என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
அமிர்தகடேசுவரர் முக்கிய தகவல்கள்-20
- தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இத்தலத்து ஈசன் 110 வது இடத்தில் உள்ளார்.
- அமிர்த கடேஸ்வரரை வணங்கினால் மன அமைதி உண்டாகும். தொழில் விருத்தி, பதவி உயர்வு கிடைக்கும்.
1. திருக்கடையூர் அமிர்தகடேசுவரை அமிர்தலிங்கேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள்.
2. அமிர்தகடேசுவரர் மூலவராகவும் எமனை உதைத்து சம்ஹாரம் செய்த கால சம்ஹாரமூர்த்தி உற்சவராகவும் உள்ளனர்.
3. மார்க்கண்டேயன் உயிரைப் பறிக்க எமன் வீசிய பாசக்கயிறு அமிர்தகடேசுவரர் மீதும் பட்டது. அந்த தடம் இப்போதும் லிங்கத்தின் உச்சியில் உள்ளது. மூலவருக்கு பாலாபிஷேகம் செய்யும் போது அந்த வடு தெளிவாக தெரியும்.
4. சுயம்பு மூர்த்தியாக உள்ள இத்தலத்து மூலவர் ஒரு லிங்கம் தான் என்றாலும் அதை உற்றுப்பார்க்கும் போது பின்னால், இன்னொரு லிங்கம் பிம்பமாகத் தெரியும்.
5. அமிர்தகடேசுரர் இங்குள்ள வில்வவனத்தில் சுயம்பு மூர்த்தியாக உறைந்து இருப்பதை சோழ மன்னர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்து ஆலயம் கட்டினார்கள்.
6. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இத்தலத்து ஈசன் 110 வது இடத்தில் உள்ளார்.
7. உற்சவர் காலசம்ஹார மூர்த்தியை வழி பட எம பயம் நீங்கும்.
8. அமிர்த கடேஸ்வரரை வணங்கினால் மன அமைதி உண்டாகும். தொழில் விருத்தி, பதவி உயர்வு கிடைக்கும்.
9. தினமும் சாயரட்சை பூஜை நடக்கும் போது மட்டும் ஆதி வில்வ நாதருக்கு முதல் பூஜை செய்கிறார்கள். அந்த சன்னதிக்குள் மார்க்கண்டேயர், அமிர்தகடேசுவரருக்கு அபிஷேகதீர்த்தம் எடுக்க சென்ற குகைபாதை உள்ளதாகச் சொல்கிறார்கள்.
10. ஏராளமான சித்தர்கள் இங்கு வந்து அமிர்தகடேஸ்வரை வழிபட்டுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர் ஆவார்.
11. இத்தலத்து கால சம்ஹார மூர்த்தியை திருநாவுக்கரசர் தனது தேவாரப் பாடல்களில் 134 இடங்களில் பாடி இருக்கிறார்.
12. மேற்கே பார்த்த சிவாலயங்கள் மிக, மிக சக்தி வாய்ந்தவை என்பார்கள். திருக்கடையூரிலும் ஈசன் மேற்கு பார்த்த திசையில் தான் உள்ளார்.
13. திருக்கடையூர் மயானக் கோவிலுக்கு அருகில் காசி தீர்த்தம் எனும் கிணறு உள்ளது. தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து தான் தண்ணீர் கொண்டு மரகத லிங்கத்துக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.
14. இத்தலத்தில் தினமும் 6 கால பூஜைகள் நடத்தப்படுகிறது.
15. அமிர்தகடேசுவரருக்கும், கால சம்ஹாரமூர்த்திக்கும், அன்னை அபிராமிக்கும் காரண, காமிக, ஆகம விதிமுறைகள் படி நித்திய பூஜை நடத்தப்படுகிறது.
16. அமிர்கடேசுவரரை வணங்க வருபவர்கள் அவருக்கு மட்டுமின்றி கால சம்ஹார மூர்த்தி மற்றும் அபிராமிக்கும் அர்ச்சனை செய்ய தேங்காய் தட்டுகள் வாங்கி வருவது வழக்கமாக உள்ளது. இதற்காகவே திருக்கடையூரில் உள்ள கடைகளில் அர்ச்சனை தட்டுகளில் தலா 3 தேங்காய்கள் வைத்தே விற்பனை செய்கிறார்கள்.
17. திருக்கடையூர் புறநகரில் தமிழக அரசு ரூ. 2 கோடி செலவில் மிகப்பெரிய தங்கும் விடுதியை கட்டி உள்ளது.
18. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இலங்கை, பர்மா, இந்தோனேசியா, மலேசியா உள்பட தமிழர்கள் வாழும் நாடுகளில் அமிர்தலிங்கம் என்ற பெயர் பரவலாக உள்ளது. இந்த பெயர் இந்த தலத்தின் ஈசனை வைத்தே பரவியதாக சொல்கிறார்கள்.
19. இத்தலத்தின் 2வது பிரகாரத்தில் ரூ. 1 கோடி செலவில் பெரிய மண்டபம் கட்டி வருகிறார்கள். அந்த பணி முடிந்ததும் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளை அந்த மண்டபத்துக்கு மாற்ற திட்டமிட்டுள்ளனர். இதனால் முதல் பிரகாரத்தில் பக்தர்கள் குவிவது குறையும். அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் மற்ற சாதாரண பக்தர்கள் ஈசனை வழிபட்டு செல்ல தங்கு தடையற்ற சூழ்நிலை உருவாகும்.
20. இத்தலம் தருமை ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த ஆதீனம் சார்பில் ஏராளமான திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.