என் மலர்
சினிமா செய்திகள்
தேர்தல் வரும்போது காஷ்மீர் பைல்ஸ், தி கேரளா ஸ்டோரி உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்கள் வருகிறது.. சீமான் காட்டம்
- ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்தல் வரும்போது காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்கள் வந்தன.
- தற்போது கர்நாடக தேர்தலின் போது ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளிப்படுத்தி இருக்கிறது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்ட படம் 'தி கேரளா ஸ்டோரி'. இந்த படம் சென்னை உள்பட தமிழகத்தில் முக்கிய நகரங்களில் நேற்று வெளியானது. இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
இருப்பினும் நேற்று தென்மாநில எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 4 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 342 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் 2-வது நாளான இன்று 'தி கேரளா ஸ்டோரி' படத்தை தடை செய்ய கோரியும், படத்தில் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படுவதாக வரும் காட்சிகளை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
அதன்பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது, இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று தான் நாம் எல்லோரும் நம்பிக் கொண்டு இருக்கிறோம். தற்போது மதமே ஆட்சி செய்யும் போக்கை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இந்தியாவில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகளில் கொடும் போக்கு நிலவுகிறது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்தல் வரும்போது காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்கள் வந்தன.
கர்நாடக தேர்தலின் போது 'தி கேரளா ஸ்டோரி' படம் வெளிப்படுத்தி இருக்கிறது. பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசும்போது தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை கேட்பவர்கள் நாட்டில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் ஆவார்கள் என்று பேசுகிறார். இது போன்ற கொடுமை எங்காவது உண்டா? 2024 பாராளுமன்ற தேர்தலுக்கும் ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. 8 ஆயிரம் இந்துக் கோயிலை இடித்தவர், 27 தேவாலயங்களை இடித்தவர், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களை கொன்றவர், 2 ஆயிரம் பிராமணர்களை கொன்றவர் 'திப்பு' என்று ஒரு படம் தயாரிக்கப்பட்டு முன்னோட்டம் வந்துள்ளது.
அந்த படம் பாராளுமன்ற தேர்தலையொட்டி வெளிவரும். அதற்கும் நாங்கள் போராட்டம் நடத்துவோம். தி கேரளா ஸ்டோரி படம் உங்கள் மகள்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்ற கருத்தை மையப்படுத்துகிறது. நீங்களும் உங்கள் மகள்களை இந்த படத்தை பார்க்கவிடாமல் தடுத்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.