என் மலர்
முக்கிய விரதங்கள்
இன்று விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி... விரதம் இருந்தால் தோஷங்கள் நீங்கும்...
- இன்று மாலை லட்சுமி, மகாவிஷ்ணுவுக்கு பசும்பால் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
- பரிவர்த்தன ஏகாதசி விரதம் இருப்பதால் சகல தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும்.
சயன ஏகாதசி தினத்தன்று படுக்கையில் படுத்த மகா விஷ்ணு சற்று புரண்டு படுப்பதை பரிவர்த்தனை ஏகாதசி என்று சொல்வார்கள். இன்று (செவ்வாய்க்கிழமை) பரிவர்த்தன ஏகாதசி தினமாகும். இன்று மாலை லட்சுமியுடன் மகாவிஷ்ணுவுக்கு பசும்பால் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
இந்த ஏகாதசி திதியில்தான் பகவான் வாமன அவதாரம் எடுத்தார். எனவே இன்று அவசியம் எல்லோரும் ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது நல்லது. விஷ்ணுவின் அனுக்கிரகத்தை பெற்றுத் தரும் இந்த பரிவர்த்தன ஏகாதசி விரதத்தை குழந்தைகள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள், திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆனவர்கள், துறவிகள் என அனைவரும் அனுஷ்டிக்கலாம்.
இதற்கு பத்ம ஏகாதசி என்றும் ஒரு பெயர் உண்டு. இன்று மாலை 4.46 மணி வரை பூராட நட்சத்திரத்தில் வருவதால் ஸ்ரீமகாலட்சுமி தாயாரையும் அர்ச்சனை செய்து வணங்க வேண்டும். இன்று பரிவர்த்தன ஏகாதசி விரதம் இருப்பதால் சகல பாவங்களையும், தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும்.
ஏகாதசி இரவு பெருமாள் ஆலயங்களுக்கு சென்று வணங்கி, ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு புராணம் முதலிய நூல்களை வாசித்து, அடுத்த நாள் (புதன்கிழமை) துவாதசியில் தூய்மையான உணவு சமைத்து, பெருமாளுக்கு படைத்து விட்டுச் சாப்பிட வேண்டும்.
இதற்கு துவாதசி பாரணை என்று பெயர். ஏகாதசி விரதம், துவாதசி பாரணையோடுதான் முடிகிறது. இந்த துவாதசி, சகல வெற்றிகளையும் கொடுப்பது என்பதால், விஜய துவாதசி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.