என் மலர்
சினிமா செய்திகள்
ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் ஒரு ரூபாயை விவசாயிகளுக்கு கொடுப்பேன்- விஷால்
- நடிகர் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'.
- இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் நேற்று (செப்டம்பர் 15) திரையரங்குகளில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ரசிகர்கள் இப்படத்திற்கு அளித்த வரவேற்பைத் தொடர்ந்து நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மார்க் ஆண்டனி திரைப்படம் பிளாக் பஸ்டர் என்ற வார்த்தை கேட்கும் போதும் அனைவரும் பாராட்டும் போதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்கள் கொடுத்த காசிற்கு ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.
தமிழ்நாடு மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றரை வருட உழைப்பிற்கு பலன் கிடைத்தது போல இருக்கு. நான் முன்பே கூறியிருந்தது போல என் படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் ஒரு ரூபாயை விவசாயிகளுக்கு கொடுக்க கடமைப்பட்டுள்ளேன்" என்று கூறினார்.