என் மலர்
சினிமா செய்திகள்
நடிகர் விஜய் மீது மர்ம நபர் காலணி வீச்சு- போலீசில் புகார்
- விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் சென்றிருந்தார்.
- அஞ்சலி செலுத்திவிட்டு விஜய் புறப்படும் பொழுது மர்ம நபர் ஒருவர் செருப்பை வீசினார்.
நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது. விஜயகாந்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. இவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் சென்றிருந்தார். அப்போது கண்கலங்கியபடி விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விஜய் புறப்படும் பொழுது மர்ம நபர் ஒருவர் செருப்பை வீசினார். அதுமட்டுமல்லாமல், விஜய்யை வெளியேறச் சொல்லி எதிர்ப்புகள் கிளம்பியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், நடிகர் விஜய் மீது செருப்பை வீசிய சம்பவம் தொடர்பாக தென் சென்னை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், கடந்த 28/12/ 2023 அன்று நடிகர் திரு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பிற்கு துக்கம் விசாரிப்பதற்காக இரவு சுமார் 10:30 மணி அளவில் தளபதி விஜய் அவர்கள், சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் திருமண மண்டபத்திற்கு வருகை தந்திருந்த தளபதி விஜய் அவர்களின் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காலணியை கழற்றி தளபதியை நோக்கி எரிந்துள்ளார்.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள், அவர்களின் சொந்தங்கள், மற்றும் அவர் மீது பாசத்தை வைத்துள்ள ஒட்டுமொத்த மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் அருவருக்கத்தக்க இம்மாதிரியான செயலில் ஈடுபட்ட, அந்த நபரை கண்டுபிடித்து அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் படியும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.