என் மலர்
தோஷ பரிகாரங்கள்
சர்வ தோஷங்களையும் போக்கும் ஆலங்குடி குருபகவான் கோவிலில் பரிகாரம் செய்யும் முறை
- நவக்கிரகங்களில் உள்ள குருபகவானுக்கு பரிகார தலமாக இந்த கோவில் உள்ளது.
- முற்பிறவியில் செய்த பாவத்தின் தீய விளைவுகள் நீங்கும் என்பது ஐதீகம்.
சோழ வளநாட்டில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடி என்ற ஊரில் ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. சோழ வள நாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரிக்கு தென் கரையில் உள்ள 127 தலங்களில் 98-வது தலமாக இந்த கோவில் விளங்குகிறது.
சர்வ தோஷங்களையும் போக்கும் இந்த கோவிலுக்கு வந்து முறையாக வழிபடுபவர்களுக்கு முற்பிறவியில் செய்த பாவத்தின் தீய விளைவுகள் நீங்கும் என்பது ஐதீகம்.
நவக்கிரகங்களில் உள்ள குருபகவானுக்கு பரிகார தலமாக இந்த கோவில் உள்ளது. இக்கோவிலின் தல விருட்சம் பூளைச்செடி ஆகும்.
இக்கோவிலுக்கு 14 தலைமுறைகள் புண்ணிய பேறு பெற்றவர்களே வருகை தர இயலும். முதலில் கலங்காமற் காத்த விநாயகரை வணங்கி பின்னர் கொடி மரம் சென்று அங்குள்ள துவஜ கணபதியை வணங்கி நேராக சென்று சாமியை (ஆபத்சகாயேஸ்வரர்) தரிசிக்க வேண்டும்.
பின்னர் குரு தெட்சிணாமூர்த்தியை வணங்கி சங்கல்பம் செய்து அர்ச்சனை போன்றவற்றை முடித்து பிரகாரத்தில் உள்ள சோமாஸ்கந்தர், முருகன், மகாலெட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், உற்சவர் குருமூர்த்தி ஆகியோரை வழிபட்டு ஏலவார் குழலி அம்மை மற்றும் சனிபகவானை தொழுது கொடிமரத்தில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
தொடர்ந்து குருபரிகாரமாகிய 24 நெய் தீபங்களை தீபம் ஏற்றும் இடத்தில் ஏற்றி கோவிலை 3 முறை வலம் வந்து ஒவ்வொரு முறையும் கொடி மரத்தின் கீழே விழுந்து நமஸ்காரம் செய்து பரிகாரத்தை நிறைவு செய்ய வேண்டும்.
ஆலங்குடி குருபகவான் கோவில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு வடக்கே 7 கிலோ மீட்டர் தொலைவிலும், கும்பகோணம்-மன்னார்குடி பஸ் மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.