என் மலர்
சினிமா செய்திகள்

நானும் விஜய்யும் சேர்ந்து மற்றவர்களை காலி செய்வோம்.. அதிரடி காட்டிய சீமான்

- விஜய்யின் 'லியோ' படத்தில் இடம்பெற்ற நா ரெடி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
- இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று அதே சமயம் விமர்சனங்களும் எழுந்தது. இந்த பாடல் போதைப் பொருளை ஊக்கவிக்கும் வகையில் இருப்பதாகவும், விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. மேலும் இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து "நா ரெடி" பாடலின் லிரிக் வீடியோவில் புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரை கொல்லும் என டிஸ்க்ளைமர் (Disclaimer) இணைக்கப்பட்டது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவள்ளூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது விஜய் குறித்தும் விஜய்யின் அரசியல் குறித்தும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நடிகர் விஜய் நடித்த பெரும்பாலான படங்களில் புகைப்பது, மது குடிப்பது போன்று காட்சி உள்ளது. அப்போதெல்லாம் எதிர்க்காதவர்கள் இப்போது அவர் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர இருப்பது தெரிந்த பின்னர் அவரது படத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக விஜய் படத்தில் வருவதை மட்டுமே சுட்டிக் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை. விஜய் அரசியலுக்கு வருவது ஒரு சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜய் அரசியலுக்கு வருவது தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு ஆபத்து இல்லை. சீமானுக்குத் தான் ஆபத்து என பிரச்சினையை கிளப்புகிறார்கள்.
விஜய்யும் சீமானும் எப்போதும் அடித்துக் கொள்ளமாட்டார்கள். இரண்டு பேரும் சேர்ந்து மற்றவர்களை காலி செய்வோம். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 40 இடங்களில் தனித்துப் போட்டியிடும். அதில் 20 இடங்களில் பெண்களுக்கு ஒதுக்கப்படும். யாருடனும் கூட்டணி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.