என் மலர்
சினிமா செய்திகள்
விஷால் படப்பிடிப்பு வேன் கவிழ்ந்து விபத்து.. 4 பேர் படுகாயம்
- இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய திரைபடத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தூத்துக்குடி பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது, கிமரசக்கனாபுரம் கிராமத்திற்கு விஷால் குடிநீர் தொட்டி கட்டி கொடுத்தார்.
இந்நிலையில் காரைக்குடி பகுதியில் அடுத்த கட்ட படிப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படிப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து படப்பிடிப்பு குழுவினர் பல்வேறு குழுக்களாக காரைக்குடி புறப்பட்டு வந்துள்ளனர்.
இதில் படிப்பிடிப்பிற்கு தேவையான ஜெனரேட்டர், மின் விளக்கு உள்ளிட்ட படப்பிடிப்பு உபகரணங்கள் ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று காரைக்குடி நோக்கி வந்துள்ளது. இந்த வேனை திருவண்ணாமலை, சேத்துப்பட்டுவை சேர்ந்த நாதன்(வயது 23) என்பவர் ஓட்டி வந்துள்ளார். வேனில் படப்பிடிப்பு குழுவை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை சேர்ந்த மகேஷ்(33), சென்னை சாலி கிராமத்தை சேர்ந்த துரை(40) உள்ளிட்ட 4 பேர் வந்துள்ளனர்.
வேன் திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை, தஞ்சாவூர் பிரிவு ரோடு, ஈபி ஆபிஸ் எதிரே வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. டிரைவர் நாதன் வேனை நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால் அதற்குள் கட்டுப்பாட்டை இழந்த படிப்பிடிப்பு வேன் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்து 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருக்கோகர்ணம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையிலான போலீசார் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை போலீசார் சரி செய்தனர். படப்பிடிப்பு உபகரணங்கள் ஏற்றப்பட்ட வேன் என்பதால் பாரம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக வேனை அப்புறப்படுத்த கிரைன் வரவழைக்கப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் வேன் அப்புறப்படுத்தப்பட்டது.
விபத்து குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் டிரைவர் தூங்கியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.