search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    சமயபுரம் மாரியம்மன் திருத்தலத்தின் சிறப்பு
    X

    சமயபுரம் மாரியம்மன் திருத்தலத்தின் சிறப்பு

    • இக்கோவில் தீராத நோய்களைத் தீர்க்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது.
    • ஆகம, சிற்ப, வாஸ்து சாஸ்திரங்களுக்கேற்ப அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

    திருக்கடையூரில் மார்க்கண்டேயனின் அதீத பக்திக்கு மயங்கி, கால சம்ஹார மூர்த்தியாக அவதரித்து எமதர்மனை சிவன் அழிக்கவே, உலகில் ஜனன- மரண நிலையில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. அந்த நிலையில், எமதர்மன் சபையில் மூத்த அமைச்சராகவும், நோய்களின் அதிபதியாகவும் இருந்த மாயாசூரன் பூவுலகில் இறப்பு நின்றுவிட்ட நிலையில், நோய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தினான்.

    அதர்மம் அழிந்து, தர்மம் தழைத்தோங்க மும்மூர்த்தி களின் வேண்டுகோளுக்கிணங்க மாயா சூரனையும் அவனது சகோதரர்களையும் வதம் செய்து, அவர்களது தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றிய சிறப்புமிக்கது இக்கோவில்.இன்றும் கருவறையில் உள்ள அம்மனின் வலது பொற்கமலத் திருப்பாதம் மாயாசூரனின் தலைமீது எழுந்தருளியிருப்பதைக் காணலாம். மேலும் இக்கோவில் தீராத நோய்களைத் தீர்க்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது.

    ஆகம, சிற்ப, வாஸ்து சாஸ்திரங்களுக்கேற்ப அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது செழிப்பை யும், வளத்தையும் உணர்த்து வதாகக் கூறுவர். கோவில் முகப்பில் உள்ள நீண்ட பெருமண்டபம் பார்வதி கல்யாண மண்டபம் என்றழைக்கப்படுகிறது. மூன்று திருச்சுற்று களைக் கொண்ட இக்கோவிலின் கிழக்கிலுள்ள சன்னதித் தெருவில் அருள்மிகு விநாயகர் திருக்கோவிலும், தெற்கில் அருள்மிகு முருகன் திருக்கோவிலும் அமைந்துள்ளன. தேரோடும் வீதியின் வடக்கே மீண்டும் ஒரு விநாயகர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கில் அருள்மிகு ராஜகோபால சுவாமி பிரதிஷ்டை செய்திருப்பது மற்றொரு சிறப்பாகும்.

    திருவிழாக்கள்

    தைப்பூசத் திருவிழா, பூச்சொரி தல், சித்திரை பெருந்திருவிழா, புரட்டாசியில் நவராத்திரி பெருவிழா ஆகியவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும். தை மாதத்தில் தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. பத்தாம் திருநாளில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலிலிருந்து மாரியம்மன் சீர் பெறுதல் வைபவம் நடைபெறுகிறது. மாசி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்குப் பூச்சொரிதல் நடைபெறுகிறது. மகிசாசுரனை வதம் செய்து பாவம் தீரவும், தன் கோபம் அடங்கவும் தவம் செய்து, பச்சைப் பட்டினி விரதமிருந்து சாந்த சொரூபியாய் மாரியம்மன் என்று பெயர் கொண்டு மக்களுக்கு காட்சியளிக்கிறாள்.

    தேர்த்திருவிழா மகிமை

    பொதுவாக தேர்த்திருவிழா என்பது பிரம்மோற்சவத்தை குறிக்கும். இப்பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும் இன்பதிருவிழா என்றே கூறலாம். இவ்விழாவில் கொடியேற்று விழா, வானறு பாடகள் திருவிழா, தேர்விழா மற்றும் தீர்த்த விழா முதலிய முக்கிய திருவிழாக்கள் இத்தருணத்தில் நடைபெறும். சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் இத்தகைய வைபவங்கள் மிகச்சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாள் நடைபெறும் இவ்விழா பிரசித்திபெற்றது என கூறப்படுகின்றது.

    அன்று காலை 10 மணிக்கு அம்பாள் கோவிலில் இருந்து கேடயத்தில் புறப்பட்டு திருத்தேருக்கு வந்து சேருகிறாள். பூ மற்றும் பல்வேறு அலங்காரங்களுடன் கூடிய திருத்தேரில் அம்பாள் வீற்றிருக்க காலையில் திருத்தேர் வடம் பிடித்தல் இனிதேதுவங்குகிறது. பார்வதி மண்டபத்தின் கிழக்கில் இடப்புறம் தெற்கு நோக்கி புறப்படும் திருத்தேர், ஊரின் முக்கிய வீதி வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சியை காண கண்கோடி வேண்டும்.

