search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஒப்பிலியப்பன் கோவில்
    X
    ஒப்பிலியப்பன் கோவில்

    உப்பில்லா உணவை ஏற்கும் ஒப்பிலியப்பன்

    108 திவ்ய தேசங்களில் ஒப்பிலியப்பன் கோவிலில் மட்டும் தான் உப்பில்லாத பிரசாதம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ஆயிரம் ஆண்டுகள் கடந்து மிளிரும் அழகுடன் சுத்தானந்த விமானத்துடன் கூடிய கருவறையில் திருப்பதி வெங்கடாசலபதியைப் போன்ற நின்ற திருக்கோலத்துடன் கிழக்கு திசை நோக்கி சுமார் 9 அடி உயரத்தில் ஒப்பிலியப்பன் (ஒப்பற்றவன்) எழுந்தருளியிருக்கிறார். ஸ்ரீனிவாசன், திருவிண்ணகரப்பன், உப்பிலியப்பன் எனும் திருநாமங்கள் கொண்டும் அழைக்கிறார்கள். பெருமாளுக்கு வலது புறம் கீழே மண்டியிட்டு வணங்கும் திருக்கல்யாண கோலத்துடன் அருளும் (தனி சன்னதி கிடையாது) தாயார் பூமா தேவி பூமி நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார்.

    இவர்களுக்கு இடது புறம் பெருமாளுக்கு கன்னிகாதானம் செய்து வைத்த மார்க்கண்டேய மகரிஷி அமர்ந்த நிலையில் வணங்கும் நிலையில் உள்ளார்.
    இத்தல தீர்த்தம் அகோ ராத்ர புஷ்கரணியாகும். திருப்பதி வெங்கடா சலபதி சுவாமிக்கு செய்து கொண்ட பிரார்த் தனைகளை அவரின் அண்ணனான இத்தல ஸ்ரீனிவாசப் பெருமாளிடம் செலுத்தலாம். ஆனால் இங்கு பிரார்த்தனை செய்து கொண்டு திருப்பதியில் செலுத்தக்கூடாது என்பது ஐதீகம்.

    திருவிண்ணகரம் என அழைக்கப்பட்ட இத்தலத்தினை இன்றைய காலக் கட்டத்தில் பக்தர்கள் தென்னக திருப்பதி என்றும் உப்பிலியப்பன் கோயில் என்றும் அழைக்கின்றார்கள். இத்தலம் ஸ்ரீவைணவ ஆழ்வார களால் மங்களா சாசனம் செய்யப் பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். நம்மாழ்வார், திருமங்கை யாழ்வார், பொய்கையாழ்வார், மற்றும் பேயாழ்வார் என 4 ஆழ்வார்களாலே மொத்தம் 47-பாசுரங்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட உப்பிலியப்பன் கோவிலை ஒப்பிலியப்பன் கோயில் என்றும் அழைக்கிறார்கள்

    தல வரலாறு

    இத்தலத்தில் நம்மாழ்வார் தனது திருவாய்மொழி (6-3-9) மங்களா சாசனத்தில் தன்னொப் பாரில்லப்பன் என பாடுகிறார். இதனால் தனக்கு ஒப்பார் இல்லாத அப்பன் - ஒப்பில்லா அப்பன் என்பதால் ஒப்பிலியப்பன் என்று அழைக்கப்படுகிறார். “மிருகண்ட மகரிஷியின் புதல்வரான பக்த மார்க்கண்டேயர் இத்தலத்தில் விஷ்ணு பகவானை நோக்கி தவம் இயற்ற துளசி பறிக்க சென்றார். அப்போது அந்த துளசி வனத்தில் ஒரு செடியின் அருகில் சிரித்த வண்ணம் மயக்கும் கயலுடன் வியக்கும் அழகுடன் மழலையாக மலர்ந்த மலராக பூத்திருந்த ஸ்ரீ மகாலட்சுமியை கண்ட மார்க்கண்டேயர் பாசம் பொங்கும் மனதுடன் எடுத்து வளர்த்து வந்தார்.

