என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அதிக ரன்களை கொடுத்து விட்டோம்- தோல்வி குறித்து ரோகித் சர்மா கருத்து

- நாங்கள் ஆட்டத்தை வெல்லும் அளவுக்கு சிறப்பாக ஆடவில்லை.
- ஸ்டோனிஸ் மிகவும் அபாரமாக பேட்டிங் செய்தார். ஆடுகளத்துக்கு ஏற்றவாறு தனது பேட்டிங் நுணுக்கத்தை மாற்றி கொண்டு விளையாடினார்.
லக்னோ:
ஐ.பிஎல் போட்டியில் லக்னோ அணி மும்பையை வீழ்த்தி 7-வது வெற்றியை பெற்றது.
லக்னோ மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்சுக்கு 178 ரன் இலக்காக இருந்தது.
மார்க்ஸ் ஸ்டோனிஸ் 47 பந்தில் 89 ரன்னும் (4 பவுண்டரி, 8 சிக்சர்), கேப்டன் குணால் பாண்ட்யா 42 பந்தில் 49 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பெகரன்டார்ப் 2 விக்கெட்டும், பியூஸ் சாவ்லா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் லக்னோ 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இஷான் கிஷன் 39 பந்தில் 59 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ரோகித் சர்மா 25 பந்தில் 37 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) டிம் டேவிட் 19 பந்தில் 32 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். பிஷ்னோய் , யாஷ் தாக்குர் தலா 2 விக்கெட்டும் , மோஷின்கான் 1 விக் கெட்டும் வீழ்த்தினார்கள்.
மும்பை இந்தியன்ஸ் 6-வது தோல்வியை தழுவியது.
இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
நாங்கள் ஆட்டத்தை வெல்லும் அளவுக்கு சிறப்பாக ஆடவில்லை. துரதிர்ஷ்டவசமாக நாங்கள் வெற்றி பெறுவதற்காக இருந்த சிறந்த முயற்சிகளையும் தவறவிட்டோம். ஆடுகளத்தை நன்றாக அறிந்துதான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தேன்.
178 ரன்கள் இலக்கை எடுக்ககூடிய பிட்ச் ஆகும். எங்களின் தொடக்கம் நன்றாக இருந்தது. ஆனால் முடிவு சரியாக அமையவில்லை.
எங்களது பந்து வீச்சில் கடைசி கட்டத்தில் அதிக ரன்களை கொடுத்துவிட்டோம். ஸ்டோனிஸ் மிகவும் அபாரமாக பேட்டிங் செய்தார். ஆடுகளத்துக்கு ஏற்றவாறு தனது பேட்டிங் நுணுக்கத்தை மாற்றி கொண்டு விளையாடினார்.
இதுவே எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அவரது ஆட்டம் பாராட்டுக்குறியது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
4-வது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் கடைசி லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை 21-ந் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பையில் சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அந் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.
லக்னோ 15 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 20-ந் தேதி எதிர்கொள்கிறது.