search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பொங்காலை விழா நடப்பது எப்படி?
    X

    பொங்காலை விழா நடப்பது எப்படி?

    • கருவறையில் உள்ள விளக்கில் இருந்து தீ எடுத்து வந்தே, ‘பண்டார அடுப்பு’ பற்ற வைக்கிறார்கள்.
    • இந்த அடுப்பில் இருந்து செய்யப்பட்ட பொங்கலிலே அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.

    ஆற்றுகால் பகவதி அம்மன் ஆலயத்தில் பொங்காலைத் திருவிழா 10 நாள் உற்சவமாக கொண்டாடப் படுகிறது.

    முதல் நாளில் கண்ணகி கதை பாடலாகப் பாடப்பெறும்.

    அதோடு கொடுங்கல்லூர் பகவதியை ஆவாகனம் (அழைத்து வந்து) செய்து, 10 நாள் குடியிருக்கும்படி செய்வார்கள்.

    விழா நடைபெறும் 10 நாட்களிலும் இரவு தீபாராதனை முடிந்து நடை மூடுவதற்கு முன்பாக, பலவித வண்ண காகிதங்களாலும், குருத்தோலைகளாலும், தீப விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மனை அமரச் செய்து, நடனமாடியபடி கோவிலைச் சுற்றிவருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

    திருவிழாவின் ஒன்பதாவது நாள், உலக பிரசித்திப் பெற்ற ஆற்றுக்கால் பொங்கல் விழா நடைபெறும்.

    பொங்கல் வைக்கும் நிகழ்வு முறையாக செய்யப்படும்.

    தந்திரி, கருவறையில் இருந்து தீபம் ஏற்றி அதை மேல்சாந்தி என்று அழைக்கப்படும் தலைமை பூசாரியிடம் கொடுப்பார்.

    அவர் அதைப் பெற்று, கோவில் வளாகத்தில் உள்ள பொங்கல் அடுப்பில் தீ மூட்டுவார்.

    பின்னர் அதே தீபச் சுடரை, சக பூசாரியிடம் வழங்குவார். அவர் கோவிலின் முன்பு உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டுவார்.

    தொடர்ந்து மற்ற அனைத்து பொங்கல் அடுப்புகளிலும் தீ மூட்டப்படும்.

    இதற்கான அறிவிப்புக்காக செண்டை மேளமும், வெடிமுழக்கமும், வாய்க்குரவையும் ஒலிக்கப்படும்.

    அந்த ஒலி கேட்டு, பெண்கள் அனைவரும் பொங்கல் வைப்பதற்காக, அடுப்பை மூட்டுவர்.

    குறிப்பிட்ட வேளையில் கோவிலில் நியமனம் செய்யப்பட்ட பூசாரிகள், புனித தீர்த்தம் தெளித்து பொங்கல் நைவேத்தியம் படைப்பார்கள்.

    அப்போது விமானம் மூலமாக வானத்தில் இருந்து மலர் தூவப்படும்.

    இந்த நிகழ்ச்சியின் போது கோவில் உள்ளேயும் பகவதிக்கு பொங்கல் விடுகிறார்கள்.

    அந்த அடுப்பிற்கு 'பண்டார அடுப்பு' என்று பெயர்.

    கருவறையில் உள்ள விளக்கில் இருந்து தீ எடுத்து வந்தே, 'பண்டார அடுப்பு' பற்ற வைக்கிறார்கள்.

    இந்த அடுப்பில் இருந்து செய்யப்பட்ட பொங்கலிலே அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.

    பொங்கல் திருவிழா முடிந்த அன்றைய தினம் இரவு, ஆற்றுக்கால் பகவதி அம்மன், மணக்காடு என்ற இடத்தில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு எழுந்தருள்வாள்.

    ஊர்வலம் செல்லும் வழியெங்கும் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்.

    குத்துவிளக்கேற்றி, பூஜை பொருட்கள் சமர்ப்பித்து வழிநெடுகிலும் அம்மனுக்கு பக்தர்கள் வரவேற்பளிப்பார்கள்.

    சாஸ்தா கோவிலுக்கு செல்லும் ஒன்றரை கிலோமீட்டர் தூரமும் அலங்கார வண்டிகள் மற்றும் கண்ணைக் கவரும் பல்வேறு களியாட்டங்கள், மேளதாளம், பஞ்சவாத்தியம், நாதஸ்வர இசை முழங்க ஊர்வலம் செல்லும்.

    மறுநாள் அதிகாலை சாஸ்தா கோவிலில் பூஜை முடிந்தபின், அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் தன் இருப்பிடத்தை வந்து சேர்வாள், ஆற்றுக்கால் பகவதி அம்மன்.

    Next Story
    ×