என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கோவில்கள்
ஆடி மாத வழிபாடும்... புட்லூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் வரலாறும்...
- புட்லூர் தலத்தில் பரமேஸ்வரி அமர்ந்த புற்று தற்போதும் வளர்ந்தபடி உள்ளது.
- புட்லூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது.
சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் புட்லூர் அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலுக்கு சமீபகாலமாக வெள்ளமென பக்தர்கள் திரண்டு வந்து அம்மன் அருளினைப் பெற்றுச் செல்கின்றனர். இந்த ஆலய தல வரலாறு வருமாறு:-
பொன்மேனி என்ற பெயருடைய விவசாயி ஒருவர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். வறுமையை சமாளிக்க அவர் மகிசுரன் என்பவனிடம் தனது நிலத்தை அடமானம் வைத்து பணம் வாங்கினார். ஆனால் பாவம் நிலத்தை அவரால் திருப்பவே முடியவில்லை. கடனை உடனே திருப்பித் தருமாறு மகிசுரன் வற்புறுத்தினான். கொடுக்க முடியாமல் பொன்மேனி திணறவே, கோபம் வந்தது மகிசுரனுக்கு.
அந்த ஊரில் இருந்த பூங்காவனத்திற்குச் சென்று, அன்றைய இரவிற்குள் நிலத்தை உழுது, விதைத்து, நீர்பாய்ச்சுமாறு கட்டளையிட்டான். ஒரேநாளில் இவை அனைத்தையும் செய்வது என்றால் எளிதான காரியமா என்ன? ஆனாலும் அவனால் வேறு என்னதான் செய்ய முடியும்?சிவராத்திரி அன்று கோவிலுக்குச் சென்று சிவன் அருளைப் பெற முடியாமல் போயிற்றே என்று வருந்தியவாறே, பூங்காவனம் சென்றான் பொன்மேனி. தான் எப்போதும் வணங்கி வரும் இஷ்ட தெய்வமான கருமாரியை கரங்கூப்பி வணங்கியவாறு, நிலத்தை அந்த இரவு நேரத்தில் உழத் தொடங்கினான். திடீரென்று அவனது ஏர் கலப்பை ஏதோ ஒன்றில் இடித்தது போலத் தெரிந்தது.
என்ன அது? என்று அவன் கீழே குனிந்து உற்றுப்பார்த்தபோது, அங்கே ரத்தம் பீறிட்டு வழிந்தோடிக் கொண்டிருந்தது. பிசுபிசுவென்று வடிந்த ரத்தம், பின்னர் வேகமாகப் பீய்ச்சுவதைப் பார்த்ததும் பொன்மேனிக்கு கண்கள் இருண்டு, மயக்கம் வந்தது. அப்படியே மயக்கமானான். அப்போது ஒரு அசரீரி குரல் அவன் காதுகளில் விழுந்தது. பயப்படாதே பக்தனே! சற்றுமுன் வயதான பெரியவராக சிவபெருமானும். வயதான மூதாட்டி போல பராசக்தியாகவும் வந்தது நாங்கள்தான். நீ தண்ணீர் கொண்டு வந்ததும் சிவன் சென்றுவிட்டார். நான், இங்கே உன் நிலத்தில் மண்புற்றாக மாறினேன். அந்தப் புற்றில்தான் நீ, உன் கலப்பையால் இடித்து என்னைக் காயப்படுத்தி விட்டாய். அதனால்தான் அதில் ரத்தம் வழிந்தோடுகிறது. வலி தாங்காமல் நான் அப்படியே அங்கு படுத்துவிட்டேன்.
கவலைப் படாதே. இதனால் எதுவும் தவறாகி விடவில்லை. மாறாக நல்லதையே நீ செய்திருக்கிறாய். அதாவது, இடித்துக் காயப்படுத்தியதன் மூலம் இந்த உலகிற்கு நீ என்னைக் காண்பித்து விட்டாய். எங்களைப் பூஜிக்கும் பேற்றையும் நீ அடைந்து விட்டாய் இவ்வாறு அந்த அசரீரி சொன்னது. பொன்மேனி சுய உணர்வுக்கு வந்து, தன் காதுகளில் ஒலித்த அந்தக் குரல் பார்வதி தேவியினது என்பதைப் புரிந்து கொண்டான்.
அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதனையடுத்து ஊர் முழுவதும் இந்தச் செய்தி காட்டுத் தீயாகப்பரவியது. அங்கேயே சயன நிலையில் அங்காளம்மனைப் பிரதிஷ்டை செய்வது என ஊரார் முடிவு செய்தனர். அப்படியே அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டாள். பூங்காவனத்தில் தோன்றிய அம்மன் என்பதால் பூங்காவனத்தம்மன் என்னும் சிறப்பு பெயரும் புட்லூர் அங்காள பரமேசுவரிக்கு வழங்கப்பட்டு வருகிறது.
