என் மலர்
கிரிக்கெட் (Cricket)
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சி.எஸ்.கே. பதிலடி கொடுக்குமா?
- சென்னை சூப்பர் கிங்சின் பந்துவீச்சு நிலை பரிதாபமாக உள்ளது.
- இரு அணிகளும் நாளை மோதுவது 30-வது போட்டியாகும்.
தர்மசாலா:
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.
நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 6 ஆட்டத்தில் சி.எஸ்.கே. 4-ல் வெற்றி (பெங்களூரு 6 விக்கெட், குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட் , ஐதராபாத் 78 ரன்) பெற்றது. இரண்டில் (லக்னோ 6 விக்கெட், பஞ்சாப் 7 விக்கெட்) தோற்றது. வெளியூரில் ஆடிய 4 போட்டியில் ஒன்றில் வெற்றி (மும்பை 20 ரன்) பெற்றது. 3 ஆட்டத்தில் ( டெல்லி 20 ரன், ஐதராபாத் 6 விக்கெட், லக்னோ 8 விக்கெட்) தோற்றது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 11-வது போட்டியில் பஞ்சாப் கிங்சை நாளை (5-ந் தேதி) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.
சேப்பாக்கத்தில் கடந்த 1-ந் தேதி நடந்த ஆட்டத்தில் தோற்றதற்கு சி.எஸ்.கே. பழிவாங்கும் ஆர்வத்தில் இருக்கிறது. பஞ்சாப் கிங்சுக்கு பதிலடி கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் 6-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
பிளே ஆப் சுற்றுக்கு நுழைய எஞ்சிய 4 ஆட்டங்களும் முக்கியமானது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
அதிரடி பேட்ஸ்மேன் ஷிவம் துபே கடந்த ஆட்டத்தில் டக்அவுட் ஆனதால் அணி போதுமான ரன்களை குவிக்கவில்லை. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் 1 சதம், 4 அரை சதத்துடன் 509 ரன் குவித்து இந்த தொடரில் முதல் இடத்தில் உள்ளார்.
நாளைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்சின் பந்துவீச்சு நிலை பரிதாபமாக உள்ளது. 5 பவுலர்கள் ஆடவில்லை.
14 விக்கெட் வீழ்த்திய முஸ்டாபிசுர் ரகுமான் சர்வதேச போட்டிக்காக வங்காளதேசம் திரும்பியுள்ளார். பதிரனா, தீக் ஷனா உலக கோப்பை விசா நடைமுறைக்காக இலங்கை சென்றுள்ளனர். தீபக் சாஹர் காயத்தில் உள்ளார். துஷார் தேஷ்பாண்டே காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது சி.எஸ்.கே.வுக்கு பாதிப்பே. நாளைய ஆட்டத்தில் பந்துவீச்சில் முழுமையான மாற்றம் இருக்கும்.
பஞ்சாப் கிங்ஸ் 4 வெற்றி , 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி சென்னையை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.
பஞ்சாப் அணியில் பேர்ஸ்டோ, ஷசாங்சிங், பிரப்சிம்ரன், அர்ஷ்தீப் சிங், கேப்டன் சாம் கரண், ரபடா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 30-வது போட்டியாகும். இதுவரை நடந்த 29 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 15-ல், பஞ்சாப் கிங்ஸ் 14-ல் வெற்றி பெற்றுள்ளன.
இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.