    இத்தருணத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் அம்பாளின் அருளை பெற பல ஊர்களில் இருந்தும் அன்னையின் திருத்தலத்திற்கு வந்து வழிபட்டு செல்வர். மேலும் தெற்கு நோக்கிய திருத்தேர் பவனி மேற்கு வடக்கு, கிழக்கு என வீதிகளை கடந்து மீண்டும் கோவிலின் திருவீதி முன்பு திருத்தேர் நிலைக்கு வந்து சேர்கிறது. இரவு 10 மணி வரை திருத்தேரில் பொதுமக்களுக்கு அம்பாள் காட்சி தருகின்றாள். இரவு 10.30 மணிக்கு திருத்தேரை விட்டு இறங்கி இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைகிறாள்.

    அம்பாளை நேரடியாக சென்று தரிசிக்க இயலாத பக்தர்கள் திருத்தேர் உலா மூலம் தாங்கள் காணத்துடித்த அம்மனை நேரடியாக கண்டு அருள்பெறும் வாய்ப்பினை பெறுகிறார்கள். மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள். முதியவர்கள். இயலாதோர் மற்றும் பிறர் அம்பாளின் அருளை பெற இத்திருத்தேர் திருவிழா மிகச்சிறந்த வாய்ப்பினை தருகிறது. வலம் வரும் அன்னையின் அருளை மக்கள் அனைவரும் பெற்று புத்து யிருடன் தங்கள் இல்லம் நோக்கி செல்கின்றனர்.

    அன்னை நம் துன்பங்களையும், அறியாமையால் நமக்குள் இருக்கும் ஆணவத்தையும் அடியோடு அகற்றுகிறாள். திருத்தேர் பவனி வரும் அம்பாள் தன்னுடைய அருளை ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள உயிர்களுக்கு எந்தவித பேதமும் இன்றி ஏகமனதாய் வழங்குகிறாள். ஆம்னா என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. அத்தகைய ஆன்மாக்களாகிய நாம் ஒன்றுகூடி ஒருமித்த மனநிலையில் அன்னை மகமாயியை தியானிக்க நமது ஆன்மா முக்திபெறும் என்பது இதன்வழி அறியப்படுகின்றது.

    தலவிருட்சம் வேப்பமரம்

    மாரியம்மன் கோவிலின் தல விருட்சம் வேப்ப மரமாகும். சுமார் 1,000 வருடங்களுக்கு முற்பட்டதாக கருதப்படும் இம்மரம் தற்பொழுது காப்பு விண்ணப்ப சீட்டை விண்ணப்பிக்கும் முதன்மையிடமாக திகழ்கிறது.அம்பாளுக்கு பூஜைகள் நடைபெறும்பொழுது தல விருட்சத்திற்கு பூஜைகள் நிகழ்த்துவது வழக்கமான ஒன்றாகும். வேப்பமரம் என்றாலே அது மகமாரியின் மறு பிம்பமாக கருதப்படுகிறது. வேப்ப மரத்தை அம்பாளுடன் தொடர்புபடுத்தி கூறும் மரபு தமிழ்ப்பண்பாட்டில்நிலைப்பெறுடையதாக கருதப்படுகிறது.

    பல்வேறு மருத்துவ நலம் பயக்கும் இந்த வேப்ப மரத்தின் அடியில் இருக்கும் புற்றில்தான் ஆயிரம் கண்ணுடையாளின் அழகிய செப்புத்திருமேனி எடுக்கப்பட்டது. தற்பொழுது துணை சன்னிதியில் வீற்றிருக்கும் அன்னை இன்றும் தல விருட்சத்தை நோக்கியவாறே காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறாள். நலன் பயக்கும் வேப்ப மரம் அன்னையின் திருவுருவமாக வணங்கப்பட்டு வருகிறது. வேப்ப மரத்தை அன்னையின் உடலாகவும், வேப்ப இலையை மகமாரியின் அக்னி கிரீடமாகவும், வேப்பம் பூவை நெற்றியில் உள்ள வைரத்தில கத்திற்கும் தொடர்பு படுத்தி கூறுவர். எனவே சிறப்பு பெற்ற இத்தல மரம் இன்றும் பக்தர்களுக்கும் பொதுமக்களு க்கும் பெரிதும் பயன்பாடு கொண்டதாக போற்றி வணங்கப்படுகிறது.

