என் மலர்
கிரிக்கெட் (Cricket)

100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த 2வது வீரராக வார்னர் சாதனை
- 8 ஆயிரம் ரன்னை எடுத்த 7-வது ஆஸ்திரேலிய வீரர் வார்னர் ஆவார்.
- வார்னர் இரட்டை சதம் அடித்ததும் மைதானத்தில் இருந்து காயத்தால் வெளியேறினார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்து இருந்தது. வார்னர் 32 ரன்னும், லபுஷேன் 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. வார்னர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 78-வது ரன்னை எடுத்தபோது 8 ஆயிரம் ரன்னை தொட்டார். தனது 100-வது டெஸ்டில் (183 இன்னிங்ஸ்) வார்னர் 8 ஆயிரம் ரன்னை எடுத்து முத்திரை பதித்தார்.
8 ஆயிரம் ரன்னை எடுத்த 7-வது ஆஸ்திரேலிய வீரர் வார்னர் ஆவார். ரிக்கி பாண்டிங் (13,378) ரன், ஆலன் பார்டர் (11,174), ஸ்டீவ் வாக் (10,927), கிளார்க் (8643), மேத்யூ ஹேடன் (8,625), ஸ்டீவ் சுமித் (8,543) ஆகியோர் வரிசையில் அவர் இணைந்தார்.
வார்னர் அபாரமாக ஆடி சதமும் அடித்தார். அவர் 144 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். வார்னருக்கு இது 25-வது சதமாகும். அவர் ஆலன் பார்டரை தொட இன்னும் இரண்டு சதமே தேவை.
லபுசேன் 14 ரன்னில் வெளியேறினார். அவர் இடத்துக்கு வந்த சுமித் வார்னருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுமித் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரை சதத்தை எடுத்தார்.
36 வயதான வார்னர் சத்ததை இரட்டை சதமான மாற்றினார். இதன் மூலம் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தி உள்ளார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடிக்காத வார்னர் அதை இரட்டை சதமாக மாற்றி அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 3வது இரட்டை சதத்தை வார்னர் அடித்துள்ளார்.
இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு அடிலெய்ட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 335 ரன்னும் (அவுட் இல்லை), 2015-ம் ஆண்டு பெர்த் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 253 ரன்னும் எடுத்து இருந்தார்.
மேலும், ஜோ ரூட்டுக்குப் பிறகு தனது 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்துள்ளார். கடந்த ஆண்டு சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான தனது 100-வது டெஸ்டில் ரூட் 218 ரன்கள் எடுத்திருந்தார்.
வார்னர் இரட்டை சதம் அடித்ததும் மைதானத்தில் இருந்து காயத்தால் வெளியேறினார். ஸ்டீவ் சுமித் 85 ரன்னில் ஆட்டம் இழந்தார்.