search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தஞ்சை ஜோதி நகர் சித்தி விநாயகர் கோவில்
    X
    தஞ்சை ஜோதி நகர் சித்தி விநாயகர் கோவில்

    தஞ்சை ஜோதி நகர் சித்தி விநாயகர் கோவில்

    தஞ்சை-நாகை சாலையில் உள்ள ஜோதி நகரில் அமைந்து உள்ளது சித்தி விநாயகர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தஞ்சை-நாகை ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோவிலை படத்தில் காணலாம்.
    சித்தி விநாயகர் கோவிலில் உள்ள முருகன், வள்ளி-தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சி.
    கோவிலில் உள்ள சித்தி விநாயகர் வெள்ளி கவசத்தில்(தங்க முலாம் பூசப்பட்டுள்ளது) பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சி.
    லட்சுமி குபேரர் சன்னதியை படத்தில் காணலாம்.

    தஞ்சை-நாகை சாலையில் உள்ள ஜோதி நகரில் அமைந்து உள்ளது சித்தி விநாயகர் கோவில். கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதி கட்டப்பட்ட இந்த கோவிலில் கடந்த 2004, 2016-ம் ஆண்டுகளில் குடமுழுக்கு நடந்து உள்ளது.

    1991-ம் ஆண்டு முதன் முதலில் இந்த கோவில் ஒரு சிறிய கொட்டகையில் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த கோவிலை சுற்றி பல்வேறு சாமிகளின் சன்னதிகள் அமைக்கப்பட்டன.

    தற்போது இங்கு சித்தி விநாயகர், கல்யாண வெங்கடேச பெருமாள், லட்சுமி குபேரர், ஆஞ்சநேயர், சுப்பிரமணியர், விஷ்ணு துர்க்கை, காலபைரவர், லட்சுமி ஹயக்ரீவர், காளிங்க நர்த்தனார், லட்சுமி நரசிம்மர் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, மகாலட்சுமி ஆகிய சாமிகளுக்கும் மற்றும் அனைத்து பரிகார தலங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைந்து உள்ளன.

    தொடக்கத்தில் சிறிய கொட்டகையில் விநாயகர் கோவில் அமைந்து இருந்தாலும் ஒவ்வொரு குடமுழுக்கின்போதும் முக்கிய விழாக்களின் போதும் இந்த கோவிலில் ஒவ்வொரு சன்னதிகள் ஏற்படுத்தப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    ஜோதி நகர். ராதாகிருஷ்ணன் நகர். அழகரசன் நகர், மருதுபாண்டியர் நகர், அரி நகர். ரம்யா நகர், மருது நகர், விக்டோரியா நகர், கவுதம் நகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் நாள்தோறும் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டு வருகிறார்கள்.

    தினமும் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இந்தக் கோவில் நடை திறந்து இருக்கும்.

    திருமண தடை நீக்கும் தலம்

    இந்தக் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா, கார்த்திகை திருநாள் சொக்கப்பனை கொளுத்தும் விழா, கந்த சஷ்டி விழா, நவராத்திரி விழா, விநாயகர் சதுர்த்தி விழா, கிருஷ்ண ஜெயந்தி விழா, சனிப்பெயர்ச்சி, ராகு பெயர்ச்சி விழா, குருப்பெயர்ச்சி விழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் இங்குள்ள தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படும். சிறப்பு அலங்காரத்தில் இங்குள்ள தெய்வங்கள் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

    கந்த சஷ்டி விழாவுக்கு அடுத்த நாள் இங்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் நீண்ட நாட்கள் திருமணம் ஆகாத பெண்கள் மாலை எடுத்து வந்து சுவாமிக்கு செலுத்துவார்கள். பின்னர் அந்த மாலை திருமணம் வேண்டி வந்த பெண்களின் கழுத்தில் அணிவிக்கப்படும். இவ்வாறு திருமண தடையை நீக்குவதற்காக வந்த பெண்ணுக்கு அடுத்த கந்த சஷ்டி திருவிழாவிற்குள் திருமணம் நடைபெறும் என்பது இந்த பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மக்கள் இந்த கோவிலை திருமண தடை நீக்கும் கோவிலாக கருதி வழிபட்டு வருகிறார்கள்.