புட்லூர் ஆலயத்துக்கு இன்னொரு தல வரலாறும் சொல்லப்படுகிறது. ஒரு தடவை சிவனும், பார்வதியும் மேல்மலை யனூருக்கு புட்லூர் வனம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். நீண்ட தூரம் நடந்து களைப் படைந்ததால் வேப்ப மர நிழலில் கர்ப்பிணியாக இருந்த பார்வதி அமர்ந்தாள். தாகமாக இருப்பதால் தண்ணீர் வேண்டும் என்று கேட்டாள். உடனே சிவபெருமான் அருகில் இருந்த கூவம் நதியை தாண்டி சென்று புனிதநீர் எடுத்து வந்தார். அந்த சமயத்தில் பலத்த மழை பெய்து கூவம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் சிவபெருமானால் நதியை கடந்து வர இயலவில்லை. எனவே வெள்ளம் குறையட்டும் என்று சிவன் காத்திருந்தார். இதற்கிடையே பசி-தாகத்துடன் இருந்த பார்வதி அப்படியே தரையில் விழுந்து விட்டாள். அவளை சுற்றி மண் குவிந்து புற்றாக வளர்ந்து விட்டது. இந்த நிலையில் அங்கு திரும்பி வந்த சிவபெருமான், புற்றுக்குள் பார்வதி அமர்ந்து விட்டதை அறிந்து அங்கேயே நின்று விட்டார். அதை பிரதிபலிக்கும் வகையில் புட்லூர் தலத்தில் சிவபெருமான், தாண்டவ ராயன் அம்சமாக சற்று கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பதை பார்க்கலாம்.
புட்லூர் தலத்தில் பரமேஸ்வரி அமர்ந்த புற்று தற்போதும் வளர்ந்தபடி உள்ளது. இத்தல நாயகி நவக்கிரக தோஷங்களை நீக்கி, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தருகிறாள். தன்னை நம்பி வரும் பக்தர்களின் திருஷ்டியை விலக்கி, அவர்கள் மீது படிந்துள்ள பில்லி, சூனிய தோஷங் களை விரட்டுகிறாள். சிலருக்கு அவள் பாம்பாக காட்சி கொடுக்கிறாள். சிலருக்கு மூதாட்டியாக காட்சி கொடுக்கிறாள். மேலும் ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் மல்லாந்து படுத்திருப்பது போல அம்மனே இத்தலத்தில் இயற்கையாக தோன்றி உள்ளாள். இந்த அதிசய தோற்றத்தை பக்தர்கள் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் பார்த்திருக்க முடியாது. எனவேதான் புட்லூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது.
புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மன் கோவிலில் உள்ளே கர்ப்பகிரகத்துக்கு நேர் எதிரில் மண்புற்றாக மல்லாந்தவாக்கில் பூங்காவனத்தம்மன் எழுந்தருளி இருக்கிறாள். சுயம்பு புற்று முழுக்க முழுக்க மஞ்சளும், குங்குமம் துலங்க அன்னை அருள்பாலிக்கிறாள். அன்னை ஈசானிய மூலையில் காலை நீட்டி தென்மேற்கில் தலைவைத்து மல்லாந்து இருக்கிறாள். அந்த சன்னதியில் கால் வைத்த மறு வினாடி எல்லா பக்தர்களுக்கும் உடம்பில் ஒருவித சிலிர்ப்பு ஏற்படுகிறது.
மண்புற்று மாதாவுக்கு அப்பால், கருவறையில் சூலம் தாங்கிய அங்காள பரமேஸ்வரி, எலுமிச்சம்பழ மாலைகளுடன் ஏற்றமான பூ அலங்காரங்களுடன் புன்னகை துலங்க காட்சி அளிக்கிறாள். சந்நதியை விட்டு வெளியே வந்தால், பிரகாரத்தில் தென்கிழக்கு மூலையில் தலவிருட்சமாக வேம்பு இருப்பதை பார்க்கலாம்.
அதன்கீழ் சுயம்புவாக உயர்ந்திருக்கும் இன்னொரு மண்புற்று, உள்ளது. அதன் உள்ளிருக்கும் அன்னைக்கு அளிப்பதற்காக எடுத்து வரப்படும் அழுதப்பால் இந்த புற்றில் அர்ப்பணம் செய்யப்படு கிறது. இந்தப் புற்றைச் சுற்றி வரும்போதே மகளிர் தங்கள் புடவையின் முந்தானையில் இருந்து ஒரு பகுதியை கிழித்து வேப்ப மரக்கிளையில் கட்டி முடிச்சிடுகிறார்கள். வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன. இந்த அம்மனின் சந்நிதியில் ஒருமுறை காலடி எடுத்து வைத்தால் மனக்குறைகள் அகலும், தடைகள் விலகும், பில்லி, ஏவல், சூனியம், பேய், பிசாசுகள் போன்ற எவை இருப்பினும் இருந்த இடம் தெரியாமல் விலகிப் புண்ணியங்கள் சேரும் என்பது இவள் அற்புதம் அறிந்த மக்களின் மனதில் இருக்கும் மாறாத நம்பிக்கையாகும்.
இத்தகைய சிறப்புடைய புட்லூர் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை கூழ் வார்த்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.
ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகிறது. ஆடி மாதம் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்த வழிபாடு செய்வார்கள். ஆடி மாதம் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும். மேலும் கர்ப்பமாக உள்ளபெண்கள் ஆடி மாதம் இந்த கோவிலில் வந்து வழிபாடு செய்தால் பிரசவத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
ஆடி மாதம் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் நம் வேண்டுதல்கள் கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
குழந்தை வரம் கிடைக்கும்
திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம், அவர்களுடைய பிரார்த்தனை நிறைவேறும்.
செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6:30 முதல் இரவு 8 மணி வரை; மற்ற நாட்களில் காலை 6:30 முதல் மதியம் 1:00 மணி மற்றும் 2:00 முதல் இரவு 8:30 மணி வரை நடை திறந்திருக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்