    காலங்கள் கடந்தன. மகாலட்சுமி மழலை மொழி தெளிந்தாள். அப்போது அவளை திருமணம் செய்து கொள்ள பெருமாள் வயது முதிர்ந்த அந்தணர் வடிவில் பங்குனி மாதம், ஏகாதசி, திரு வோணம் கூடிய சுபதினத்தில் வந்து மார்க்கண்டேயரிடம் தான் மணமுடிக்க ஸ்ரீமகாலட்சுமி யை பெண் கேட்க மார்க்கண்டேயரோ “என் பெண்ணோ சிறுகுழந்தை அவள் சமையலில் லவணம் (உப்பு) சேர்க்கக்கூட அறியா வயது.. அப்படி இருக்க எப்படி இது சாத்தியமாகும்? என்று வினவ ...

    அந்தணர் வடிவில் வந்த பெருமாள் தங்களின் புதல்வி உப்பு சேர்க்காமல் சமைத்தாலும் கூட நான் அதை அமுதமாக ஏற்றுக்கொள்வேன் என பெருமாள் பதிலுரைக்க, வந்திருப்பது மகா விஷ்ணு தான் என பின்பு அறிந்து மார்க்கண்டேய மகரிஷி பெருமாளுக்கு தன் பெண்ணை கன்னிகாதானம் செய்துகொடுத்த தலம் இதுவாகும்.

    ஆதலால் இத்தலத்தில் இன்றும் பிரசாதங்களில் உப்பு சேர்ப்பதில்லை. எனவே உப்பு சுவையை நீக்கிய பெருமாள் என்ப தால் ” லவண வர்ஜித வேங்கடேசன்” (உப்பினை விலக்கிய பெருமாள் ) என்கிறது புராணம். உப்பு இல்லாத பெருமாள் - உப்பில்லா அப்பன் - உப்பிலியப்பன் என்று அழைக்கப்படுகிறார்.
    108 திவ்ய தேசங்களில் இந்த திவ்ய தேசத்தில் மட்டும் தான் உப்பில்லாத பிரசாதம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    மார்க்கண்டேய மகரிஷி, கருடபகவான், காவிரி அன்னை, தர்ம தேவதை ஆகியோர் இத்தல பெருமாளை வணங்கி பேறு பெற்றுள்ளார்கள். இத்தலத்திலுள்ள பூமி நாச்சியார் சமேத உப்பலியப்பனை பசு நெய் தீபம் இட்டு துளசி பத்திரம் கொண்டு வழிபட வாழ்வில் வளமும், நலமும் நிறையும் என்பது ஐதீகம்.

    இக்கோவிலில் பிரார்த்தனைத் திருக்கல்யாண உற்சவம், கருடசேவை, மூலவர் திருமஞ்சனம், முதலியன வைபவங்களுக்கு பக்தர்கள் தேவஸ் தானத்தில் அதற்கான உரிய தொகை செலுத்தி செய்யலாம். ஒவ்வொரு மாதம் சிரவண நட்சத்திரத்தன்று சிரவண தீப விழா மிகச்சிறப்பாக நடைபெறும். இங்கு பங்குனி மாதம் பிரம்மோற்சவம், புரட்டாசி சனிகிழமைகளில் சிறப்பு வழிபாடுகள், ஐப்பசி மாதம் திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெறுகிறது.
    கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ தூரத்தில் ஒப்பிலியப்பன் கோவில் இருக்கிறது.

    தென்னக திருப்பதி

    தென்னக திருப்பதி என்று ஒப்பிலியப்பன் கோவில் போற்றப்பட்டு வருகிறது. இதனால் இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இக்கோவிலில் வருடப்பிறப்பன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அன்றைய தினம் முழுவதும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதேபோல் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பிரமோற்சவ விழாவில் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வார்கள். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, சிதம்பரம், போன்ற ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
    Next Story
    ×