    தானத்தில் சிறந்தது அன்னதானம்

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரோ" "பசித்தோர் முகம் பார் பரம் பொருள் அருள்கிட்டும்" என்ற வாக்கிற்கேற்ப தானத்தில் சிறந்த அன்ன தானத்திற் கென தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நன்கொடை யாளர்கள் பங்கேற்புடன் கூடிய அன்னதான திட்டம் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் 23.3.2002 முதல் தொடங்கப்பட்டு சீரும் சிறப்புமாய் அனைவராலும் பாராட்டப்படும் வகையில் நடைபெற்று வருகிறது. இதற்கென திருக்கோவிலில் அன்னதான உண்டியல் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.

    இந்த அன்னதான திட்டத்திற்கு பெறப்படும் நன்கொடைகள், உபயங்கள் அனைத்தும் இத்திட்டத்திற்கென பேணப்பட்டு வரும் தனிக்கணக்கில் சேர்க்கப்பட்டு இத்திட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்கும் வகையில் நன்கொடை வழங்க விரும்பும் ஆன்மீக பெருமக்கள், பக்தர்கள் நன்கொடையாளர்கள் ஆகிய அனைவரும் இத்திரு க்கோவிலுக்கு நன்கொடை வழங்கலாம். இத்திட்டதிற்கு செலுத்தப்படும் நன்கொடை தொகைக்கு வருமான வரி விலக்கு பெறும் வசதியும் உள்ளது.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலின் புகழ் பெற்ற ஓவியங்கள்

    ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவிலின் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதால், 2010-ம் ஆண்டு ஜூலை 5-ந் தேதி குடமுழுக்குக்கான பணிகள் தொடங்கப்பட்டு, 2017 பிப்ரவரி 6-ந்தேதி குட முழுக்கு நடத்தப்பட்டது. குட முழுக்கு நடைபெற்ற பின்னர், இரண்டாம் உள் பிரகாரப் பகுதி விசாலமான இடமாக மாறியுள்ளது.

    இப்பகுதியின் மேல்தளத்தில் மிகப்பெரிய அளவில் அம்மனின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 56 அடி நீளம், 36 அடி அகலத்தில் அம்பிகையின் விஸ்வரூபக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது. சமயபுரம் மாரியம்மனைச் சுற்றி அன்னப்பூரணி, ராஜராஜேசுவரி, கருமாரி, மூகாம்பிகை, தேவி கருமாரி, அபிராமி, மகாலட்சுமி, பிரத்யங்கிராதேவி அம்மன் ஓவியங்கள் அமைந்துள்ளன.

    தென்கிழக்குப் பகுதியில் விநாயகர் சன்னதிக்கு அருகில் மிகவும் நேர்த்தியாக, எத்திசையில் நின்று பார்த்தாலும் சிவலிங்கத்தை தரிசிக்கும் வகையில் வரையப்பட்டிருக்கும் ஓவியமும் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறது. மேலும் பக்தி கணபதி, பாலகணபதி உள்ளிட்ட 8 வகை விநாயகர்களுடன் முருகன், விநாயகர் வழிபடும் வகையில் வரையப்பட்டுள்ள ஓவியமும் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு தென் மாவட்ட ங்களில் இருந்தும், டெல்டா மாவட்ட ங்களிலிருந்தும் வருபவர்கள் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்காவல், நெ.1 டோல்கேட், கூத்தூர், பனமங்கலம் வழியாக கோவிலை வந்தடையலாம்.

    சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் போன்ற மாவட்ட ங்களில் இருந்து வருபவர்கள் முசிறி, நொச்சியம், நெ.1 டோ ல்கேட், கூத்தூர், பனமங்கலம் வழியாக சமயபுரம் வந்தடையலாம். கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை போன்ற மாவட்ட ங்களில் இருந்து வருபவ ர்கள் சத்திரம் பேருந்து நிலையம், திருவானை க்காவல், நெ.1 டோல்கேட், கூத்தூர், பனமங்கலம் வழியாக கோயிலை வந்தடையலாம்.

    சென்னை, விழுப்புரம், வேலூர், திருவண்ணா மலை போன்ற வட மாவட்ட ங்களில் இருந்து வருபவ ர்கள் பெரம்பலூர், சிறுகனூர், இருங்களூர் வழியாக சமயபுரம் கோவி லுக்கு வந்து சேரலாம்.

    தொடர்பு முகவரி

    அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,

    சமயபுரம்,

    மண்ணச்சநல்லூர் வட்டம்,

    திருச்சி மாவட்டம் - 621112.

    தொலைபேசி எண்

    0431- 2670460

    Next Story
    ×