search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தவெக-வில் இணைந்த வாழை பட நடிகர்
    X

    தவெக-வில் இணைந்த 'வாழை' பட நடிகர்

    • தவெக தலைவர் விஜய் கட்சி கொடியை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் அறிமுகப்படுத்தினார்.
    • வாழை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார் பொன்வேல்.

    'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியுள்ளார்.

    கட்சி கொள்கைகள், திட்டங்கள் பற்றி அறிக்கை வெளியிட்ட விஜய், 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு. முன்னதாக கட்சியின் ஆரம்ப கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். முதல் கட்டமாக கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவித்தார்.

    விஜய்யின் அறிவிப்பு கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு செயலி உருவாக்கப்பட்டு ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற தொடங்கியது.

    புதிய உறுப்பினர்கள் சேர்க்க தொடங்கிய சில தினங்களிலேயே லட்சக்கணக்கானோர் கட்சியில் புதிதாக உறுப்பினர்களாக சேர தொடங்கினர். கட்சியில் இளைஞர்களும், இளம் பெண்களும் அதிகமாக சேர்ந்தனர்.

    இதையடுத்து தவெக தலைவர் விஜய் கட்சி கொடியை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து விக்கிரவாண்டி வி.சாலை என்ற இடத்தில் கடந்த அக். 27-ந்தேதி மாநாடு நடந்தது. லட்சக்கணக்கானோர் திரண்ட இந்த மாநாடு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியது.

    இந்நிலையில் 'வாழை' படத்தில் சிவனணைந்தானாக நடித்த பொன்வேல் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

    இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'வாழை'. இந்தப் படத்தில், நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார் பொன்வேல்.

    சிவனணைந்தான் எனும் கதாபாத்திரத்தில் நடித்த பொன்வேல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். 'சிவனணைந்தான்' கேரக்டர் தான் வாழை படத்தின் மையப் பாத்திரம். இந்த கேரக்டரில் இயக்குநர் மாரி செல்வராஜின் உறவினரான பொன்வேல் நடித்து கவனம் ஈர்த்திருந்தார்.

    பொன்வேல் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட தவெக நிர்வாகிகள் முன்னிலையில், அவர் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு கட்சிக் கொடி அணிவித்து தவெக-வினர் வரவேற்றனர். தவெக-வில் இணைந்த நடிகர் பொன்வேலை, அக்கட்சித் தொண்டர்கள் வரவேற்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×