என் மலர்
கோவில்கள்
விவசாய வரலாறு சொல்லும் கோவில்
- இங்குள்ள பெருமாள் சயனக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.
- இக்கோவில் கிருஷ்ணருக்கு விருப்பமான தளமாக விளங்குகின்றது.
மூலவர் : ரங்கநாதன பெருமாள்
அம்மன் / தாயார் : ரங்கநாயகித் தாயார்
தல விருட்சம் : புன்னாக மரம்.
தீர்த்தம் : பெண்ணையாறு
நைவேத்தியம்
ஆதி திருவரங்கம் ரங்கநாதர் சுவாமிக்கு தினமும் நைவேத்தியமாக சுத்த அன்னம் படைக்கப்படுகிறது. மற்றபடி உபயதாரர்கள் ஆலய நிர்வாக முடிவுபடி நைவேத்தயங்கள் படைக்கப்படுவது உண்டு.
ஆதிதிருவரங்கம் திருத்தலத்தில் ஆலயத்தின் தானியக்களஞ்சியம் பிரமாண்ட தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது. இந்த நெற்களஞ்சியம், மூன்று பாகமாகப் பிரிக்கப்பட்டு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டன. கீழ்ப்பாகம் நெல்தானியமும், நடுபாகம் கம்பும், மேல்பாகம் கேழ்வரகு தானியங்களும் சேமித்து வைக்கப்பட்டன. வறட்சி காலங்களில் சேமித்து வைத்து மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் அன்னதானம் செய்யவும் பயன்படுத்தப்பட்டது. நெற்களஞ்சியத்தின் மேற்பாகத்தில், அன்னலட்சுமி தாயார் சிலை சிறப்பாக அமையப்பெற்றுள்ளது.
மன்னர்கள் காலத்தில், கோவில்களை நிர்மாணித்துப் பராமரிக்க, ஒவ்வொரு கோவிலுக்கும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை மானியமாக கொடுத்தனர். அந்த மானிய நிலங்களில் விவசாயம் செய்து அதில் வரும் விளைச்சலில் ஒரு பங்கை கோவிலுக்கு வரியாக செலுத்தவேண்டும். அப்படி கிடைக்கும் அதிகப்படியான தானியங்களை சேமித்து வைக்க கோவில்களில் பெரிய களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டன.
இன்று நம் பாரம்பரிய விவசாய வரலாற்றை சொல்லும் அடையாளச் சின்னங்களாக நிற்கிறது தானிய களஞ்சியங்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த கோவில் தானிய களஞ்சியம் இன்று மக்களுக்குக் காட்சிப் பொருளாக நிற்கிறது.
ஆதிதிருவரங்கம் கோவிலின் ராஜகோபுரத்திற்கு அருகிலே அமைந்துள்ளது இந்தக் களஞ்சியம். இதன் வரலாற்றை கோவில் மண்டபத்தில் அமர்ந்தவாறு சொன்னார், அந்தக் கிராமத்தின் 91 வயதானவரான ஜெயராமன், "வட ஆற்காடு, தென் ஆற்காடு என மொத்தம் 12 காடுகள் இந்த பகுதியில் ஆதிகாலத்தில் இருந்தது. இதில் ஆதி திருவரங்கம் தென் ஆற்காடு முடியும் இடத்திலும், வட ஆற்காடு துவங்கும் இடத்திலும் இருக்கிறது.
'காடு' என்று சொல்லப்பட்ட ஊர்களை இப்போது நாடு என்று சொல்கின்றனர்.இதில், 'நடுநாடு' என்பது இந்த பகுதி. இந்த நாட்டை செழிப்பாக வைத்திருந்தது வட பெண்ணையாறுதான் (கோவிலின் வடக்கே பெண்ணையாறு செல்வதால், இதனை வட பெண்ணையாறு என்கிறார்). திருக்கோவிலூரில் இருந்து ஆதி திருவரங்கம் வரையில் கோவிலுக்கு சொந்தமாக ஆதிகாலத்தில் 400 ஏக்கருக்கு மேல் நிலம் இருந்தது. இது காலப்போக்கில் குறைந்து 100 ஏக்கராக சுருங்கிவிட்டது.
