search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    T20 உலக கோப்பை: அமெரிக்காவுடன் பாகிஸ்தான் இன்று மோதல்
    X

    T20 உலக கோப்பை: அமெரிக்காவுடன் பாகிஸ்தான் இன்று மோதல்

    • பாகிஸ்தான் பயிற்சி ஆட்டமின்றி நேரடியாக உலகக் கோப்பையில் களம் காணுகிறது.
    • அமெரிக்கா இப்போது கவனிக்கக்கூடிய அணியாக மாறியுள்ளது.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு டல்லாஸ் நகரில் நடக்கும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, போட்டியை நடத்தும் அமெரிக்காவை (ஏ பிரிவு) எதிர்கொள்கிறது.

    சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த 20 ஓவர் தொடரில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் பயிற்சி ஆட்டமின்றி நேரடியாக உலகக் கோப்பையில் களம் காணுகிறது.

    கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இப்திகர் அகமது, பஹர் ஜமான் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பாகிஸ்தானின் பிரதான பலமே பந்து வீச்சு தான். வேகப்பந்து வீச்சாளர்கள் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், முகமது அமிர், அப்பாஸ் அப்ரிடி, சுழற்பந்து வீச்சாளர் ஷதப் கான் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

    சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் இமாத் வாசிம் விலா பகுதியில் காயத்தால் அவதிப்படுவதால் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று கேப்டன் அசாம் தெரிவித்தார்.

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 4,023 ரன்கள் எடுத்துள்ள பாபர் அசாமுக்கு அதிக ரன் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியை (4,038 ரன்) முந்துவதற்கு 16 ரன் மட்டுமே தேவை.

    இது குறித்து பாபர் அசாமிடம் கேட்ட போது, 'உலகக் கோப்பையை வெல்ல முயற்சிக்கவே இங்கு வந்துள்ளோமே தவிர, எனது தனிப்பட்ட சாதனை மைல்கல் குறித்து சிந்திப்பதற்காக அல்ல. சிறப்பாக விளையாடி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும். அது தான் முக்கியம். முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுள்ளோம்' என்றார்.

    அமெரிக்கா

    மோனக் பட்டேல் தலைமையிலான அமெரிக்கா தொடக்க ஆட்டத்தில் கனடாவுக்கு எதிராக 195 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து அசத்தியது. நியூசிலாந்து அணிக்காக விளையாடி விட்டு இடம்பெயர்ந்துள்ள ஆல்-ரவுண்டர் கோரி ஆண்டர்சன், முன்பு தென்ஆப்பிரிக்க ஜூனியர் அணிக்காக ஆடிய ஆன்ட்ரியாஸ் கவுஸ், இந்திய வம்சாவளியினர் கேப்டன் மோனக் பட்டேல், ஹர்மீத் சிங், சவுரப் நெட்ராவல்கர், பாகிஸ்தானில் பிறந்தவரான அலிகான் இப்படி பல நாட்டு வீரர்களின் கலவையாக உருவாகியுள்ள அமெரிக்கா இப்போது கவனிக்கக்கூடிய அணியாக மாறியுள்ளது.

    கடந்த ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் ஆரோன் ஜோன்ஸ் 94 ரன்கள் விளாசி, வெற்றிக்கு வித்திட்டார். உள்ளூர் சூழலில் விளையாடும் அமெரிக்க வீரர்கள் நிச்சயம் சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மல்லுக்கட்டுவது இதுவே முதல் முறையாகும்.

    இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு பிரிட்ஜ்டவுனில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நமிபியா- ஸ்காட்லாந்து அணிகள் ('பி' பிரிவு) சந்திக்கின்றன. நமிபியா தனது முதல் லீக்கில் சூப்பர் ஓவரில் ஓமனை பதம் பார்த்தது. அதே சமயம் ஸ்காட்லாந்து தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதியது.

    அந்த ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. ரிச்சி பெர்ரிங்டன் தலைமையிலான ஸ்காட்லாந்து வெற்றிக் கணக்கை தொடங்கும் ஆவலில் உள்ளது.

    Next Story
    ×