search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ராஜஸ்தான் ராயல்சுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுக்குமா? ஜெய்ப்பூரில் நாளை பலப்பரீட்சை
    X

    ராஜஸ்தான் ராயல்சுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுக்குமா? ஜெய்ப்பூரில் நாளை பலப்பரீட்சை

    • இரு அணிகளும் 28 முறை மோதியுள்ளன.
    • இதில் சி.எஸ்.கே. 15-ல் ராஜஸ்தான் 13-ல் வெற்றி பெற்றுள்ளன.

    ஜெய்ப்பூர்:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா அகமதாபாத்தில் கடந்த 31-ந் தேதி தொடங்கியது.

    இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் , நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் விளையாட வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    ஜ.பி.எல். கோப்பையை 4 முறை கைப்பற்றிய டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அகமதாபாத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் குஜராத்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    சேப்பாக்கத்தில் நடந்த 2-வது போட்டியில் 12 ரன் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது. மும்பையில் நடந்த 3-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற 4-வது போட்டியில் 3 ரன்னில் ராஜஸ்தானிடம் தோற்றது. பெங்களூரில் நடந்த 5-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 8 ரன்னில் வென்றது.

    சேப்பாக்கத்தில் நடந்த 6-வது போட்டியில் ஐதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடைபெற்ற 7-வது ஆட்டத்தில் 49 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சையும் வீழ்த்தியது.

    சி.எஸ்.கே. அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 8- வது ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்சை மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் ஜெய்ப்பூர் மான்சிங ஸ்டேடியத்தில் நாளை (வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    சென்னை அணி ஏற்கனேவ ராஜஸ்தானிடம் இந்த சீசனில் தோற்று இருந்ததால் அதற்கு பதிலடி கொடுக்குமா? என்று சி.எஸ்.கே. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    சென்னை அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வென்றது. இதனால் சி.எஸ்.கே. தனது அதிரடியை தொடர்ந்து வெளிப் படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ராஜஸ்தானை பழிதீர்த்து சி.எஸ்.கே. 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கில் கான்வே (314 ரன்), ருதுராஜ் கெய்க்வாட் (270), ரகானே (209) ஷிவம்துபே (184), ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். மேலும் கேப்டன் டோனி, அம்பதிராயுடு, ஜடேஜா, மொய்ன் அலி அதிரடியை வெளிப்படுத்தக் கூடியவர்கள்.

    பந்து வீச்சில் துஷ்கர் தேஷ் பாண்டே (12 விக்கெட்), ஜடேஜா (10 விக்கெட்) மொய்ன் அலி (7 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பதினா, தீக்ஷனா ஆகியோரும் நேர்த்தியாக பந்து வீசக்கூடியவர்கள்.

    ராஜஸ்தான் அ ணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி சென்னை சூப்பர் கிங்சை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. ராஜஸ்தான் தொடர்ச்சியாக 2 ஆட்டத்தில் தோற்றதால் நெருக்கடியில் உள்ளது.

    அந்த அணியில் பட்லர் (244 ரன்), ஜெய்ஷ்வால் (227 ரன்), ஹெட்மயர் (189ரன்), கேப்டன் சஞ்சு சாம்சன் (181 ரன்), படிக்கல் (165 ரன்), யசுவேந்திர சாஹல் (12 விக்கெட்), அஸ்வின, டிரென்ட் போல்ட் (தலா 9 விக்கெட்), சந்தீப் சர்மா (7 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் 28 முறை மோதியுள்ளன. இதில் சி.எஸ்.கே. 15-ல் ராஜஸ்தான் 13-ல் வெற்றி பெற்றுள்ளன.

    Next Story
    ×