மன்னர்கள் காலத்தில் கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட மானிய நிலங்களில் விவசாயம் செய்து, அதில் கிடைக்கும் விளைச்சலில் 'ஆறில் ஒரு பங்கு' தானியத்தைக் கோவிலுக்கு வரியாக கொடுக்க வேண்டும். அப்படி கிடைக்கும் தானியங்களை சேமித்து வைப்பதற்காக மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதுதான் இந்த களஞ்சியம்.
வரி மூலமாக கிடைக்கும் நெல், வரகு, கேழ்வரகு, கம்பு மாதிரியான தானியங்களை கனத்தம் கட்டி (களஞ்சியத்தின் சேமிக்கும் பகுதியில் தடுப்பு ஏற்படுத்துவது) வைத்திருந்தனர். களஞ்சியத்தினை மூன்று அறைகளாக பிரித்து அமைத்திருக்கின்றனர். இந்த களஞ்சியத்தில் சேமிக்கும் தானியத்தைக் கொண்டு கோவில்களில் வேலை செய்பவர்களுக்கு தானியங்களை சம்பளமாக கொடுத்துள்ளனர்.
எனக்கு விபரம் தெரிந்த பிறகு களஞ்சியத்தில் எந்தவிதமான தானியங்களையும் சேமித்து வைக்கவில்லை. என்னோட தாத்தா காலத்தில் தானியங்களை இந்த களஞ்சியத்தில் சேமித்து வைத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த களஞ்சியம் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்கின்றனர். கோவில் மூலஸ்தானம் இருக்கும் பகுதிகளை தவிர மற்றப்பகுதிகள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்கின்றனர்.
இந்தக் கோவிலை வளர்த்துக்கட்டும் அளவுக்கு அந்தக் காலத்தில் நடுநாடு வளமாக இருந்திருக்கிறது. எங்கள் நாட்டின் விளைச்சலை சொல்லும் விதமாக இந்தக் களஞ்சியம் நிற்கிறது. இதில் சுமார் 5000 களம் (ஒரு களம் 12 மரக்கால்) தானியங்களை சேமித்து வைக்கலாம் எனத் தாத்தா சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.
இப்போது, களஞ்சியத்தில் சேமிக்கும் அளவுக்கு தானியங்கள் இல்லாததாலும், சரியான பராமரிப்பு இல்லாததாலும் களஞ்சியம் சிதைந்துக்கொண்டே வருகிறது. பாரம்பரிய விவசாயத்தோட அருமையை சொல்லும் இந்த களஞ்சியத்தை பாதுகாக்க அரசுகள் நடவடிக்கை எடுத்தால் பின்னாடி வர்ற சந்ததிகளுக்கு ரொம்ப பிரயோஜனமா இருக்கும்" என்று கோரிக்கை வைத்தார்.
திருத்தல வரலாறு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது ஆதிதிருவரங்கம். இக்கோவில் முதல்யுகமாகிய கிருதாயுகத்தில் அமைக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது. முதல்யுகம் மற்றும் முதலவதாரம் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் இது ஆதி(முதல்) திருவரங்கம் என வழங்கப்படுகிறது. இக்கோவில் மூன்று முக்கிய பாக்கியங்களை பக்கதர்களுக்கு வழங்குகிறது. அவை முறையே வேலை, திருமணம் மற்றும் புத்திரபாக்கியம்.
இங்குள்ள பெருமாள் சயனக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இதனை போகசயனம் எனக் கூறுகின்றனர். போகம் என்றால் மகிழ்ச்சி (சந்தோசம்) எனப் பொருள். அவரின் இந்த திருஉருவம் தமிழ்நாட்டில் உள்ள சயனக்கோலப் பெருமாள்களில் பெரியது என கூறப்படுகிறது.
அவர் ஐந்து தலைக் கொண்ட ஆதிசேஷனின் மீது படுத்துள்ளார். அவரின் தலையை ஸ்ரீதேவி மடியில் கிடத்தியிள்ளார். அவரின் கால்களில் ஒன்றை பூதேவி பிடித்துள்ளார். மற்றொரு கால் ஆதிசேஷனின் வால் மீதி வைத்துள்ளார். அவரின் தோல்பட்டையை கருடபகவான் தாங்கியிருக்கிறார். அவரின் இடது கை விரல்கள் 4 வேதங்களை குறிக்கின்றன. அவரின் வயிற்றிற்கு மேலாக பிரம்மன் காட்சியளிக்கின்றார். இந்த நான்கு வேதங்களை பிரம்மாவிற்கு எடுத்துரைப்பதாக வருணிக்கப்படுகிறது.
