search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வெஸ்ட்இண்டீஸ் தொடரில் இருந்து விலகல்: இந்திய வீரர்கள் மீது கவாஸ்கர் பாய்ச்சல்
    X

    வெஸ்ட்இண்டீஸ் தொடரில் இருந்து விலகல்: இந்திய வீரர்கள் மீது கவாஸ்கர் பாய்ச்சல்

    • இந்திய போட்டிகளின் போது மூத்த வீரர்கள் ஓய்வெடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
    • ஐ.பி.எல். போட்டியின் போது ஓய்வு எடுக்கவில்லை.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசுக்கு சென்று ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடர்களில் விளையாட உள்ளது.

    இதில் 20 ஓவர் போட்டி தொடரில் மூத்த வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்த்திக் பாண்ட்யா, பும்ரா, ரிஷப் பண்ட், முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    20 ஓவர் போட்டியிலும் ஓய்வு அளிக்கும்படி விராட் கோலி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் மூத்த வீரர்கள் ஓய்வு எடுப்பதற்கு முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    இந்திய போட்டிகளின் போது மூத்த வீரர்கள் ஓய்வெடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நீங்கள் இந்தியாவுக்காக விளையாடுகிறீர்கள். ஐ.பி.எல். போட்டியின் போது ஓய்வு எடுக்கவில்லை.

    ஆனால் இந்தியாவுக்காக விளையாடும் போது ஓய்வு எடுக்கிறீர்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ஓய்வு பற்றி பேசாமல் இந்தியாவுக்காக விளையாட வேண்டும்.

    20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 20 ஓவர்கள் மட்டுமே உள்ளது. இது உங்கள் உடலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. டெஸ்ட் போட்டிகளில் மனமும், உடலும் சோர்வடையும். ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக பிரச்சினை இல்லை.

    இந்திய கிரிக்கெட்டில் ஓய்வு மிகவும் பொதுவாகி விட்டது. இந்த ஓய்வு கொள்கையில் கிரிக்கெட் வாரியம் தலையிட வேண்டிய நேரம் இது. இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    அனைத்து 'ஏ' கிரேடு வீரர்களும் மிக சிறந்த ஒப்பந்தங்கள் பெற்றுள்ளனர். ஒவ்வொரு போட்டியிலும் அவர்கள் பணம் பெறுகிறார்கள். நீங்கள் ஓய்வெடுக்க விரும்பினால் உங்களது உத்தரவாதங்களை குறைக்க வேண்டும்.

    பின்னர் ஓய்வெடுத்து கொள்ளுங்கள். நீங்கள் விளையாட விரும்பவில்லை என்கிற போது இந்திய அணிக்காக விளையாட விரும்பவில்லை என்று ஒருவரால் எப்படி கூற முடியும். இதற்காக ஓய்வு என்று கூறுகிறார்கள்.

    இதனால் தான் இந்த கருத்தை நான் ஏற்கவில்லை என்றார்.

    Next Story
    ×