந்ததால் அந்தப்படத்தை என்னால் செய்ய முடியவில்லை. நான் ரொம்ப மிஸ் பண்ணிவிட்டேன் என்று கவலைப்பட்டேன். அதற்கு கடவுள் கொடுத்த வாய்ப்பு தான் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'.
எனக்கு வாழ்க்கையில யாரெல்லாம் கற்றுக் கொடுக்கிறார்களோ அவர்களை நான் குரு என்று தான் சொல்லுவேன். பாலசந்தர் சார் கூட ஒரு படத்தில் பணியாற்றி இருக்கிறேன். ரஜினி சாரை நான் குரு என்று தான் சொல்லுவேன். கார்த்திக் சுப்பராஜும் இப்போது குரு தான். அவர் என்ன சொன்னாரோ அது தான் இந்தப்படம்.
கார்த்திக் சுப்பராஜ் இந்தப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கி உள்ளார். படப்பிடிப்பு நடைபெற்ற இடம் ஒன்றில் மக்களுக்காக சாலை அமைத்து தந்துள்ளார்கள். அடுத்தவர்களுக்கு உதவிய காரணத்திற்காகவே இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும். சந்தோஷ் நாராயணன் சாரோட பெரிய ரசிகன் நான். நிறைய மேடைகள் இருக்கிறது. இந்தப்படத்தை பற்றி நிறைய பேச வேண்டும். எஸ் ஜே சூர்யா சாருடன் நடித்தது மகிழ்ச்சி.