search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ரவீந்திர ஜடேஜா அசத்தல் - ரஞ்சி கோப்பையில் சவுராஷ்டிரா வெற்றிபெற 266 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தமிழ்நாடு
    X

    ரவீந்திர ஜடேஜா

    ரவீந்திர ஜடேஜா அசத்தல் - ரஞ்சி கோப்பையில் சவுராஷ்டிரா வெற்றிபெற 266 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தமிழ்நாடு

    • ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா அபாரமாக பந்து வீசினார்.
    • இதனால் தமிழக அணி 2-வது இன்னிங்சில் 133 ரன்னில் சுருண்டது.

    சென்னை:

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு, சவுராஷ்டிரா அணிகள் மோதும் கடைசி லீக் ஆட்டம் (பி பிரிவு) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது.

    முதலில் ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 324 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாபா இந்திரஜித், விஜய் சங்கர், ஷாருக்கான் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

    அதன்பின் முதல் இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்து இருந்தது. சிராக் ஜானி 14 ரன்னுடனும், சேத்தன் சகாரியா 8 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. சேத்தன் சகாரியா 9 ரன்னிலும், கேப்டன் ரவீந்திர ஜடேஜா 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய சிராக் ஜானி 49 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    இறுதியில், சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 192 ரன்னில் ஆட்டம் இழந்தது.

    தமிழக அணி தரப்பில் எம்.சித்தார்த், அஜித் ராம் தலா 3 விக்கெட்டும், சந்தீப் வாரியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    132 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 36.1 ஓவர்களில் 133 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 37 ரன்னும், பாபா இந்திரஜித் 28 ரன்னும் எடுத்தனர்.

    சவுராஷ்டிரா அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டும், தர்மேந்திரசிங் ஜடேஜா 3 விக்கெட்டும் சாய்த்தனர்.

    வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 5 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்பிய முதல் போட்டியிலேயே ரவீந்திர ஜடேஜா அசத்தியுள்ளார்.

    சவுராஷ்டிரா அணி வெற்றிபெற 266 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    2-வது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 4 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. சவுராஷ்டிரா அணி வெற்றிபெற மேலும் 262 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணி கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×