வேதங்களை உபதேசிப்பதால் இந்த காட்சியைக் கண்டால் உத்யோகப் பிராப்தம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும் தம்பதிசமயந்தராக பெருமாள் காட்சியளிப்பதாலும் சந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்து அவர் மனைவியுடன் சேர்ந்ததால் திருமண யோகம் கிடைக்கும் எனவும், கிருதாயுகத்தில் சுரதகீர்த்தி என்னும் தொண்டை மன்னன், நாரதரின் ஆலோசைப்படி இங்கு தன் மனைவியுடன் வந்து வணங்கியதால் நான்கு ஆண்பிள்ளைகள் பெற்றதாக வரலாறுள்ளது.
இதனால் புத்திரப்பாக்கியம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. இக்கோவில் கிருஷ்ணருக்கு விருப்பமான தளமாக விளங்குகின்றது. இங்கு கிருஷ்ணர் கொடி மரம் அருகில் உயர்ந்த இடத்தில் தனிசன்னதியில் காட்சி அளிக்கின்றார். ஒரு கையில் வெண்ணெயும் மற்றொரு கையில் உரியோடும் தோன்றுகிறார்.
பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரத்தில், நடு நாடு என்று சொல்லப்பட்ட பகுதியில் ஆதிதிருவரங்கம் உள்ளது. கிருஷ்ணர் பெயரினால் விளங்கும் காட்டில் அமைந்துள்ளதால் 'கிருஷ்ணாரண்யம்' என்றும் பெயர் பெற்றது. தமிழ் இலக்கணம் இலக்கிய முறைப்படி காடும், காட்டைச் சார்ந்த பகுதியில் இத்திருத்தலம் உள்ளதால் இந்நிலம் முல்லை நிலம் எனப்படும்.
காட்டை சார்ந்த பகுதியில் முழு முதற்கடவுள் 'கிருஷ்ணர்' இருப்பதனால், இத்திருத்தலத்தில் கிருஷ்ணருக்கு ஒரு தனி சன்னதி உண்டு, இது பலி பீடத்திற்கு பின்புறம் மேல் மாடியில் அமைந்துள்ளது. பக்தர்கள் பலி பீடத்தில் இருந்தே கிருஷ்ணரை சேவித்துக் கொள்கிறார்கள். இச்சன்னதியில் பாலகிருஷ்ணர் ஒரு கையில் வெண்ணெயும் மற்றொரு கையில் உரியோடும், ஆண் உருவோடு காட்சித் தருகின்றார்.
தென்பெண்ணை ஆற்றின் தென் கரையோரம் மேட்டுப் பாங்கான பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. இதன் தோற்ற மும் இதை உராய்ந் தாற்போல வடக்கிலும், கிழக்கிலும் நீர் வழிந்தோடும் பெண்ணை ஆற்றின் அழகும், மனதைக் கவர்ந்த கண் கொள்ளாக் காட்சியாய் இன்பம் அளிக்கிறது.
இத்தலத்தில் அமைந்துள்ள படிக்கட்டுகள்
இந்த கோவிலில் மேல்தளத்திற்கு செல்ல படிக்கட்டுகள் இருப்பது வரலாற்று சிறப்பு. மேல் உள்ள பால சன்னதிக்கு செல்வதற்கும் மற்றும் மூலவர் சன்னதிக்கு மேல் பெருமாள் மூச்சு விடும் இடம் காண் பதற்காகவும் இப்படிக் கட்டுகள் பயன்பட்டன. அதற்கு சான்றாக படிக்கட்டின் அடி பாகத்தில் யானையின் நான்கு பாத சுவடுகள் கருங்கல்லால் பதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பதிக்கப்பட்ட யானையின் பாதச்சுவடுகள் கோவில் புனர் அமைத்தல் பணிகள் நடைபெறும் பொழுது மறைந்துவிட்டது.