search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆலையம்மன் கோவில்
    X
    ஆலையம்மன் கோவில்

    அருள்மழை பொழியும் ஆலையம்மன் கோவில்

    வன்னிய தேனாம்பேட்டையில் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்து ஆலயத்தில் அருளாட்சி புரிகிறாள் அருள்மிகு ஆலையம்மன். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சுமார் 300 வருடங்களுக்கு முன்பு இப்போதுள்ள மாம்பலம், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய மூன்று பகுதிகளும் சேர்ந்து மிகப்பெரிய ஏரியாக இருந்தது. சுற்றிலும் கொய்யாத்தோப்பு நிறைந்திருந்தது. கோவில் கொண்டிருந்த இடம் அப்போது ஏரிக்கரையாக இருந்தது. கரையோரமாக சில குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்தன.

    அப்போது பலத்த மழை பெய்து, வெள்ளம் கரை புரண்டது. அந்த வெள்ளத்தில் ஒரு கல் ஆடி ஆடி அசைந்து வந்தது. துணி வெளுக்கச் சென்ற சலவைத் தொழிலாளி, வெள்ளத்தால், கரை மறைக்கப்பட்டு துணி துவைக்க முடியாமல் அவதிப்பட்டார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளமாக காட்சி அளிக்க அதை நோட்டமிட்ட சலவைத் தொழிலாளி வெள்ளத்தில் கல் மிதந்து வருவதை கண்டதும் வியப்பில் தன்னை மறந்து நின்றார்.

    மிதந்து வந்த கல்லை கரை சேர்த்து கரையில் நிறுத்தினார். அழுக்கு மூட்டையை அவிழ்த்து ஏரி நீரில் நனைத்து அந்த கல் மீது துணியை அடித்து துவைக்க ஆரம்பித்தார். திடீரென அவருடைய கைகள் வலித்தன. இதனால் அவர் அந்த கல்லில் துணிகள் அடிப்பதை நிறுத்தினார். கல் மீது இருந்த துணிகளை உற்றுப்பார்த்தார். அந்த துணியில் பொட்டு பொட்டாய் ரத்த துளிகள்.

    சலவைத் தொழிலாளிக்கு வியர்த்துக் கொட்டியது. துணியால் முகத்தை துடைத்துக் கொண்டார். அந்த துணியில் ரத்தக்கறை இருந்ததை பார்த்ததும் அவருக்கு வியப்பு மேலிட்டது. தவிர மூக்கு வழியாக வாயோரமாக ரத்தம் வேறு வடிந்து கொண்டிருந்தது.

    இதைப் பார்த்ததும் பதறிப் போனார். தனக்கு அந்திமக் காலம் நெருங்கி விட்டதோ என்று கூட ஒரு கணம் பயந்தார். தலையைச் சுற்றுவதுபோல இருக்கவே மெதுவாக கரையோரமாக நடந்தார். ஒரு இடத்தில் சென்று அமைதியாக அமர்ந்து கொண்டார். அவரது கண்கள் சோர்வுடன் மூடின. கைகளும் கால்களும் தள்ளாடிய நிலையில் இருந்தன. அந்த நேரம் ஊர் நாட்டாமைக்காரர் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த அந்த பெண்மணி கல்லாய் நின்றாள். வீட்டில் இருந்தவர்கள் இதைக் கண்டு பதறி ஓடோடி வந்து என்னம்மா என்னாச்சு, உடம்புக்கு என்ன? என்று கேட்டனர்.

    அதற்கு அந்த பெண் தண்ணீர் கரையிலே சலவைத் தொழிலாளியின் துரிக்கல்லாக இருக்கிறேன். போ... போய் எனக்கு ஒதுக்குப்புறமாக ஒரு இடம் பண்ணிக் கொடு. நீர், நெருப்பு, ஆபத்து வராமல் உங்களை காப்பாற்றுகிறேன் என்று அன்னை பராசக்தியின் அருள்வாக்காய் உதிர்த்தாள்.