    ஆண்டு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள்

    இந்தக் கோவிலில் ஆண்டு முழுவதும் 12 மாதங்களும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சுக்லபட்ச சதுர்த்தி, வளர்பிறை சஷ்டி, கிருத்திகை, ரோகிணி, பவுர்ணமி, சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம், சுவாதி, அமாவாசை, திருவோணம் ஆகியவை இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கியமானவை ஆகும்.

    ஒவ்வொரு அமாவாசையன்றும் குபேரனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். ஐப்பசி மாத அமாவாசை அன்று சிறப்பு யாகம் நடத்தப்படும்.

    நிகழ்ச்சி தகவல்கள்

    இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் ஆண்டு முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்து அங்கு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

    அதில் ஆண்டு முழுவதும் என்னென்ன மாதம் மற்றும் கிழமைகளில் என்னென்ன நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது என்பது குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது.

    புனித நீர் வைபவம்

    இந்த கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தபோது காவிரியில் புனித நீர் எடுத்து வருவதற்காக சென்றனர். முதலில் காவிரி பாலம் அருகே புனிதநீர் எடுப்பது என முடிவு செய்தனர். பின்னர் புஷ்ய மண்டப படித்துறைக்கு சென்று அங்கு புனித நீர் எடுக்கலாம் என முடிவு செய்து அங்கு சென்றனர்.

    அங்கு சென்று புனிதநீர் எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு குளித்துக்கொண்டிருந்த திருவையாறு கோவில் யானை திடீரென திரும்பி புனித நீர் எடுக்க சென்றவர்கள் மீது தும்பிக்கையால் நீரை தெளித்து உள்ளது. புனிதநீர் எடுப்பதற்காக சென்றவர்கள் இந்த அரிய நிகழ்ச்சியை கண்டு வியந்தனர். குடமுழுக்கு விழாவை விநாயகரே வந்து வாழ்த்தியதாக இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் தெரிவித்தனர்.

    பெருமாள்-ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம்

    ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். அதைத் தொடர்ந்து சிறப்பு யாகம் நடத்தப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். அன்று இரவு கோவிலுக்குள் விநாயகர் புறப்பாடு நடைபெறும். இதேபோல் கிருத்திகை அன்று முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும் அன்று மாலையில் கோவிலுக்குள் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

    திருவோண நட்சத்திரத்தன்று இந்த கோவிலில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். அதைத்தொடர்ந்து மாலையில் கோவிலுக்குள் பெருமாள் புறப்பாடு நடைபெறும். ஒவ்வொரு அமாவாசையன்றும் இங்குள்ள காரியசித்தி ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படும். இதுபோல் சுவாதி நட்சத்திரத்தன்று ஒவ்வொரு மாதமும் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

    ராகு-கேது ேதாஷ நிவர்த்தி பெற சிறப்பு பிரார்த்தனை

    இந்த கோவிலில் காளிங்க நர்த்தனார்(கிருஷ்ணர்) பாம்பின் மீது அமர்ந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படும். அன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் குழந்தை பேறு இல்லாதவர்கள் கலந்து கொண்டு குழந்தைப்பேறு வேண்டி வழிபடுவது வழக்கம்.

    இந்த கோவிலின் நுழைவு வாயிலில் இடதுபுறம் அரச மரம் மற்றும் வேப்ப மரத்தடியில் விநாயகர் மற்றும் நாகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் வேறு எந்த திருத்தலத்திலும் இதுபோன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது இல்லை. இங்கு ராகு-கேது தோஷம் நிவர்த்தி பெற ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
    Next Story
    ×