என் மலர்
முக்கிய விரதங்கள்
இன்று ஆனி திருமஞ்சனம்... விரதம் இருந்தால் விருப்பங்கள் நிறைவேறும்...
- ஆனித்திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள்.
- தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும்.
சிவபெருமானின் 64 மூர்த்தி வடிவங்களில் ஒன்று, நடராஜர் வடிவம். உலகை தன் உள்ளங்கால் பிடியில் சுழல வைக்கும் தத்துவத்தை உணர்த்தும் ஒப்பற்ற உருவமாக நடராஜர் வழிபடப்பட்டு வருகிறார். இந்த நடராஜருக்கு மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம், சித்திரை திருவோணம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி, மாசி வளர்பிறை சதுர்த்தசி ஆகிய நாட்கள் என வருடத்திற்கு ஆறு முறை அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த 6 நாட்களில் மார்கழி திருவாதிரையும், ஆனி உத்திரமும் சிறப்பு வாய்ந்தவை. இவ்விரண்டு விழாக்களும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பிரம்மோற்சவமாக மொத்தம் 10 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
'திருமஞ்சனம்' என்ற சொல்லுக்கு 'புனித நீராட்டல்' என்று பொருள். ஆனி திருமஞ்சனம் என்பது ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடராஜபெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் ஆராதனையைக் குறிக்கும். ஆனி மாத கார்த்திகை நட்சத்திரத்தில் இந்த ஆனி திருமஞ்சன விழா தொடங்குகிறது.
இன்று நாள் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று நடராஜரை வழிபாடு செய்தால் விருப்பங்கள் நிறைவேறும். நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்களை மட்டும் உண்டும் உபவாசம் இருக்கலாம்.
விரதம் இருந்து ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள். தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். ஆண்களுக்கு மனதில் தைரியமும், உடல் பலமும், செல்வ வளமும் கூடும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்கவும் இந்த விழா நடத்தப்படுகிறது.