    இதைக் கேட்டதும் அந்த கிராமமே தீர்த்தக் கரைக்கு ஓடோடி வந்தது. மயங்கிய நிலையில் இருந்த சலவைத் தொழிலாளி அருகே கிடந்த துரிக்கல்லைப் பார்த்தார்கள். தானே புரண்டு விழுந்தது அக்கல். இதைக் கண்டதும் ஊர்க்காரர்களுக்கு ஒரு உண்மை புலப்பட்டது.

    கார்காத்தாள் கனிமொழியாய், கல்லாய் வந்தாளோ? கடலலையால் வரும் துயரெல்லாம் துடைத்திட, அலை மீதமர்ந்து வந்தாளோ என்று வியப்பு மேலோங்க துதிக்கத் தொடங்கினார்கள். கார்காலத்தில் விடாது பெய்ததால் சம்பவித்த இந்த அருள் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஓடி வந்து வழிபடும் ஒரு கருணை வடிவாக தாயின் இல்லமாக ஆகிவிட்டது இந்த திருக்கோவில்.

    அம்மன் அலை மேல் மிதந்து வந்ததால் இத்திருக்கோவிலில் குடிக் கொண்டவளை அலைமேல் அமர்ந்தவள் என்றும், ஆலையம்மன் என்றும் அழைத்தனர்.
    வன்னிய தேனாம்பேட்டையில் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்து ஆலயத்தில் அருளாட்சி புரிகிறாள் அருள்மிகு ஆலையம்மன். ஆரம்பத்தில் ஒரு குடில் அமைத்து பக்தர்கள் இந்த அம்மனை தரிசித்து வந்தார்கள். படிப்படிப்பாக நாளடைவில் இத்திருக்கோவில் வளர்ச்சியுற்றது. 1943-ம் ஆண்டில் உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டு கோவில் எழுப்பப்பட்டது.

    வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதை விரைந்து தீர்ப்பாள் எங்கள் தாய் ஆலையம்மன். பெற்ற குழந்தைகள் குறைதீர்ப்பதில் ஒரு தாய் எந்த அளவுக்கு முனைப்புடன் செயல்படுவாளோ அதைப் போலத் தன்னை அபயம் என்று நாடி வந்தோரின் குறைகளை தீர்த்து வைப்பதில் இப்பூவுலகத்தில் அவளுக்கு நிகர் அவளே என்று அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சியோடு சொல்கிறார்கள்.

    அர்ச்சனை பலன்

    ஆடி மாதம் முழுவதும் தேவி பூஜையை  நாம் பக்தியோடு செய்ய வேண்டும். மலர் ஒவ்வொன்றையும் அன்னையின் பாதங்களில் திருநாமாவினைச் சொல்லி சமர்ப்பிக்க வேண்டும்.

    மலர் கொண்டு அன்னையைப் பூஜிப்பதால் நமக்குக் கயிலாய நாதரின் இருப்பிடமான கயிலையில் சென்று வாழும் பாக்கியம் கிடைக்கிறது. வில்வ இலைகளால் பூஜை செய்தால் வாழ்வில் துன்பத்தையே சந்திக்க நேராது. குருக்கத்தி மலர் கொண்டு பூஜித்தால் பிரம்ம தேவனின் அருள் கிட்டி வேண்டிய வரம் அனைத்தும் பெறலாம். ஜாதி மல்லிகைப் பூவை மீகுந்த வாசமுடைய அஷ்ட கந்தம் கலந்து நூறு சகஸ்ரநாமம் சொல்லி அர்ச்சனை செய்தால் பிரம்ம தேவனுக்கு ஈடான பதவி கிடைக்கும்.

    தாமரை மலர் கொண்டு ஆயிரம் நாமம் சொல்லி அர்ச்சனை செய்தால் அம்பிகையின் திருவடித் தாமரையில் இருக்கும் பாக்கியம் கிடைக்கிறது. தூப தீபங்களைக் கொண்டு ஆராதனை செய்தால் மூன்று லோகங்களிலும் வாசம் செய்யும் பாக்கியம் உண்டாகும். செவ்வரளி மலர் கொண்டு அர்ச்சித்தால் பெரும் செல்வம் கிட்டும்.

    Next Story
    ×