search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உலக இரட்சகர் பெருங்கோவில் - திருச்சி
    X

    உலக இரட்சகர் பெருங்கோவில் - திருச்சி

    உலக இரட்சகர் பெருங்கோவில் (Basilica of the Holy Redeemer, Tiruchirapalli) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஐந்து உரோமன் கத்தோலிக்க இணைப் பெருங்கோவில்களுள் ஒன்று ஆகும்.
    உலக இரட்சகர் பெருங்கோவில் (Basilica of the Holy Redeemer, Tiruchirapalli) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஐந்து உரோமன் கத்தோலிக்க இணைப் பெருங்கோவில்களுள் ஒன்று ஆகும்.

    வரலாறு  :

    17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரையை மையமாகக் கொண்டு கிறித்தவ மறையைப் பரப்பும் பணியை மேலைநாட்டு இயேசு சபையினர் மேற்கொண்டனர். அந்த முயற்சியின் பயனாக உருவான கோவில்களுள் ஒன்று "உலக இரட்சகர் பெருங்கோவில்" ஆகும். திருச்சி பகுதியில் முதல் கிறித்தவ சபை 1616இல் தோன்றியது.

    ஐரோப்பிய மறைபரப்புநர் மதுரை நாயக்க மன்னர்களின் ஆதரவைப் பெற்றனர். மதுரை மறைபரப்பு மாநிலத்தில் பணிபுரிந்த பல குருக்களுள் "தத்துவ போதகர்" என்ற சிறப்புப் பெயர் பெற்ற இராபர்ட் தெ நோபிலி மற்றும் வீரமாமுனிவர் போன்றோர் அடங்குவர்.

    திருச்சி நகரத்தைச் சார்ந்த பல பகுதிகளும் மதுரை மறைமாநிலத்தின் கீழ் இருந்த போது பாலக்கரை, தர்மநாதபுரம், வரகனேரி போன்ற இடங்களில் கிறித்தவ சமூகங்கள் எழுந்தன. உலக இரட்சகர் கோவில் கட்டப்படுவதற்கு முன்னரே அப்பகுதியில் சுமார் 7500 கிறித்தவர்கள் இருந்தனர். அவர்கள் திருச்சி மறைமாவட்டக் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தனர். அருகிலிருந்த வியாகுல மாதா கோவில் அப்பொழுது போர்த்துகீசிய ஆதரவாக்கத்தின் (Portuguese Padroado) கீழ் இருந்ததால் அங்கு வழிபட மக்கள் செல்லவில்லை.

    பாலக்கரை பகுதியில் வாழ்ந்த கிறித்தவ மக்களுக்கு ஒரு வழிபாட்டிடம் தேவை என்பதை உணர்ந்த ஆயர் அலெக்சிஸ் கனோஸ், சே.ச., புதிய கோவில் கட்டடத்திற்கான அடிக்கல்லை 1880, பெப்ருவரி 9ஆம் நாள் நாட்டினார்.

    கட்டட வேலை முடிந்து, உலக இரட்சகர் கோவில் 1881, சூன் 29ஆம் நாளில் அர்ச்சித்து அர்ப்பணிக்கப்பட்டது. அந்த நிகழ்வைப் புதுச்சேரி ஆயர் ஃபிரான்சிசு-ஷான்-மரி லூனன் என்பவர் நடத்த, திருச்சி ஆயர் அலெக்சிஸ் கனோஸ், சே.ச. விழாவில் பங்கேற்றார்.

    கோவில் கட்டுவதற்கான நிலத்தை திவான் காஞ்சமலை முதலியார் என்பவர் வழங்கியிருந்தார்.

    இடைவிடா சகாயமாதா பக்தி :

    1957ஆம் ஆண்டு உலக இரட்சகர் கோவிலில் இடைவிடா சகாய மாதா பக்தி வளரத் தொடங்கியது. அருள்திரு ஏ. தாமசு என்பவர் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்த அந்தக் காலக்கட்டத்தில் உலக இரட்சகர் சபையைச் சார்ந்த அருள்திரு ஃபிரான்சிசு என்பவர் பங்குத் தளத்தில் இடைவிடா சகாய மாதா நவநாள் பக்திமுயற்சியை அறிமுகப்படுத்தினார்.

    அப்பக்தி முயற்சி இன்றுவரை சிறப்பாகத் தொடர்கிறது. நவநாளில் பல நூறு மக்கள், கிறித்தவரும் கிறித்தவரல்லாதவர்களுமாகக் கலந்துகொண்டு அன்னையின் அருளை இறைஞ்சுகின்றனர். வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் இந்த நவநாளும் செபங்களும் நிகழ்கின்றன. எனவே சிலவேளைகளில் இக்கோவிலை "இடைவிடா சகாயமாதா கோவில்" என்னும் பெயர்கொண்டே அழைக்கின்றனர்.

    இணைப் பெருங்கோவிலாக அறிவிக்கப்படுதல் :

    இக்கோவிலின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அக்கோவிலைப் பெருங்கோவில் என்று அறிவிக்க வேண்டும் என்று பங்குத்தந்தை ஏ. கபிரியேல் என்பவரும், திருச்சி ஆயரான மேதகு டோணி டிவோட்டா என்பவரும் உரோமைக்கு விண்ணப்பித்தனர்.

    அவர்களின் வேண்டுகோளை ஏற்று, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2013, அக்டோபர் 12ஆம் நாள் உலக இரட்சகர் கோவிலை "இணைப் பெருங்கோவில்" (minor basilica) என்னும் நிலைக்கு உயர்த்தினார்.

    இக்கோவிலின் உட்சுவர்களில் பல அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும், பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கின்றன.

    Next Story
    ×